புதன், அக்டோபர் 22, 2008

பெத்துசாமி : தாத்தாவின் பேனா

அரசனின் வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது - எட்வர்ட்.

To hold a pen is to be at war - வால்டேர்.
--------------------------------------------------------------------

அப்பாடா. ஒரு வழியாக-நான் எழுத வந்த விஷயத்திற்கு, பஞ்ச் டயலாக் கிடைத்தாயிற்று.

அணுவைப் பயன்படுத்தி ஆக்கமும் செய்யலாம், அழிவும் செய்யலாம். அது, கிடைப்பவர் மனநிலையைப்பொறுத்தது. பேனாவும் அப்படித்தான். புரட்சியும் உருவாக்கலாம். சரோஜாதேவி கதைகளும் எழுதலாம். ஆனால், பேனா-எல்லோருக்கும் சுலபத்தில் கிடைத்துவிடும் வஸ்து. (அப்பாடா! தத்துவ டயலாக்கும் கிடைத்தாயிற்று)


பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது-தேர்வு சமயத்தில், பேனாவில் மை தீர்ந்துபோனபோது, 4 சொட்டு இங்க் கொடுத்துதவிய நண்பனை மறக்கமுடியுமா? அதே பள்ளிக்கூடத்தில், ஏப்ரல் -1 அன்று, எல்லோரின் சட்டையிலும், பேனா மசியைத் தெளித்து, அவர்களை, முட்டாள்கள் என்று நகைக்கிறோம். (லாஜிக் இடிக்கிறதே!)

நம் அன்றாட வாழ்வில்-பேனா-எவ்வளவோ அங்கம் வகித்தாலும், இன்றைய தலைமுறை இளைஞர்கள், பையில் பேனா வைத்துக்கொள்வதில்லை. வங்கியில், படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது, “எக்ஸ்க்யூஸ், மீ...பென் ப்ளீஸ்..” என்று ஸ்டைலாக பேனா கடன் கேட்கும், இளைஞனைப் பார்க்குபோது,கோபம் பொங்கிவருவதைத் தடுக்கமுடியவில்லை. வெட்டியாகப் பேசி பொழுதுபோக்குவதற்கு, கையில் செல்ஃபோன் இருக்கும்போது, உருப்படியாய் எழுதுவதற்கு ஒரு சிறிய பேனாவைப் பையில் வைத்துக்கொள்வதற்கு என்ன வலிக்கிறது? இப்போதெல்லாம் யாரும் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.எல்லாம் செல்ஃபோனின் நினைவடுக்கில்தான் பதியவைக்கப்படுகிறது. செல்ஃபோன் தொலைந்துபோனால், கூடவே, நண்பர்களின் தொடர்பும் அற்றுப்போகிறது.

முதன்முதலாக என் (அம்மா வழி) தாத்தா, எனக்கு வாங்கித்தந்த பேனா, எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் விடியற்காலை, 5 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, திருச்சி மாவட்டத்திலிருக்கும் வீரகனூர் என்னும் ஊருக்கு புறப்பட்டுப் போனோம் நானும், தாத்தாவும். அப்போதெல்லாம், வீரகனூர் பேனா என்றால், படுபிரசித்தம். சுமார் 8 மணிக்கு வீரகனூரை அடைந்த நாங்கள், ஒரு பேனா கடைக்குச்சென்றோம். அட்டா, எத்தனைவிதமான பேனாக்கள். கடை முழுவதும் ஒரே பேனா மயம், எக்கச்சக்கக் கூட்டம் வேறு. 5 ரூபாய் பேனாவுக்காக (1985-ல்) அந்தக் கடையையே புரட்டுப்போட்டார் என் தாத்தா. இந்தப்பேனாவில், முள் சரி இல்லை. இதில், நாக்(கு)கட்டை சரியில்லை. கலர் சரியில்லை. மரை சரியில்லை, மூடி சரியில்லை.கடைக்காரர்கள் மிரண்டுபோனார்கள். இறுதியாக, ஒரு மரக்கலர் பேனாவை எனக்காக தேர்வு செய்து கொடுத்தார்.ஒரு சின்னபேனாவுக்காக 1 மணி நேரம் இத்தனை ஆர்ப்பாட்டமா? தாத்தாவிடம் கேட்டேவிட்டேன்.


”ஒரு பேனாவுல எழுதக்கத்துக்கிட்டம்னா, அது நமக்கு பழக்கமாகிடும். கையெழுத்தும் அழகாகிடும். புதுப் பேனாவை வச்சி பரிச்சை எழுதியிருக்கியா?”.ரொம்பக்கஷ்டம். புதுப்பேனாவின் முள், பேப்பரைக் கிழித்துவிடும் அபாயமிருக்கிறது. இங்க் ஒழுகலாம். அது பேப்பரை நனைத்து, விடைத்தாள் திருத்துபவரை வெறிகொள்ளச்செய்யும். உண்மை. இதை நான் என் வாழ்க்கையில் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

நான் எத்தனையோ பேனாக்களை இழந்திருக்கிறேன். வாங்கியிருக்கிறேன். என்னால், ஒற்றைப்பேனாவுடன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த முடிந்ததில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த மட்டில் என் தாத்தா, ஒரே ஒரு ஜோடி பேனாவுடன் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்.அவரின் வேலை அப்படி. என் தாத்தா ஒரு பத்திர எழுத்தர். பத்திரம் எழுதும்போது அவர் தன் பேனாவின் முள்ளை 360 டிகிரியிலும் சுழற்றி, சுழற்றி எழுதுவதைப் பார்த்து, அதே போல், நானும் ஸ்டைலாக எழுதியிருக்கிறேன்.

தாத்தாவை, பேனா இல்லாமல் என்னால் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாது.தொடக்கக்கல்வி கற்ற நாட்களில், பள்ளி செல்லும் சமயங்களில், பெரும்பாலும் தாத்தாவை, பாபு டீ கடை வாசலில் பார்ப்பேன். குளித்து முடித்து, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து இருப்பார்.தோளில் வெள்ளைத்துண்டு. நெற்றியில் விபூதிப்பட்டையிருக்கும். (வைணவர் எப்படி பட்டை அணிந்திருந்தார் என்று இப்போதுதான் எண்ணிப்பார்க்கிறேன்). நடுவில்,ஒரு பெரிய குங்குமம்.சட்டைப்பையில், இரண்டு பேனாக்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நீல நிற மசியுடன், இன்னொன்று கருப்பு நிற மசியுடன். கூட யார் இருக்கிறார் என்று கூட நான் பார்ப்பதில்லை. அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் கையை நீட்டி, “தாத்தா, காசு குடு” என்று கேட்பேன்.அருகில், இருந்த மன்னாதி உடையார் ஒரு முறை சிரித்துக்கொண்டே சொன்னார். “கப்பம் வாங்க ஆளு வந்தாச்சி. குடுத்து அனுப்பு”. தாத்தாவும், புன்னகைத்துக்கொண்டே 10 பைசா கொடுப்பார்.இது தினமும் நடக்கும். அது ஒரு மகிழ்ச்சிகாலம்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன், தனது 72 ஆவது வயதில், தாத்தா இறந்துபோனார். அப்போது எனக்கு வயது 30. எங்கள் வீட்டில் நடக்கும் முதல் சாவு அது. எனக்கு அழக்கூடத் தெரியவில்லை. அல்லது அழுகை வரவில்லை.என் அண்ணன் அழுது அரற்றினார். ”இப்போ தான் டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போனன். டாக்டர் நெஞ்சு வலிக்கு ஊசிபோட்டாரு.வீட்டுக்கு வந்து படுத்ததும், கொஞ்ச நேரத்துல, செத்துட்டார்.”

தாத்தாவின் கடைசி காலம் அவ்வளவு உசிதமாக இல்லை. பத்திரம் எல்லாம் யாரும் எழுதுவதில்லை. எல்லாம், கம்ப்யூட்டர் பிரிண்ட் தான். ஆகையால் அவருக்கு அதிகம் வேலை கிடைக்கவில்லை. பெரும்பாலான சமயங்களில் அண்ணனிடம் வந்து காசு வாங்கிச் செல்வார். அப்போதெல்லாம், என் அண்ணன் என்னிடம் சொல்லி வருத்தப்படுவார்.

தாத்தாவைப் புதைக்க சுடுகாட்டுக்கு வந்தோம். தலையில், துணியைக்கட்டி, வேட்டி, சட்டையுடன் தாத்தா குழியில் இடப்பட்டார். வெட்டியான் முருகேசன், தாத்தா பையிலிருந்த காசுகளை எடுத்துக்கொண்டான். அவர் பையிலிருந்த பேனாவை அவன் எடுக்க எத்தனித்த போது, அம்மாசி அய்யா வெடித்து அழுதபடியே, அவனைப்பார்த்துக் கத்தினார். “டேய், மசுராண்டி, அந்தப் பேனாவை எடுக்காதடா. அதுதாண்டா, அவருக்கு சோறு போட்டுச்சி. அவரு அந்தப் பேனாவோட போவுட்டும் வுடுடா.” சட்டைப்பையில் பேனாவோடு தாத்தாவைப் பார்த்த நான், எதை நினைத்தேனோ தெரியவில்லை. என் கண்களில் நீர் கரகரவென சுரந்தது. சத்தமிட்டு அழ ஆரம்பித்தேன். அண்ணன் என்னை அணைத்துக்கொண்டார்.

எல்லோரும், குழியில் மண்ணைத்தள்ள ஆரம்பித்தார்கள்.

நிற்க, இது ஒரு மீள்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக