என் பெற்றோரின் திருமணமும் காதல் திருமணம்தான். ஒரே தெருவில் ஐந்தாறு வீடுகள் தள்ளி குடியிருந்த என் தாயுக்கும், தந்தைக்கும் எப்படியோ காதல் தீ பற்றிக்கொண்டது. இருவருமே ஒரே ஜாதி என்பதால் காதலுக்குத் தடையேதுமிருக்கவில்லை. என் தந்தை ஆத்தூரில் (எங்கள் ஊரிலிருந்து 30 கி.மீ. தொலைவு) ஒரு வங்கியில் பணிபுரிந்துவந்தார். காலை எட்டு மணிக்கு அலுவலகம் செல்லும் அவர் இரவு 8 மணிக்குமேல் தான் வீடு திரும்புவார்.
பெரும்பாலும் எங்கள் வாழ்க்கை (நான், என் அண்ணன், என் தங்கை) எங்கள் தாத்தா (அம்மா வழி) வீட்டில்தான் கழியும். அங்கேயே உண்டு, உறங்கி, குளித்து - பள்ளி மற்றும் ட்யூசன் செல்வோம். தந்தையை பெரும்பாலும் பார்ப்பது வார இறுதியான ஞாயிறு மட்டுமே. அவர் எங்களை கொஞ்சியது எனக்கு நினைவில்லை. எங்களுடன் விளையாடியதில்லை. ஒரு கலாச்சார கிராமத்து தந்தையாகவே வாழ்ந்து மடிந்தார்.
நம்மில் பலர் பெரும்பாலும், நமது குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. அவர்களுக்கு கதை சொல்வதில்லை. வாழ்க்கை முழுவதும் வேலை, வேலை என்று அலைந்துவிட்டு, வயதானப் பிறகு பேரக்குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள்.
நான் காலை 9 முதல் 7 மணி வரை மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்ப்பேன். பிறகு நேராக வீட்டிற்குச் சென்றுவிடுவேன். காத்திருக்கும் என் மகள்களுடன் கொஞ்சி விளையாடுவதில் உள்ள சுகமே தனி. இரவில் தூங்கும்போது என்னிடம் கதைக்கேட்பதில் சௌமியாவிற்கு (5 வயது) கொள்ளை இஷ்டம். நான் அவளுக்கு டோரா கதைகள், டாம் அண்ட் ஜெர்ரி கதைகள், ஜங்கிள் புக் கதைகள் என்று அவற்றில் இல்லாத புனைவுக்கதைகளை என்னிஷ்டம்போல் அவிழ்த்து விடுவேன். விரிந்த விழிகளுடன் சௌமியா நிறைய குறுக்குக்கேள்விகள் கேட்பாள். சலிக்காமல் பதில் சொல்லுவேன். கதை முடிந்ததும், என்னை அண்டி படுத்துக்கொண்டு, “அய்யா, நீங்க ரொம்ப நல்ல அய்யா! எனக்கு கதை சொல்றீங்க, என் கூட விளையாடுறீங்க, உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்லுவாள். எனக்கு லேசாக கண்ணில் நீர் அரும்பும். எனக்குக் கிடைக்காத அந்தப் பாசத்தை என் மகள்களுக்குக் கொடுப்பதில் எனக்கு மனதிருப்தி.
ஒருமுறை “டாம் அண்ட் ஜெர்ரி” கதையில் “Heavenly Puss" என்ற கதையைப் பார்த்தோம். சௌமியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அந்தக் கதையில் நிறைய காமெடி வசனங்களைப் புகுத்தி சொன்னேன். அவளுக்கு அது ரொம்பப் பிடித்துப்போயிற்று. அதன் பிறகு அவள் அதை ஒரு விளையாட்டாக மாற்றினாள். அதாவது, அவள் டாம் ஆகவும், நான் ஜெர்ரியாகவும் நடிக்கவேண்டும். மற்ற கேரக்டர்களை இருவரும் சமமாகப்பிரித்துக்கொண்டு சைகையில் விளையாடுவோம். பிறகு நான் டாம் ஆகி, அவள் ஜெர்ரி ஆகிவிடுவாள். அப்போது அவள் முகத்தில் வரும் சந்தோஷம் அளவிடமுடியாதது.
நான் அலுவலகம் விட்டு வந்ததும், என்னை வரவேற்கும் இன்னொரு குட்டிதேவதை தீபிகா. ஒரு வயதுதான் ஆகிறது. என்னைக்கண்டவுடன் “அய்யா” எனக்கூவி, கைகளை ஆட்டி, தலையசைத்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்துவார். நான் அவரைக் கையில் தூக்கி “தீபிகா கண்ணு, உன் பேர் என்னம்மா” என்றால், “கீ..கி.காஆஆஆஆஆஆ” என்று சொல்லிவிட்டு கீழ்வரிசை பற்கள் இரண்டையும் காட்டி சிரிப்பார். அப்படியே அவர் உதடுகளில் முத்தமிட்டு, அவரை என் தோளில் சாய்த்துக்கொள்வேன். உடனே என் மேல் இறுக்கமாய் ஒட்டிக்கொள்வார். இதுதான் சொர்க்கம்.
எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை. அப்படி கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் குழந்தைகள் வடிவில் ஒவ்வொருவர் வீட்டிலும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
குழந்தையும் தெய்வமும் ஒன்னு. அதைக் கொண்டாடணும்.
பதிலளிநீக்குஅதென்னவோ அந்தக் காலத்துலே அப்பா என்றவரை நமக்கு பயம் வரும் உருவமா எல்லோரும் மாத்தி வச்சுருந்தாங்க. நம்மை மிரட்டணுமுன்னா....'அப்பா வரட்டும்' என்ற ரெண்டு சொற்களே போதும்.
நல்லவேளை . அந்த பயச் சங்கிலி இந்தத் தலைமுறையில் அறுந்து போனது நல்லா இருக்கு.
குழந்தைகள் அழகாக இருக்காங்க. என் அன்பும் ஆசிகளும்.
நீங்களும் அன்ருக்கும் இன்றுக்கும் அவ்வளவா மாறலை. கொஞ்சம் உடம்பு வெயிட் போட்டுருக்கு. இது சகஜம். நல்லா இருங்க.
@துளசி கோபால், உங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி! ஒருவரைப் பாராட்ட பெரிய மனசு வேணும். அது உங்கக்கிட்ட நிறைய இருக்கு. உங்கள் அன்பான வார்த்தைகளில் நெகிழ்ந்து போகிறேன். வேறு வார்த்தைகள் தோன்றவில்லை. மிக்க நன்றி!
பதிலளிநீக்கு