செவ்வாய், நவம்பர் 27, 2007

அச்சம் என்பது உடைமையா?
********************************************************************************

விஞ்ஞானம் எந்த அளவு முன்னேறி வருகிறதோ, அந்த அளவுக்கு மக்களிடம் முட்டாள்தனமும் வளர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.

சமீபத்தில் என்னை எரிச்சல் அடைய வைத்த சம்பவங்கள் சில.

1. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விடுத்த அறிக்கை :"தேவே கவுடா" வும் "குமார சாமியும்" எனக்கு பில்லி சூனியம் வைத்து விட்டார்கள். எனக்கு மரணம் சம்பவித்தால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு.

படித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை. இந்த முட்டாளெல்லாம் முதல்வராக, தொடர்ந்தால், மக்களும் முட்டாள்களாகவே இருப்பார்கள். நல்லவேளை. கவுடா கவிழ்த்தார். (கவுடா-கவிழ்த்தது, சரியா என்பது வேறு விஷயம்).

இறைவனும், பேய்களும் இன்னமும் நிரூபிக்கப்படாத கற்பனைகள். இந்த கட்டுக் கதைகளை நம்புபவன் கண்டிப்பாக ஆறறிவு உள்ள மனிதனாகவே இருக்க முடியாது.

2. வட சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பேய்கள் நடமாட்டம். பள்ளி விடுமுறை:

"பள்ளிக் குழந்தைகள் உக்காரும் இடங்களில் எல்லாம் ரத்தம் வருகிறது" என்று கதை விட்டு மக்களை- மாக்கள் ஆக்கியிருக்கிறது ஒரு கும்பல்.

பள்ளிக் குழந்தைகளிடம் "பேய், பிசாசு" என்று எதுவும் கிடையாது - என்று சொல்லி அவர்களின் அறியாமையை போக்கி, நம்பிக்கை தர வேண்டிய பள்ளி நிர்வாகம், அதை விடுத்து, ஒரு பாதிரியாரைக் கொண்டு பூஜை நடத்தி "பேய்களை விரட்டிவிட்டதாக(?!)" அறிவிப்பு செய்கிறது.


"கல்வி இல்லா வீடு இருண்ட வீடென்க" - என்றார் "பாவேந்தர் பாரதிதாசன்". கல்வி என்பது அறியாமையை அகற்றும் விளக்கு.
அறியாமையை புகட்டவா கல்வி?

3. மேற்கண்ட செய்திகளை "தட்ஸ் தமிழ்" இணையத் தளத்தில் படித்தபோது, செய்திகளுக்குக் கீழ் "பின்னூட்டங்களைக்" காண நேரிட்டது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படித்த "சில அறிவாளிகள்" இவ்வாறு எழுதி இருந்தார்கள்.

"எடியூரப்பா சொல்வதை அலட்சியம் செய்யக் கூடாது. அவர் சொல்வதில் உண்மை உள்ளது. தேவே கவுடா அப்படிப்பட்ட ஆசாமி தான்" - இவ்வாறு ஒரு அறிவுச் சுடர் பிதற்றி இருந்தது - நல்ல நகைச்சுவை.

4. மேற்கு வங்கத்தில் "அபசுதீன்அலி" என்னும் காட்டுமிராண்டி "கடவுள், தன் கனவில் தோன்றி" தன் மகளை திருமணம் செய்து கொள்ள சொன்னார் என்று கூறி, தன் சொந்த மகளையே கர்ப்பமாக்கி இருக்கிறான்.

இதை ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது வருத்தமான விஷயம். மதம் சம்மந்தப் பட்ட நிகழ்வுகளை "ஊடகங்கள்" அச்சத்துடன் விமர்சனம் செய்வது, ஆரோக்கியமான போக்கு அல்ல. மத நம்பிக்கைகள், பெரும்பாலும் "மட நம்பிக்கைகள்" ஆக இருப்பதை தைரியமாக எடுத்து உரைக்க வேண்டும்.


மதத்தின் பெயரால் "அயோக்கித்தனம்" செய்வது பாதுகாப்பான விஷயம் என்றால், மதம் என்பது மனிதனுக்கு அவசியம் தானா?


இந்த பதிவை நான் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. "அன்னை மேரியின் அபூர்வ ஓவியம் இது. கவனமாய் பாருங்கள். இதை உதாசீனப் படுத்தியவர் வேலை காலி, குடும்பம் மொத்தமும் பரலோகம் போய் விட்டனர். இதை 20 பேருக்காவது அனுப்பினால், உங்கள் வாழ்வில் அதிசயம் நடக்கும். அதை விடுத்து, இந்த மின்னஞ்சலை அழித்தால்............ "

போங்கடா! நீங்களும் உங்க நம்பிக்கையும்!!!

கல்வி கண்ணைத் திறக்கும். கண்ணை மூடுமா? அறிவு அச்சம் தவிர்க்கும். அச்சம் வளர்க்குமா?