வெள்ளி, பிப்ரவரி 26, 2010

சாமியார் (போலி அல்ல!)

       சரவணன் ஜீ, எல்லோரையும் “ஜீ” என்றுதான் அழைப்பார். அப்போதெல்லாம் நான் ஹிந்தி எதிர்ப்புக்கொள்கை எதையும் கடைபிடிக்காததால், நானும் அவரை “ஜீ” என்று தான் அழைப்பேன். ஒட்டுமொத்த வகுப்புமே அவரை “ஜீ” என்றுதான் அழைக்கும்.


                                                   
                                        (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

ஜீ அவர்கள், ரஜினி-கமல் இருவருக்குமே பரம ரசிகர். இருவரில் நான் யாரைக்குறை சொன்னாலும் ஜீ க்கு கோபம் வந்துவிடும். கல்லூரி படித்த காலத்தில் நான் விஜயகாந்த் ரசிகனாக இருந்தேன். (இப்போது நான் ரசிப்பது என்னை மட்டுமே). இந்த விஷயத்தை நான் ஜீயிடம் சொன்னபோது, அவர் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. அதேபோல், ஜீ - இளையராஜாவின் பரம வெறியர். அதேசமயம் ஏ.ஆர்.ரஹமான் என்றால் எரிந்து விழுவார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமாகிக்கொண்டிருந்தார். ஜீ அவர்கள் ஹாஸ்டல் அறைகளைக் கடந்து செல்லும்போது எதாவது ஒரு ரூமில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால், அவர் அதற்குப்பின் அந்த அறை நண்பர்களிடம் நட்பு வைத்துக்கொள்ளமாட்டார்.


ஒருமுறை நான் நண்பர் எல்.எஸ்.செந்தில்குமாரின் அறையில், பம்பாய் திரைப்படப்பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த அறைக்கு வந்த ஜீயின் முகம் என்னைப் பார்த்ததும் சட்டென மாறியது. எனக்கு எதுவும் புரியவில்லை. “என்ன ஜீ நீங்க கூட இப்படியா?” என்றார் என்னிடம். “என்ன சொல்றீங்க?” என்றேன். “என்ன ஜீ, இவன் பாட்டையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கீங்க” என்றார். எனக்குப் புரிந்துவிட்டது. நான் நைஸாக ஜகா வாங்கினேன். “ஜீ, ஏ.ஆர். எப்படி அடிச்சிருக்கான்னு பாக்கத்தான், இந்தப்பாட்டைக் கேட்டுக்கிட்டிருக்கேன்” என்றேன். சமாதானமாகிவிட்டார்.


ஒரு நாள் ஜீ எல்லோரையும் அவரின் அறைக்கு அழைத்தார். அங்கே, அவரின் டேப்-ரெக்கார்டரில், இளையராஜா இசை அமைத்த “அவதாரம்” படத்தின் கேசட்டைப் போட்டார். “அரிதாரத்தைப் பூசிக்கொள்ள ஆச...” - பாட்டைக்கேட்டதும், ஜீயின் முகம் பூரிப்பானது. பெருமிதம் மிகுந்த முகத்துடன் அவர் எல்லோரையும் பார்த்தார். அப்போது எல்.எஸ். செந்தில்குமார் சொன்னான். “ஏண்டா, இந்தப்பாட்டைக்கேட்டா ஒப்பாரி மாதிரி இருக்குது இல்ல”. ஜீயின் முகம் கடுகடுத்தது. “இங்கபாரு, புடிச்சிருந்தா கேளு. இல்லைன்னா போயிடு”. எல்.எஸ்.செந்தில் போய்விட்டான் (அவன் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகன்).


தொடர்ந்து அதே பாடலில் ஜானகி ஒருவரியைப் பாடினார்..

“பாட்டுன்னு நெனைப்பதெல்லாம், இங்கு பாட்டாக இருப்பதில்ல....” - அதைத் தொடர்ந்து இளையாராஜா சொல்லுவார். “அது எம் பாட்டில்ல”...

உற்சாக மிகுதியில் ஜீ கைதட்டி என்னிடம் சொன்னார். “பாத்தீங்களா ஜீ, தலைவர் “அது எம் பாட்டில்ல”ன்னு சொல்றார். யாரைத் திட்டுறார்னு தெரியுதா?”... நான் தலையாட்டினேன்.

தற்சமயம், அமெரிக்காவில் வாழும் ஜீ யிடம் பேசியபோது, அவர் இன்னமும் இளையராஜாவின் ரசிகராகத்தான் இருக்கிறார் என்பது தெரிந்தது. அது மட்டுமல்லாமல், அவர் சில தமிழ்த்திரைப்படங்களை அமெரிக்க தியேட்டர்களுக்கு விநியோகம் செய்து சம்பாதித்தும், கைகளைச் சுட்டுக்கொண்டுமிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

ஒரு முறை எங்கள் மகாத்மா காந்தி விடுதியிலிருக்கும் வற்றாத கிணறு, கோடையில் வற்றியபோது, நாங்கள் எல்லோரும் குளிப்பதற்காக அருகிலிருக்கும் வேறு கிணறுகளுக்கு சென்றதுண்டு. அப்போது ஒருமுறை, நீச்சல் தெரியாத ஜீ கால் வழுக்கி, கிணற்றில் விழுந்துவிட்டார். அப்போது அவரைக் காப்பாற்றி கரை சேர்த்தது இளவரசன். (அவர் எப்படி இளவரசனால் காப்பாற்றப்பட்டார் என்பதை பிறிதொரு சமயம் சொல்கிறேன்). அதன்பிறகு, சில சமயம் தூக்கத்தில் கிணற்றில் மூழ்குவது போல் கனவு கண்டு, கத்திக்கொண்டு எழுதுவார்.


இவருக்கு சாமியார் என்று பெயர் எப்படி வந்ததென்றால், இவர் பெண்களை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டார். (என்னைப்போலவே).அதனால் தான், இருவருக்குமே இரண்டு பெண் குழந்தைகள்.


நாளை இடம்பெற இருப்பவர் “ரூமர்” செல்வகுமார்.இவருக்கு “சாணக்கியன்” என்றப் பட்டபெயரும் உண்டு.

வெள்ளி, பிப்ரவரி 19, 2010

பங்காரு (அடிகளார் இல்லை)

                 நண்பர் செந்திலுக்கு “பங்காரு” என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. தெரிந்த நண்பர்கள் தயவு செய்து பின்னூட்டமிடலாம்.

                                         (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

நிற்க, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் “பங்காரு அடிகளார்” அவர்களுக்கும், செந்தில்குமாருக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

தனக்கான பஞ்ச் டயலாக்கை, தானே எழுதிக்கொண்ட அமெரிக்காவாழ் இளையதளபதி விஜய் இவர் (The freeky fellow from Madras). பின்னே, மற்ற நண்பர்களுக்கு இவர் எழுதியிருக்கு பஞ்ச் டயலாக், கொலைவெறியோடு எழுதப்பட்டது போலிருக்கும். அடுத்தடுத்த அத்தியாயங்களில் நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.

ஆறு விரல் அதிர்ஷ்டக்காரர். சினிமா நடிகை,நயன்தாராவுக்கும் கையில் 6 ஆறு விரல் என்று படித்திருக்கிறேன்(ரொம்ப முக்கியம்).

மேல் படிப்புக்காக - எல்லோரும் கிராமத்திலிருந்து சென்னை செல்வது வழக்கம். இந்த கிளிஷேவை மாற்றி, சென்னையிலிருந்து புத்தனாம்பட்டி வந்து எம்.சி.ஏ. படித்த பின்நவீனத்துவ கலகக்காரர் இவர். எங்கள் வகுப்பில், ஆங்கிலத்தில் (சென்னை பாஷையிலும்) வெளுத்துக்கட்டிய சைதைப் புயல்.

1995ஆவது வருடம் என்று நினைக்கிறேன். ஒருமுறை நண்பர் எல்.எஸ். செந்தில்குமாரும், நானும் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய, சென்னை சென்றபோது - செந்திலின் சைதாப்பேட்டை, தாட்ஹண்டர் காலனி வீட்டில் தான் தங்கினோம்.அன்று பயங்கர மழை பெய்து கொண்டிருந்தது.அவரின் அம்மா சமைத்து எங்களுக்குப் பறிமாறிய அந்த சூடான, சுவையான உணவு இன்னமும் என் நினைவிலிருக்கிறது. அன்று சாயங்காலம், எங்களை ஒரு டீக்கடைக்கு அழைத்து சென்று சூடாக பஜ்ஜி வாங்கித்தந்தார் செந்தில். அமெரிக்கா சென்று, செட்டில் ஆன பிறகும் செந்தில் அந்த பஜ்ஜியை மறக்கவில்லை போலும். ஒருமுறை, செந்திலின் கில்லி எஃப்.எம்.மில்(http://www.gillyfm.com/), பாடல்களை அவர் தொகுத்து வழங்கிய ஒலிக்கோவையைக் கேட்டேன். அதில் செந்தில் இவ்வாறு சொல்லியிருந்தார்.

“ஒரு நல்ல மழை காலத்துல, சூடா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டா, ஆஹா, எவ்வளவு சூப்பரா இருக்கும்”.....

ம்...பழசை மறக்காத மனுஷன். என்ன செய்ய மச்சி? பஜ்ஜி சாப்பிட ஆசை வந்தா, சைதை வந்துட்டுப்போங்க...

கில்லி எஃப்.எம்.மில் செந்திலின் குரல் கேட்டபோது, ஒரு சிறந்த ரேடியோ ஜாக்கியை, தமிழகம் இழந்துவிட்டதை உணரமுடிந்தது. செந்தில் தன் மகள் ஸ்வாதியுடன் நடத்திய உரையாடல் கவித...கவித...(பெண்பிள்ளைகள் பெற்ற என் மாதிரி ஆட்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்).

நாளை,  ஆட்டோகிராஃபில் இடம் பெற இருப்பவர் “சாமியார்” என்ற பட்டப்பெயருடன் அழைப்படும் சரவணன் ஜீ அவர்கள்.

வியாழன், பிப்ரவரி 18, 2010

நேரு (நினைவு) கல்லூரி நினைவுகள்


        ஆயிற்று. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள். கல்லூரி நாட்களில்,நண்பர்களாய் துள்ளித்திரிந்த நாம், இன்று உலகின் ஏதேதோ மூலைகளில் குடும்பத்துடனோ, தனியாகவோ வசித்துவருகிறோம். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, தொழில் நுட்ப அறிவையும் வளர்த்துக்கொண்டு, ரிசசனையும் சமாளித்துக்கொண்டு, .....என்ன வாழ்க்கை இது...

சரி, மொக்கை போட்டது போதும். விஷயத்திற்கு வருகிறேன்.

போன வருஷம் என் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது, என் மச்சான் குணசேகர் என்னிடம் சில காகிதங்களைக் கொடுத்தான். அட, அது நாம் கல்லூரி படிப்பின் கடைசி வருடம் தயாரித்த ஆட்டோகிராஃப். ஒவ்வொருவருக்கும், பட்டப்பெயர் மற்றும் பஞ்ச் டயலாக் (பெரும்பாலும் ‘பங்க்ஸ்’ஸால் எழுதப்பட்டது) எல்லாம் கொடுத்து, படிக்க தமாஷாக இருந்தது.

என்னுடைய இந்த இணையத்தளத்தில், தினம் ஒரு நண்பரின் ஆட்டோகிராஃப் பக்கத்தை பதிவேற்றம் செய்யலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாய், ஆட்டோகிராஃபின் முதல் பக்கத்தை கீழே இணைத்துள்ளேன்.

                               (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

படித்துவிட்டு, பின்னூட்டம் (Feedback) இடுங்கள் நண்பர்களே.

இந்த ஆட்டோகிராஃப் தயாரிப்பில், பெரும் பங்கு வகித்த B.செந்தில் குமார் (பங்காரு) முதல் ஆளாய் நாளை இடம் பிடிக்க இருக்கிறார்.