புதன், மே 19, 2010

காதல் கசக்குதய்யா (அ) கிராமத்துக்காதல்

புலியூரான் (எ) ராஜேந்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஈறு (எ) அருண் தான். கபடி ஆட்டத்திலும், ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்ட ராஜேந்திரனை, முதன் முதலில் பார்த்தபோது, மிரண்டு போனேன். மலைமாடு மாதிரி வளர்த்தியாய் இருந்தான். என்னைப் பார்த்ததும், 'வணக்கண்ணே!' என்று கூறி, சல்யூட் அடித்தான்.

மூவரும் சற்று நேரம் அமைதியாய் இருந்தோம். ஈறு தான் ஆரம்பித்தான்.

"அண்ணே!.. ராஜேந்திரன் அண்ணன் லவ் பண்றார். உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற "கவிதா" வை அண்ணன் மடக்கிட்டாரு..". சொல்லிவிட்டு, கண் சிமிட்டி சிரித்தான்.

எனக்கு ஆத்திரமாய் வந்தது. +1 படிக்கும் சின்னப் பெண், 5 ஆவது கூடத் தாண்டாத இவனைப் பார்த்து எப்படி மயங்கினாள்?

ராஜேந்திரன் தொடர்ந்தான்.

"அண்ணே! நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே! புக்ல கூட வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்..எனக்கு ஒரு காதல் கவிதை எழுதிக்குடுங்க...கவிதாவுக்கு கவிதைனா உயிர்."

"முடியாது போடா" என்று கத்த நினைத்தேன்.ஆனால், ராஜேந்திரனின் புகழ்ச்சி, என்னைத் தடுமாற வைத்து விட்டது.

"இல்ல..ராஜேந்திரா..எனக்கு காதல் கவிதை எழுத வராது..இதுவரைக்கும் நான் காதல் கவிதை எழுதியதில்லை."

ஈறு இடைமறித்தான். "உங்களால முடியும்ணே..".

பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நானும் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு யோசிப்பது போல் நடித்தேன். அப்புறம், எழுத ஆரம்பித்தேன்.

கரையும், அலையும்
இருந்தால் தான் கடல்.
உயிரும், உணர்வும்
இருந்தால் தான் உடல்.
எண்ணமும், எழுத்தும்
இருந்தால் தான் மடல்.
அன்பே! நீயும், நானும்
இணைந்தால் தான் காதல்.

கவிதையை(?!) படித்து விட்டு, ராஜேந்திரன் துள்ளினான். "அண்ணே..இது தான் கவித..கவித.." என்று புல்லரித்தான். என் கையிலிருந்த கவிதை காகிதத்தை, ஏறக்குறைய உருவிக் கொண்டு போயினர் ஈறும், புலியூரானும். பிறகு தான், எனக்கு வினையே ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலையில் நான் கண்விழித்ததும், எனக்கு வசவு காத்திருந்தது.

காப்பியை என் கையில் கொடுத்தக் கையோடு, என் தாயார் சற்றுக் கோபத்துடன் ஆரம்பித்தார்.

"டேய்! பின்னாடி வூட்டு கவிதாவுக்கு, நீ லவ் லெட்டர் கொடுத்தியா?"

நான் சகலமும் நடுங்கிப் போனேன். "இது என்னடா புதுக் கரடி?"

எங்கிருந்தோ வந்து, வீட்டுக்குள் நுழைந்த என் தங்கை தான் என்னைக் காப்பாற்றினாள்.

"அம்மா! அந்த லவ் லெட்டர் எழுதுன ஆள கண்டுபுடிச்சாச்சி! புலியூரான் ராஜேந்திரன் தான் அத குடுத்துருக்கான். அவன அடிக்கிறதுக்காக, கவிதா வூட்ல எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க"

"அப்புறம் ஏன் லெட்டர்ல இருக்கறது ஒங்க அண்ணன் கையெழுத்து மாதிரி இருக்குதுன்னு சொன்னாங்க?"

நான் அந்த லெட்டரப் பாத்தேன். அது அண்ணன் கையெழுத்து இல்ல..."

அம்மா போய்விட்டார். மெதுவாக என் தங்கையிடம் சென்றேன். அவள் என்னைக் கோபத்துடம் நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனுக்கு ஏன் கவிதை எழுதிக் கொடுத்தீங்க? அவன் நீங்க எழுதிக் கொடுத்த பேப்பர்லயே, மத்ததெல்லாம் சேத்து எழுதிக்கொடுத்திருக்கான்.."

எனக்கு டென்ஷன் எகிறியது. "அடேய்..புலி.."

நேராக, பாய் வீட்டுத் திண்ணைக்குப் போனேன். அங்கே, எனக்காக ஈறு காத்திருந்தான். என்னைக் கண்டதும் அசிங்கமாய் சிரித்தான்.

"அண்ணே! கை குடுங்க...ஒங்க கவிதையை "கவிதா" சூப்பர்னு சொல்லிச்சி"..

எனக்கு வந்தக் கோபத்தில், ஈறுவின் தலையைப் பிடித்து கீழே தள்ளி, அவன் முதுகில், ஆசை தீர கும்மினேன்.

"ஏண்டா நான் எழுதிக் கொடுத்த கவிதை பேப்பர அப்படியே குடுத்தீங்க? புதுசா எழுதிக் குடுத்திருக்கலாம்ல.."

"அண்ணே..ஒங்க கையெழுத்து நல்லா இருந்துச்சி..அதனால தான் ராஜேந்திரன் அண்ணன்..."

எனக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது."போடி..புலி எழுதுன லவ் லெட்டர், அவங்க அப்பா கைல மாட்டிக்கிச்சி...அவஙக வூட்ல, புலிய தேடிக்கிட்டு இருக்காங்க.. கெடச்சான் அவனுக்கு சங்குதான்டி.."

"நெஜமாவாண்ணே சொல்றீங்க?" என்றவன், புலியூரானைத் தேடிப் போனான். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. புலியூரானைப் பார்க்க முடியவில்லை. எனக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. ஈறுவிடம் விசாரித்தேன்.

"என்னடா அருண்..புலி எங்கடா?"

"கவிதா புள்ள அப்பன், ராஜேந்திரன் அண்ணன கூப்டு திட்டிட்டார். அந்த புள்ள என்னடான்னா, ராஜேந்திரன் அண்ணன பாக்க வேணாம்னு சொல்லிடிச்சி.. அண்ணனுக்கு மனசே சரியில்லாம..வீட்டோட இருக்காரு..."

எனக்கு புலி மேல் பரிதாபம் வந்தது.

"புலி, கொட்ட எடுத்த புலி ஆயிடுச்சி போல" என்று சொல்லி என் நண்பன் செந்தில் சிரித்ததை என்னால் ரசிக்க முடியவில்லை. ஒரு மாதம் சென்றது.

கவிதாவுக்கும், ராசிபுரத்தை சேர்ந்த ஒரு வக்கீலுக்கும் திருமணம் நடந்தது. என்னால் நம்ப முடிய வில்லை. கல்யாணத்திற்கு நானும் சென்றிருந்தேன். கவிதா முகத்தில் பயங்கர வெட்கச் சிரிப்பு. எனக்கு, புலியின் ஞாபகம் வந்து போனது. இன்னும் ஒரு மாதம் போனது.

ஒரு நாள், புலியூரானும், ஒரு வாட்ட சாட்டமானப் பெண்ணும் சாலையில் சிரித்து பேசியபடி சென்றார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில், புதுத் தாலி தொங்கிக் கொன்டிருந்தது. எனக்குப் புரிந்தது. ஈறுவிடம் கேட்டபோது, உற்சாகமாய் பேசினான்.

"ஆமாண்னே.. அண்ணன் போன வாரம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. பொண்ணு வீட்லயே கல்யாணம் நடந்துச்சி...அதனால தான், யாருக்கும் சொல்ல முடியல..."

"அப்போ..அந்த கவிதாவ 'லவ்' பண்ணுனது?"

"அடப் போங்கண்ணே..அதெல்லாம் சும்மா டைம்-பாஸ்...இன்னுமா அத நீங்க ஞாபகம் வச்சுருக்கீங்க..அய்யோ...அய்யோ..."

அதற்குப் பிறகு நான் கவுஜை எல்லாம் எழுதுவதில்லை.

திங்கள், மே 10, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸாகும் பெரிய பேனர் தமிழ்த்திரைப்படங்கள் இப்போதெல்லாம் பூனாவிலும் கிட்டத்தட்ட 6 மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். தினசரி 1 காட்சி தான். மூன்று நாட்களுக்குப் பிறகு, எல்லா தியேட்டர்களிலும் படம் தூக்கப்பட்டு, எதாவது 1 தியேட்டரில் மட்டும் மேலும் 4 நாட்கள் ஓடும். இந்த புதிய உத்தி நல்ல பயன்கொடுக்கிறது என்றுதான் நினைக்கிறேன். பூனா மிகச்சிறிய நகரம் என்பதால், உங்கள் வீடு இருக்கும் 1 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு தியேட்டரில் புதிய திரைப்படங்கள் ரிலீஸாகக் கூடும். சனி, ஞாயிறு இரு நாட்களிலும் அரங்கங்கள் நிரம்பி விடுகின்றன. ஏதோ தமிழ் நாட்டில் படம் பார்ப்பது போன்ற ஒரு சந்தோசம். ஆனால், திரைப்படங்கள் அந்த இரண்டரை மணி நேரத்தில் சந்தோஷம் தருகின்றனவா என்பது வேறு விஷயம். அங்காடித் தெரு, பையா இரண்டும் வெவ்வேறு மாதிரியான திரைப்படங்கள். இரண்டுமே நான் ரசித்துப்பார்த்தேன். சுறா பார்க்க இருந்த சமயத்தில், வேட்டைக்காரனை ஞாபகப்படுத்தி என் மனைவி என்னை மருட்சியுறச்செய்யவே, முழுவதும் பின்வாங்கினேன். மனைவி சொல்லே மந்திரம் என்பதை சொன்னவர் கண்டிப்பாக ஒரு மகான்தான் என்று உணர்ந்துகொண்டேன். சகபதிவர்கள் ”டேய் சுறாடா....” என்று விமர்சனத்தில் அலறி, என் மனைவியின் கூற்றை உண்மையாகினார்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
முந்தாநாள் கூட, என் மனைவியிடம் “இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்” போலாமா என்று கேட்டபோது, பின்வாங்கினாள். நான் அப்போதே சுதாரித்துக் கொண்டிருக்கவேண்டும். ”கௌபாய்படம்” என்ற ஒரு வார்த்தையே என்னை தியேட்டருக்கு இழுக்கும் மந்திரக்கயிறு போலாகியது. தனியாகவே படம் பார்க்கக் கிளம்பிவிட்டேன். என் பெரிய மகளிடம் “ஆஃபீஸில் இரவு வேலை இருப்பதாக” பொய் சொல்லி கிளம்பினேன். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் “கராடி பாலிவுட் ஈ-ஸ்கொயர்” மல்டிப்ளக்ஸ். தியேட்டர் (ஸ்க்ரீன்னு சொல்றது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்) கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சரியாக இரவு 8:50 க்கு படம் ஆரம்பித்தது.

படத்தின் ஆரம்பக்காட்சி ரொம்ப சீரியஸாக இருந்தது. டெக்ஸாஸ் முள்ளங்கி என்ற வைரம் காணாமல் போனதற்கு சிங்காரம்(லாரன்ஸ்) தான் காரணம் என்றும், அவரைத் தூக்கில் இடவேண்டுமென்றும் காட்சிகள் ரொம்ப இழுவையாக இருந்தன. எப்படா, இந்த கோர்ட் சீன் முடியும் என்று தோன்றியது. சிங்காரத்தை தூக்கிலிடும் சமயத்தில் அவரைக் காப்பாற்றுகிறார்கள் மௌலி,இளவரசு, ரமேஷ் கண்ணா மற்றும் வையாபுரி. ஜெய்சங்கர்புரம் என்ற ஊரிலிருந்து அவர்கள் வருவதாகவும், அவர்களின் ஊரில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சிங்கம் (இவரும் லாரன்ஸ் தான்) கொஞ்ச நாட்களாக காணவில்லை எனவும், அதனால் ஊரில், இரும்புக்கோட்டை கிழக்குக்கட்டை ஆட்களின் அராஜகம் எல்லை மீறி விட்டதாகவும், எனவே, சிங்காரம் சிங்கமாக நடித்தால், எதிரி ஓடிவிடுவார்கள் என்றும், அதே சமயத்தில் ஜெய்சங்கர்புரத்தில் இருக்கும் மாரியம்மன் சிலையின் கழுத்திலிருக்கும் டெக்ஸாஸ் முள்ளங்கி போன்ற வைரத்தை சிங்காரத்திற்கு பரிசாகத் தருவதாகவும் சொல்கிறார்கள் (மூச்சு வாங்கிக்கிறேன் சாமிகளா...)

அவர்கள் சொன்னதை நம்ம்ம்ம்ம்பி ஜெய்சங்கர்புரம் செல்கிறார் சிங்காரம். அங்கே சென்று அவர் தன்னை சிங்கம் என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார். உடனே ஒரு பாட்டு. எனக்கு தலைவலி அதிகமாகியது. சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுபோல், பாதி படத்திலேயே எழுந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது. என்னதான் நடக்குமென்று பார்க்கலாமே என்று நம்பிக்கையோடு உட்கார்ந்துவிட்டேன்.

கிழக்குக்கட்டை நாசரிடமிருந்து, போலி சிங்கம் எப்படி ஜெய்சங்கர்புரத்தைக் காப்பாற்றுகிறது என்பது தான் கதை. நடுவே செவ்விந்தியர்கள் கூட்டம், புதையல் வேட்டை என்று ஜாலியான சமாச்சாரங்களும் உண்டு. அப்புறம்,ஹீரோயின்கள் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். பத்மபிரியா தான் நாயகி. “உடைந்தது அவன் மண்டை மட்டும் இல்லை” என்று அடிக்கடி அவர் லாரன்ஸிடம் சொல்லும்போதெல்லாம், தியேட்டரில் ஒரு கலீஜான கமெண்ட் கேட்டிக்கொண்டேயிருந்தது.தக்காளி சூப் எப்படி வைப்பது என்று ரஸிகர்களுக்கு சமையல் குறிப்பு தருகிறார். ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். அப்புறம் எங்கே போனார்ன்னு தெரியவில்லை. வழக்கம்போல் கிளைமாக்ஸில் ஹீரோவுடன் குதிரையில் தொற்றிக்கொள்கிறார்.

ராகவா லாரன்ஸ் முடியெல்லாம் வளர்த்துக்கொண்டு, கௌபாயாக வருகிறார். கண்களில் ஒரு காந்தம் இருக்கிறது. ரஜினிகாந்த் மாதிரி கண்ட இடத்தில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவழைக்கிறார். விஜய்க்கு சரியான போட்டி (தீக்குச்சிகளை பொருத்தவைப்பதில்).

அப்புறம் லட்சுமிராய். வில்லன் நாசரின் வலதுகண்ணாக வருகிறார். பெரும்பாலும் தொடை காட்டுகிறார். வெள்ளைக்காரி நீ என்னும் பாடலில், தன் அனாடமியை ரசிகர்களுக்குக் காட்டுகிறார். அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்த 2 விடலைகள் பேசிக்கொண்டது. ”பாத்தியா, என்னா ஃஃபிகரு, சும்மாவா டோனி கவுந்தான்?” இவர்களாவது பரவாயில்லை. ஒரு காட்சியில் வையாபுரி குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராயைப் பார்த்து சொல்கிறார். “ஒரு குதிரை, இன்னொரு குதிரை மேல சவாரி செய்யறதை இப்பதான் நான் பாக்கிறேன்”...

சந்தியா...சொல்வதற்கு எதாவது இருந்தால் தானே?

படத்தின் 2 ஆம் பாதி தான் ரசிகர்களின் ஹாஷ்ய உணர்வுக்கு சரியான தீனி போடுகிறது. செவ்விந்தியராக வரும் எம்.எஸ். பாஸ்கர், அவரின் மொழிபெயர்ப்பாளர் ஷாம்ஸ், நகைச்சுவையில் கொடிகட்டியிருக்கிறார்கள். அதுவும் ஷாம்ஸ் எம்.எஸ்.பாஸ்கரின் உடல்மொழியோடு அவர் பேச்சை மொழிபெயர்க்கும் விதம், டாப் க்ளாஸ். போய் ஒரு முறை பார்த்து ரசித்துவிட்டுதான் வாருங்களேன். நாசரின் வசன உச்சரிப்பு பல சமயங்களில் எம்.ஆர்.ராதாவை நினைவுப் படுத்துகிறது. அழுக்குப்பற்களுடன் வரும் சாய்குமாரின் தோற்றம் மட்டும் புதுசு(அவருக்கு!) . வசன உச்சரிப்பு எரிச்சலோ எரிச்சல்.

மரவீடுகள், கௌபாய் உடைகள், குதிரைகள், துப்பாக்கிச்சண்டைகள் என்று அத்தனை கௌபாய் சமாச்சாரங்களையும் தந்திருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துகள். இசை ஜி.வி. ப்ரகாஷ் குமாராம். இம்சை. பாடல்கள் ஒன்றும் தேறவில்லை என்றாலும், காட்சியமைப்பில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.

சிம்புத்தேவன், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் படத்தில் தொய்வு ஏற்படுவதும், உடனே சுவாரஸ்யமாவதுமாய் வரும் ஊசலாட்டங்களை தவிர்த்திருக்கலாம். பாஸ்மார்க், ரிவால்வர் தெரு, உஷாபுரம் (USA புரமாம்), குடி குடியை ரேப் பண்ணும், தின ஒப்பாரி, அணு குண்டு ஒப்பந்தம் என்று சிம்புத்தேவன் ப்ராண்ட் ஐட்டங்களும் படத்தில் உண்டு. சிம்புத்தேவனுக்கு ஜஸ்ட் பாஸ்மார்க் கொடுக்கலாம்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - எம்.எஸ்.பாஸ்கர், ஷாம்ஸ் இல்லாவிட்டால் டவுசர் கிழியும்.

புதன், மே 05, 2010

ஜெயகாந்தன் என்னும் அற்புத ஆளுமை

அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறை காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களை கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் - ‘இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான்’ என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது.

அதற்கப்புறம் ஒன்றுமில்லை. வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான். தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கிற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஒளியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது.. நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஒளி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வெளிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.

மேற்கண்டவை ஜெயகாந்தனின் ‘நான் இருக்கிறேன்’ என்னும் சிறுகதையின் முதலிரண்டுப் பத்திகள். இந்தப் பத்திகளை நான் பலமுறைப் படித்து, கற்பனை செய்து எழுச்சியுற்றிருக்கிறேன். ஒரு கதைக்கான களத்தை இதைவிட வேறு யாரும் எளிதாக விளக்க முடியாது என்பது என் எண்ணம்.

எனக்கு ஜே.கே.வின் கதைகளைக்காட்டிலும், அவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை விரும்பிப் படிப்பேன். அதனால் தான், அவர் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்” மற்றும் “ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” நூல்கள் எனக்கு என்றும் பிடித்தமானவை.
 
                                                        
                                          

ஞானத்திற்கு பீடம் எதற்கு?

தனக்கு ஞானபீட பரிசு அளிக்கப்படுவதைப் பற்றி கேள்விப்பட்டவுடன், திரு.ஜெயகாந்தன் அவர்கள் சொன்ன கருத்து தான், மேற்கண்ட வரி.

எழுத்தாளர் ஜெயகாந்தனை அறியாத 'தமிழ் வாசகர்கள்' மிகவும் அரிதாகத் தான் இருப்பார்கள்.தான் எழுதிய கதைகளை விட, தன்னுடைய 'முன்கோப' பேச்சுகளின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜே.கே. 'வாழ்க்கை அழைக்கிறது' என்னும் நாவல் தான், இவரின் முதல் படைப்பு. ஏறத்தாழ, பெரும்பாலான புதிய எழுத்தாளர்களைப் போலவே, இவரின் முதல் கதையும், அவரின் சொந்த வாழ்க்கைக் கதையேயாகும்.'யாருக்காக அழுதான்' என்ற நெடுங்கதை, இவருக்கு சிறந்தப் புகழைத் தேடித்தந்தது. இதை திரைப் படமாக்க, பலர் முயன்றனர். அதில், நடிகர் 'சந்திர பாபு'வும் ஒருவர். சினிமாவுக்காக கதையின் முடிவை மாற்றி அமைக்க முடிவு செய்த இயக்குனர் (பெயர் ஞாபகமில்லை) அதை ஜே.கே விடம் சொன்னார்.

ஜே.கே. எழுதியக் கதைப்படி, எதற்குமே அழாத நாயகன் சோசப், தான் குற்றமற்றவன் என்பது நிரூபணம் ஆனதும், வாய் விட்டு கதறி அழுவான். அத்துடன் கதை முடிந்துவிடும். ஆனால், சினிமாவாக எடுக்கும் போது, நாயகன் அழுது கொண்டே இறந்து விடுவதாகக் காட்டினால், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த முடியும் என்று இயக்குனர் விரும்பினார்.

இவ்வாறு கதையின் முடிவை மாற்றிக் கொள்ளலாமா? என்று ஜே.கே. விடம் கேட்டார் அந்த இயக்குனர். 'ஓ, மாற்றிக் கொள்ளுங்கள். கூடவே ஒரு சின்ன திருத்தமும் செய்து விடுங்கள்.' என்று சொன்ன ஜே.கே. 'படத்தின் தலைப்பான ’யாருக்காக அழுதான்’ என்பதை 'யாருக்காக செத்தான்' என்று மாற்றுங்கள். மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்று கடுங்கோபத்துடன் கூற, அதிர்ந்து போன இயக்குனர், துரிதமாக நடையைக் கட்டிவிட்டார்.

ஜே.கே.வின் பெரும்பாலான கதைகள், முரட்டு மனிதர்களின் 'மென்மையான மனம்' குறித்தே அமைந்துள்ளது. சினிமாத் தனமான கதாபாத்திரங்கள், கதைக்களம், முடிவு என எழுதப்பட்ட இவரின் கதைகள், பெரும்பாலும் 'சென்டிமென்ட் டைப்' களே என்பது சில இலக்கியவாதிகளின் கருத்து. தனது இளம் வயதில் (ஏன், இப்போதும் கூட!) தன் மனதுக்குப் பட்ட விஷயங்களை, வெளிப்படையாக பேசி விடுவார் ஜெயகாந்தன். சம்மந்தப்பட்டவர்களை இது பாதிக்கும் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்.

ஒரு முறை, தன் நண்பர்களுடன் ஒரு மதுக் கடையில் அமர்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தார் ஜே.கே. அப்போது, நண்பர்களில் ஒருவர், அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு மேடை நாடக கலைஞரைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். "அடடா! என்ன அற்புதமான நடிகர். தன்னை அந்த கதா பாத்திரமாகவே மாற்றிக் கொள்பவர். ஒரு முறை, காந்தியாக நடிக்கும்போது, உண்மையில் மொட்டை அடித்துக் கொண்டார். என்ன ஒரு தொழில் பக்தி.."

இதைக் கேட்டதும் ஜெயகாந்தன் இவ்வாறு சொன்னார்.

"அப்படியா! அப்படி என்றால், "ஷேக் சின்ன மெளலானா" வேஷம் கட்டினால், உண்மையில் 'சுன்னத்' செய்து கொள்வாரா?"
 
நான் பிறப்பதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திக்கொண்ட இந்தக் கிழட்டுச் சிங்கம் தான் என் ஆதர்ச எழுத்தாளர்.