செவ்வாய், ஜூன் 15, 2010

கால எந்திரம் என்னும் அதிசயம்

எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை, காலத்தில் பின்நோக்கிப் பயணம் என்பது இயலாத காரியம். ஏனெனில், காலம் என்பது தட்டையானது, முன்னோக்கி மட்டும் நகரக்கூடியது என்கிறார். மேலும், தாத்தாவுடன் முரண்பாடு (?!) (GrandFather Paradox) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, மிஸ்டர் எக்ஸ், காலத்தில் பின்நோக்கிப் பயணப்படுகிறார். அங்கே அவர்  தனது தாத்தாவைக் கொன்று விட்டு, நிகழ்காலத்திற்குத் திரும்புகிறார். எனில், மிஸ்டர் எக்ஸ்ஸின் அப்பா எப்படி உருவாகியிருக்க முடியும்? மிஸ்டர் எக்ஸ் தான் எப்படி பிறந்திருக்கமுடியும்?
இந்தப்பிரச்சினைக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி இகர் நோகிகோவ், இப்படி பதில் அளிக்கிறார்.”இறந்த காலத்திற்கு சென்று ஒருவர் வரலாற்றை மாற்ற முடியாது. அப்படி அவர் அதை மாற்றினால், அவரால் நிகழ்காலத்திற்குத் திரும்ப வரமுடியாது.” இந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் என்ன ஆகும் என்பதை யாராவது இறந்த காலத்திற்கு சென்று வந்தால் தான் சொல்லமுடியும். மேலும், கால எந்திரம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று சில விஞ்ஞானிகள் குழுவும், முடியும் ஆனால் நிறைய செலவாகும் என்று மற்றொரு குழுவும் தெரிவிக்கிறார்கள்.எது எப்படியோ, காலத்தில் பயணம் செய்வது என்பதே ஒரு சந்தோஷமான, ஆச்சர்யமான கற்பனைதான். சிறுவயதில் நான் லயன் காமிக்ஸில் வரும் ஆர்ச்சி கதைகளில், ஆர்ச்சி என்னும் இயந்திர மனிதன், தன் நண்பர்களுடன் காலத்தில் முன்நோக்கியும், பின்னோக்கியும் பயணம் செய்வது, அங்கே சாகஸங்கள் புரிவது போன்ற சம்பவங்களப் படித்து விட்டு, பலமுறை கற்பனைகளில் ஆழ்ந்து, காந்தி வாழ்ந்த காலத்திற்கு நான் செல்வது போலவும், அங்கே கோட்ஸேவைக் கண்டுபிடித்து, காந்தியைக்கொல்லாமல் செய்யும்படி நான் சாகஸம் புரிவதுபோலவும் கற்பனை செய்து, அதைக் கதையாகக் கூட எழுத முயன்றிருக்கிறேன்.

தமிழில் கால எந்திரம் பற்றிய திரைப்படம் எதுவும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்தத் திரைப்படம் ஒன்று தமிழில் “அபூர்வ சக்தி 365” என்றப் பெயரில் வெளியானது. அதில், பாலகிருஷ்ணா கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் கால எந்திரம் மூலம் பயணம் செய்வார். கடந்த காலம் என்பது ராஜாக்களின் காலமாகவும், அங்கே இளவரசியுடன் காதல், அரசருடன் சண்டை என்று திரைக்கதை செல்லும். பெரும்பாலும், கால எந்திரத்தில் பயணம் செய்யும் ஹீரோ, தவறாமல் ஹீரோயினுடன் பயணம் செய்வதுதான் உசிதம். அப்போதுதான் அதில் சுவாரஸ்யமிருக்கும். கூடவே ஒரு காமெடியனும் இருந்துவிட்டால் - பலே!. இந்தப்படத்திலும், இதே மாதிரி தான் ஹீரோ இறந்த காலத்தில் வந்து லூட்டி அடிக்கிறார். பிறகு, எதிர்காலத்திற்கு செல்லுகிறார்கள். அங்கே, பூமியில் ரசாயனமாற்றம் ஏற்பட்டுவிட்டதால், மக்கள் எல்லோரும் பூமிக்கு அடியில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வந்து வில்லனைப்பழி வாங்குகிறார் பாலகிருஷ்ணா. அந்த வயதில் எனக்கு இந்தப்படம் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 3 முறை அந்தப்படத்தைப் பார்த்தேன்.ஆங்கிலத்தில் எத்தனையோ படங்கள், கால எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றுள் என்னைக்கவர்ந்தப் படம் “Time Machine (2002)". இறந்துபோன காதலியை, இறந்தகாலத்திற்குச் சென்று, அவளைக் காப்பாற்ற முயல்கிறான் நாயகன். ஆனால், அதிலும் அவள் இறந்துபோகிறாள். இங்கே, ரஷ்ய விஞ்ஞானி இகர் நோகிகோவின் தத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். அதாவது, விதியை மாற்ற முடியாது. பிறகு, நிகழ்காலத்திற்கு வரும்போது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டு, எதிர் காலத்திற்கு செல்கிறான் நாயகன். எதிர்காலத்திலும் கூட வெவ்வேறு ஆண்டுகளுக்குப் பயணப்படுகிறான் . முடிவில், எதிர்காலத்திலேயே தங்கிவிடுகிறான்.

தமிழில் இப்படியொரு சினிமாவை எடுக்கும் ஆற்றல் சிம்பு தேவனுக்கு இருப்பதாகக் கருதுகிறேன். இறந்தகாலம் மற்றும் எதிர்காலக் காட்சிகளில் தன் பின்நவீனத்துவ உரையாடல்கள் மூலம் அவர் வசனத்தில் பின்னி எடுக்கலாம்.எத்தனையோ படங்கள் கால எந்திரத்தைப் பற்றி நான் பார்த்திருந்தாலும், இன்னும் எத்தனைப் படங்கள் இதே தளத்தில் வந்தாலும் சலிக்காமல் பார்ப்பேன்.

(தகவல் உபயம் : விக்கி பீடியா)

திங்கள், ஜூன் 14, 2010

தந்தையின் அன்பு எதுவரை?

என் பெற்றோரின் திருமணமும் காதல் திருமணம்தான். ஒரே தெருவில் ஐந்தாறு வீடுகள் தள்ளி குடியிருந்த என் தாயுக்கும், தந்தைக்கும் எப்படியோ காதல் தீ பற்றிக்கொண்டது. இருவருமே ஒரே ஜாதி என்பதால் காதலுக்குத் தடையேதுமிருக்கவில்லை. என் தந்தை ஆத்தூரில் (எங்கள் ஊரிலிருந்து 30 கி.மீ. தொலைவு) ஒரு வங்கியில் பணிபுரிந்துவந்தார். காலை எட்டு மணிக்கு அலுவலகம் செல்லும் அவர் இரவு 8 மணிக்குமேல் தான் வீடு திரும்புவார்.


பெரும்பாலும் எங்கள் வாழ்க்கை (நான், என் அண்ணன், என் தங்கை) எங்கள் தாத்தா (அம்மா வழி) வீட்டில்தான் கழியும். அங்கேயே உண்டு, உறங்கி, குளித்து - பள்ளி மற்றும் ட்யூசன் செல்வோம். தந்தையை பெரும்பாலும் பார்ப்பது வார இறுதியான ஞாயிறு மட்டுமே. அவர் எங்களை கொஞ்சியது எனக்கு நினைவில்லை. எங்களுடன் விளையாடியதில்லை. ஒரு கலாச்சார கிராமத்து தந்தையாகவே வாழ்ந்து மடிந்தார். 

நம்மில் பலர் பெரும்பாலும், நமது குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. அவர்களுக்கு கதை சொல்வதில்லை. வாழ்க்கை முழுவதும் வேலை, வேலை என்று அலைந்துவிட்டு, வயதானப் பிறகு பேரக்குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள்.


நான் காலை 9 முதல் 7 மணி வரை மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்ப்பேன். பிறகு நேராக வீட்டிற்குச் சென்றுவிடுவேன். காத்திருக்கும் என் மகள்களுடன் கொஞ்சி விளையாடுவதில் உள்ள சுகமே தனி. இரவில் தூங்கும்போது என்னிடம் கதைக்கேட்பதில் சௌமியாவிற்கு (5 வயது) கொள்ளை இஷ்டம். நான் அவளுக்கு டோரா கதைகள், டாம் அண்ட் ஜெர்ரி கதைகள், ஜங்கிள் புக் கதைகள் என்று அவற்றில் இல்லாத புனைவுக்கதைகளை என்னிஷ்டம்போல் அவிழ்த்து விடுவேன். விரிந்த விழிகளுடன் சௌமியா நிறைய குறுக்குக்கேள்விகள் கேட்பாள். சலிக்காமல் பதில் சொல்லுவேன். கதை முடிந்ததும், என்னை அண்டி படுத்துக்கொண்டு, “அய்யா, நீங்க ரொம்ப நல்ல அய்யா! எனக்கு கதை சொல்றீங்க, என் கூட விளையாடுறீங்க, உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்லுவாள். எனக்கு லேசாக கண்ணில் நீர் அரும்பும். எனக்குக் கிடைக்காத அந்தப் பாசத்தை என் மகள்களுக்குக் கொடுப்பதில் எனக்கு மனதிருப்தி.


ஒருமுறை “டாம் அண்ட் ஜெர்ரி” கதையில் “Heavenly Puss" என்ற கதையைப் பார்த்தோம். சௌமியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அந்தக் கதையில் நிறைய காமெடி வசனங்களைப் புகுத்தி சொன்னேன். அவளுக்கு அது ரொம்பப் பிடித்துப்போயிற்று. அதன் பிறகு அவள் அதை ஒரு விளையாட்டாக மாற்றினாள். அதாவது, அவள் டாம் ஆகவும், நான் ஜெர்ரியாகவும் நடிக்கவேண்டும். மற்ற கேரக்டர்களை இருவரும் சமமாகப்பிரித்துக்கொண்டு சைகையில் விளையாடுவோம். பிறகு நான் டாம் ஆகி, அவள் ஜெர்ரி ஆகிவிடுவாள். அப்போது அவள் முகத்தில் வரும் சந்தோஷம் அளவிடமுடியாதது.


நான் அலுவலகம் விட்டு வந்ததும், என்னை வரவேற்கும் இன்னொரு குட்டிதேவதை தீபிகா. ஒரு வயதுதான் ஆகிறது. என்னைக்கண்டவுடன் “அய்யா” எனக்கூவி, கைகளை ஆட்டி, தலையசைத்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்துவார். நான் அவரைக் கையில் தூக்கி “தீபிகா கண்ணு, உன் பேர் என்னம்மா” என்றால், “கீ..கி.காஆஆஆஆஆஆ” என்று சொல்லிவிட்டு கீழ்வரிசை பற்கள் இரண்டையும் காட்டி சிரிப்பார். அப்படியே அவர் உதடுகளில் முத்தமிட்டு, அவரை என் தோளில் சாய்த்துக்கொள்வேன். உடனே என் மேல் இறுக்கமாய் ஒட்டிக்கொள்வார். இதுதான் சொர்க்கம்.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை. அப்படி கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் குழந்தைகள் வடிவில் ஒவ்வொருவர் வீட்டிலும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

செவ்வாய், ஜூன் 08, 2010

சாருவின் குத்தாட்டம்

மிஷ்கினின் “நந்தலாலா” படத்தை சிலாகித்து இடுகை போட்ட சாநிக்கு, மிஷ்கின் காட்டியிருக்கும் நன்றி தான், யுத்தம் செய் படத்தில் நீது சந்திராவுடன் சாநி போட்டுக்கொண்டிருக்கும் குத்தாட்டம். நடக்கட்டும். இலக்கியவெறி தலைக்கு ஏறி, உ.த.எ. வையும், மன்னிப்புக்கேட்க வைத்த ஸ்டார் டிவி நீயா,நானா டைரக்டர் ஆண்டனியையும் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் சாநிக்கு இது ஒரு உடனடி நிவாரணமாக இருக்ககூடும்.


நிற்க, சாநி பரிந்துரை செய்து கொண்டிருக்கும் “அறிவுப்புத்திரன்” என்னும் இணையத்தளத்தைக் காணவில்லை. உடற்பயிற்சியிலும், அடிதடியிலும் ஆர்வம் கொண்ட ஸ்டீபன் ராஜ், ஏன் இந்த தளத்தை நீக்கிவிட்டார் என்று தெரியவில்லை. சாநியால் உத்தம தமிழ் எழுத்தாளர் -2 (உ.த.எ.1 - சுந்தர ராமசாமி) என்று அழைக்கப்படும் ஜெயமோகன் பற்றியும், அவர் குடும்பம், மகன் பற்றியும் ஸ்டீபன் எழுதியிருந்த விதம் கொஞ்சம் கூட ரசிக்கமுடியவில்லை. தனிமனித வக்கிரத் தாக்குதலின் உச்சம். 


புளிப்பெடுத்துப்போன இந்துத்துவா, கடவுள் விஷயத்தில் இரட்டை நிலை (Agnostic), காந்தியின் புகழ் பாடுதல் தவிர ஜெயமோகன் ஒரு சிறப்பான எழுத்தாளர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.பிரச்சார நெடியில் நீட்டி முழக்கி எழுதப்படும் அவரின் கட்டுரைகளை, மம்மி படத்தில் வில்லன் வாயிலிருந்து கிளம்பும் குளவிகளுக்கு ஒப்பிட்டு சாநி எழுதியதை நான் ரசித்தேன். உண்மையில், ஜெயமோகனின் புனைவுகளுக்கு முன் சாநியின் புனைவுகள் மண்டியிடவேண்டும். சரோஜாதேவி கதைப் புத்தகங்களுக்கு இணையாக சாநி தன் எழுத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள், படிக்கச்சகிக்கதக்கதல்ல.

சாநியின் எழுத்தில் சுவாரஸ்யம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்,அவற்றில் இலக்கிய இன்பம் கிட்டுவதில்லை. தான் அணியும் ஜட்டிகள் குறித்தும், ஷூக்கள் குறித்தும் இவர் எழுதும் கட்டுரைகள் எந்த விதத்தில் இலக்கியத்தில் சேர்த்தி என்பதை ஸ்டீபன் தான் சொல்லவேண்டும்.

முன்பொருமுறை, ஒரு பதிவர் சாநி தன் மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்றார் என்று எழுதியதைப் படித்துவிட்டு ஆங்காரமாய் ஆடிய சாநி, இன்று ஸ்டீபன் ஜெயமோகனின் மகன் பைத்தியக்காரன் என்றும், ஜெமோ தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறவர் என்றும் எழுதியிருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறார். ஆக, ஜெயமோகன் பற்றி சாநி மனதில் நிலவும் வன்மத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஒருவேளை இந்தமாதிரி இணையத்தளங்களை தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நித்யானந்தன் விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை மக்கள் மறக்கும் வண்ணம் திசைதிருப்ப முயல்கிறாரோ என்று தோன்றுகிறது.

இப்படி நான் சொல்வதன் மூலம் நான் ஜெமோவுக்கு சொம்பு தூக்குவதாக யாராவது சொன்னால், சந்தோஷம். நர்சிம்-சந்தனமுல்லை விவகாரத்தில் எல்லோரும் தலையிட்டு ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைச் சொல்லி பஞ்சாயத்து செய்தார்கள். அறிவுப்புத்திரன் - சாநியின் இழிசெயலை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை இரண்டு எழுத்தாளர்களும் பேசித்தீர்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களோ? இல்லை, எழுத்தாளர்களிடையே சண்டையும், சச்சரவும் சகஜம் என்று விட்டுவிட்டார்களோ?

இதையெல்லாவற்றையும் விட, ஜெமோ இதையெல்லாம் கண்டுகொள்ளாலும், பதிலுக்கு வன்மம் நிறைந்தக் கட்டுரைகள் எழுதாமலும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாவம் சாநி, இனிமேல் சினிமாவில் பிசியாகிவிடுவார். அதனால் அடிக்கடி இணையத்தில் எழுதமுடியாமல் போகலாம். அப்போது, அவரின் போலீஸ் ரசிகர் அவரை லாக்கப்பில் தள்ளி கையில் லேப்-டாப் கொடுத்து எழுதச்சொல்லுவார். அப்போது சாநி என்ன செய்வார்?

ஹி.. ..ஹி.... நிற்க, சாநியின் குத்தாட்டம் காண நான் ஆவலுடனிருக்கிறேன்.

திங்கள், ஜூன் 07, 2010

சினிமா என்னும் கானல் நீர்

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள், நான் ஒரு எதிர்பாராத சினிமாச் சுழலில் சிக்கிக்கொண்டேன். என் அண்ணனுடைய பிரிண்டிங் ப்ரஸில்தான் அந்த துக்க  சம்பவம் நேரிட்டது.

டாக்டர் சுந்தர்காந்த் (நிஜப்பெயர் வேண்டாமே!) என் எதிரில் வந்து நின்றார்.

”வாங்க சார்” என்று வரவேற்றேன். “நீங்க சுவாமி அய்யப்பன் படம் பாத்தீங்களா? என்றார்.

”இல்லை சார்.”

“அந்தப்படத்துல நான் நடிச்சிருக்கேன். சபரிமலைக்குப் போகும்போது, அந்தப்படத்தோட டைரக்டர் என்னை நடிக்கச்சொன்னார். குருசாமியா நடிச்சிருக்கேன்”.

“ஆமா பெத்து. நான் கூட அந்தப்படம் பாத்திருக்கேன். அதுல சார் நடிச்சிருக்கார்.” - என் நண்பன் செந்தில் சொன்னான்.

சற்றே பெருமிதமேறிய முகத்துடன் என்னைப்பார்த்தார் டாக்டர். 

“இப்போ கூட அன்னக்கிளி சொன்னக்கதை-ங்கிற படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். சத்யராஜ் படம். நான் ஒரு வில்லன் ரோல்-ல வரேன்.”
”அப்படியா சார்” - முகத்தில் ஆச்சர்யம் காட்டினேன்.

டாக்டர் முகத்தில் பெருமிதமும், லேசான சிரிப்பும் தென்பட்டது.

டாக்டர் - என்றால் அவர் எம்.பி.பி.எஸ். படித்தவர் இல்லை. ஏதோ ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக சேர்ந்து, தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் டாக்டர் பரிந்துரைக்கும், மாத்திரைகளையும், ஊசியையும் கொடுத்து அனுபவப்பட்டவர். அப்படியே ஒரு சுபயோக சுபதினத்தில் டாக்டரானார்.

கிராமத்தில் இவர் ஒரு மொபைல் டாக்டர். தன் லெதர் மருந்துப் பையை சைக்கிளில் மாட்டிக்கொண்டு, யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், ஊரில் விசாரித்துக்கொண்டு வீடு தேடி சென்று ஊசி போடுவார். பணம் இருந்தால் கொடுக்கலாம். இல்லையென்றால் அக்கவுண்ட்டில் எழுதிக்கொள்வார்.

”சத்யராஜிக்கு ஒரு தடவ, சரியான தலைவலி. நான் ஒரு ஊசி போட்டேன். ஒடனே சரியாயிடுச்சி. நீங்க டாக்டரான்னு ஆச்சர்யப்பட்டார்.”
எனக்குப் பெருமிதமாக இருந்தது. செந்தாரப்பட்டி என்னும் சிறிய கிராமத்திலிருந்து போய் சினிமாவைக் கலக்குகிறாரே.

அப்புறம்தான் அவர் தன் சுயரூபத்தைக்காட்ட ஆரம்பித்தார்.

”என் கிட்ட கூட ஒரு கதை இருக்குது. கேளேன்.” என்றார்.

”சொல்லுங்க, சொல்லுங்க” என்றபடியே என் நண்பன் செந்திலைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து பல்லைக்கடித்தான். ஓடிப்போகும்படி சைகை செய்தான்.

நான் கதைக் கேட்பதில் ஆர்வமானேன்.

ஒரு சின்ன கிராமம். அதுல ஒரு ஜமீன்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள். டவுன்ல படிச்சிட்டு இருக்கிற அந்த ஜமீன்தார் பையன் லீவுல ஊருக்கு வர்றான். வந்த எடத்துல அவங்க தோட்டத்துல களை வெட்ட வந்த ஹீரோயினி(?!) மேல அவனுக்கு காதல் வருது. இங்க ஒரு சாங் வைக்கிறோம். அந்தப் பெண்ணைக் கிண்டல் பண்ணி ஹீரோ பாடற சாங்.

”கன்னிப்பொண்ணு மீனா, களைவெட்டப் போனா....” - ராகமெடுத்துப் பாட ஆரம்பித்தார்.

முழுப்பாட்டும் ஓடிக்கொண்டிருந்தது. செந்தில் சொன்னதன் அர்த்தம் அப்போது தான் புரிந்தது.

அப்புறம் ரெண்டு பேருக்கும் காதல் ஆயிடுது. இத தெரிஞ்சப் பண்ணையார், மகனைப் படிக்க மறுபடியும் டவுனுக்கு அனுப்பிடுறார். இங்க ஒரு பேதாஸ்  சாங் வைக்கிறோம்.

“கண்மணி ராஜா, கலங்குது ரோஜா” - மீண்டும் முழுப்பாடல்.

வாழ்க்கை நொந்தேன். திடீரென்று வந்த என் அண்ணன் தான் என்னைக்காப்பாற்றினார். “இன்னும் சாப்பிடலயா? வீட்டுக்குப்போய் சாப்பிடு” என்றார். 

“நான் வரேன் சார்” என்று நழுவினேன். செந்தில் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்தான்.

ஒவ்வொரு முறை நான் ஊருக்குப்போகும்போதும், டாக்டர் என்னைப் பார்த்துவிடுவார். “இப்போ ஒரு படத்துக்கு டிஸ்கஷன் நடந்துகிட்டிருக்கு. ப்ரொடியூஸரும் கெடச்சிட்டார். நான் வில்லன் ரோல் பண்றேன்” என்பார்.

சென்ற ஆண்டு நான் ஊருக்குப் போனபோது, ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை சொல்லி ஆச்சர்யப்பட்டார்கள்.

“டாக்டர் வீட்டுத் தோட்டத்துல ஷூட்டிங் எடுத்தாங்க. அவர் ஹீரோ,-ஹீரோயின் கூட, தென்னந்தோப்புல குத்தாட்டம் போட்டார். ஊரே அங்க தான் இருந்தது.”

இந்த முறை ஊருக்கு சென்றபோது டாக்டரைப்பார்த்தேன். அதே சைக்கிளில், மருந்துப்பையுடன் ஊருக்குள் சென்றுகொண்டிருந்தார்.

“சார். எப்படி இருக்கீங்க?” என்றேன்.

“நல்லா இருக்கேன்” என்றார். அவருக்கு மூச்சு வாங்கியது. ”சினிமா சூட்டிங் எல்லாம் உங்க தோட்டத்துல எடுத்தீங்களாம்?” என்றேன்.

வியர்வை, களைப்பை மீறி அவர் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியது. “உனக்கும் தெரிஞ்சிடுச்சா? ஆக்சுவலா, கதை என்னன்னா....”?

நான் சுதாரித்துக்கொண்டேன். “ஏன் சார், சூட்டிங் நின்னுபோச்சி?”

”எல்லாம் ஃபைனான்ஸ் ப்ராப்ளம் தான். பணம் கெடச்சதும் அடுத்த செட்யூல் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்.. நம்ம கார்பெண்டர் முருகேசனுக்கு காய்ச்சலாம். போய் ஊசி போட்டுட்டு வரேன்.” உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.

என் மனதிற்குள் ஏதோ துயரம் பரவியது - என்னவென்று சொல்லத்தெரியவில்லை.