வியாழன், ஏப்ரல் 24, 2008

பாய் கடை திண்ணை (6)

பாய்க்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்தவன் பெயர் முகமது யஹியா, 10 வயது. அடுத்தது பெண். பாத்திமா பீவி, 8 வயது. கடைசியாக ஒரு பையன் முகமது யாசின்.ஒன்றரை வயது.

அன்று நான் பாய் கடைக்கு வந்தபோது, பாய் சுருட்டு போட்டுக்கொண்டிருந்தார். அவரின் எதிரே அவரின் கடைசி பையன், பாயைப்
போலவே சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். பாய் அவனுக்கருகில் சில ப்ளாஸ்டிக் பொருட்களை பரப்பிக் கொண்டிருந்தார்.

“இது எதுக்கு மொதலாளி...”

”அவனுக்கு இப்போ பல்லு மொளைக்கிற வயசு. எவுறு ஊறிக்கிட்டு இருக்கும். எதையாவது கடிக்கத் தோணும். அதான், இத குடுக்குறன்...விடுங்க, அவன் பாட்டுக்கு கடிச்சிக்கிட்டு இருக்கட்டும்.”

யாசின் என்னைப்பார்த்து, தன் பொக்கைப் வாயைக்காட்டிச் சிரித்தான். பிறகு, பிளாஸ்டிக் சிங்கத்தை வாயில் வைத்து கடிக்க ஆரம்பித்தான். அவன் வாயிலிருந்து ஜொள்ளு ஊற்றியது.

திண்ணையின் மேல் படியில், பாய்க்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டேன்.

”பாய், யாசின் உங்கள ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கறான்.”

”இதுலயும் ஜெராக்ஸ் தானா? சரி, நீங்க எப்போ கல்யாணம் பண்ணி, ஒரு பொட்டப்புள்ளய பெத்து, என் பையனுக்கு கட்டிக் குடுக்கப்போறீங்க?”

“ரொம்ப கஷ்டம் மொதலாளி”

“இப்படியே, கிரிக்கெட், கம்ப்யூட்டர் சென்டர்னு ஊரு சுத்துனா, கண்டிப்பா கஷ்டம் தான்”....

லேசாக எனக்கு உறுத்தியது. ஒன்றும் பேசத் தோன்றவில்லை.பாய் கடை எதிரே இருக்கும் குறுகிய சந்தைப் பார்த்தேன்.அங்கே,என் தாத்தா வந்துகொண்டிருந்தார். பாய் என்னைப் பார்த்து, ஒரு விஷமப் புன்னகையைப் படரவிட்டார். எனக்குப் புரியவில்லை.

என் அம்மா வழி தாத்தா, ஒரு பத்திர எழுத்தர்.அவரின் வீடு அந்த சந்தில்தான் இருந்தது. அவர் எங்கள் அருகில் வந்ததும், பாய் அவரிடம் கேட்டார்.

“ஏன் மாமா, பேசாம பெத்துசாமிக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சா என்ன? அப்பவாச்சும் உருப்படுவானான்னு பாக்க்கலாம்”

வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக்கொண்டே, என் தாத்தா சொன்னார்.
“மொதல்ல அவன ஒரு நல்ல வேலைய பாக்க சொல்லு.” சொல்லிவிட்டு தெற்கு நோக்கி நகர்ந்து போனார்.


“பாருங்க மொதலாளி, 70 வயசாகியும் இன்னும் பத்திரம் எழுதறார். தம்மம்பட்டி சப்-ரெஜிட்ரார் ஆபீஸுக்கு போறதுக்கு சின்னப்பையன் மாதிரி பஸ் பிடிக்கப் போறார். நீங்களும் தான் இருக்கீங்களே..”

”இப்ப அவரக் கூப்பிட்டு என்னை ஏன் பாய் இன்சல்ட் பண்றீங்க?”

”சும்மாதான். பொழுதுபோக வேணாமா?”.

எங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் யாசினை மறந்து போனோம்.சட்டென்று யாசினைப் பார்த்த நான் பதறிப் போனேன்.

அங்கே அவன் மூச்சா போயிருந்தான். கூடவே மலம் கழித்திருந்தான். தன் இடது கையால், மலத்தைப் பிசைந்து, தன் அழகிய கோலிகுண்டு கண்களால், அதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அய்யே...பாய்..என்ன இது? சொல்லிவிட்டு, படியை விட்டுக் குதித்து, ரோட்டில் நின்றேன். பாய் பதட்டப்படவில்லை.

“சைதானி..சைதானி..”

குரல் கேட்டு, உள்ளே அமர்ந்து சுருட்டு போட்டுக்கொண்டிருந்த பாயின் மனைவி ஓடி வந்தார்.

“பாரு இவன”..

பாயின் மனைவியும் பதட்டம் அடையவில்லை. யாசினை கொத்தாக தூக்கி, வீட்டுக்குள் கொண்டு போனார்.5 நிமிடம் கழித்து வாளியும், துடைப்பமுமாக வந்து,அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டுப் போனார்.

மறுபடியும் முதல் படிக்குத்தாவி, பாய் அருகில் அமர்ந்தேன்.

”பாய் உங்களுக்கு, யாசின் மேல கோவம் வரலயா?”

“அவன் சின்னப்பையன் மொதலாளி. எரும மாதிரி வளந்த நீங்களே என் பேச்ச கேக்கமாட்டேங்கிறீங்க.. ஒன்றரை வயசு பையன் அவனுக்கு சொன்னாப் புரியவா போவுது”.

இதுக்கு நான் கேக்காமலேயே இருந்திருக்கலாம்.

பாய் தொடர்ந்தார்.

“மொதலாளி,எங்க இஸ்லாத்துல சொல்வாங்க. மல்யுத்ததில் வெற்றி பெறுபவன் மாவீரன் அல்ல. கட்டுக்கடங்கா கோபம் வரும்போது
அடக்கிகொள்பவனே மாவீரன்னு
...”

பிடறியில் அறைந்த மாதிரி இருந்தது.

(தொடரும்)

புதன், ஏப்ரல் 23, 2008

பாய் கடை திண்ணை (5)

பாய் ஒரு கடுமையான உழைப்பாளி. நானோ படுசோம்பேறி.

ஜெராக்ஸ் போடுதல், இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்றல், சுருட்டு சுற்றுதல், டி.வி. டெக் வாடகைக்கு விடுதல் போன்ற பலவேலைகளை பாய் செய்துவந்தார். அவரை நான் “முதலாளி” என்று அழைப்பது வழக்கம். அவரும் பதிலுக்கு என்னை “முதலாளி” என்று அழைப்பார். காரணம், நான் ”கணினி கல்வி நிறுவனம்” ஒன்றை பாய் கடை அருகில் நடத்தி வந்தேன். நிறுவனம் என்றால், எதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இரண்டு இற்றுப் போன பழைய கணினிகள் மூலம், என்னுடைய கிராமத்து மக்களுக்கு தகவல்- தொழில் நுட்பம் போதித்து, அவர்களுக்கு கணினி பற்றிய விழிப்புணர்வை உசுப்பி வந்தேன் என்று சொன்னால், என் கிராம மக்களின் (அதோ) கதியை உங்களால் ஐயம் திரிபற உணர முடியும். நானும் என்னிடம் அகப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, பெயிண்ட் பிரஸும், எம்-எஸ் வேர்ட்ம் பயிற்றுவித்து, என் கணினி அறிவைப் பெருக்கிக் கொண்டேன்.

“மொதலாளி, ஒரு பய கூட எங்கிட்ட வந்து படிக்கமாட்டேங்கிறானே, என்ன காரணம்?”

”கம்ப்யூட்டர் சென்டர ஏரக் கட்டிட்டு, சென்னைக்கு போங்க மொதலாளி, இல்லைனா இப்படியே என் வீட்டு திண்ணைய தேய்க்கவேண்டியதுதான்”.

என் விஷயத்தில், பாய் - தன் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்து விடக்கூடியவர். நானும் அவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தோம்.

”ஒழுங்கு மரியாதையா சென்னைக்கு போய் ஒரு வேலைய வாங்கி, வாழ்க்கையில செட்டில் ஆகிற வழியை பாருங்க. அப்போதான், நீங்க உருப்படுவீங்க”...

”மொதலாளி, நான் சென்னைக்கு போய்ட்டா, அப்புறம் நம்ம ஊர் மக்களின் கதி?”

பாய் என்னைப் பார்த்து, லேசாக நகைத்தார். பிறகு சொன்னார்.

“புத்திசாலிக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. முட்டாளுக்கு, அறிவுரை சொல்லி பிரயோஜனமில்லை.”

அதற்குப் பிறகு, நான் எதுவும் பேசவில்லை.

அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசாமி, பாய் கடைக்கு வந்தான். பாய் அவனைப் பார்த்துக் கேட்டார்.“என்னப்பா? டிவி. டெக். வாங்கிக்கிட்டு போனியே, திருப்பி கொண்டுவந்திட்டியா?”

ஒரு கணம் திகைத்த அந்த ஆள் சொன்னான்.

“கொண்டு வந்திட்டேங்க.. நீங்க உங்க அப்பாவ கூப்பிடுங்க..நான் அவர்கிட்ட தான் வாங்கிக்கிட்டு போனேன். அவர்கிட்டயே திருப்பி கொடுத்திடுறன்”...

பாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“எங்க அப்பாவ பாக்கணுன்னா, நீ மேல தான் போகணும், அவர் செத்து 10 வருஷம் ஆச்சி....”

திரும்பி என்னைப் பார்த்து சொன்னார்.

“அதுக்குத்தான், நான் 'டை' அடிக்க மாட்டேன்னு சொன்னேன், இப்போ பாருங்க”....

இரண்டு பேரும், வாய் விட்டு சத்தமாக சிரித்தோம்.

வந்தவனைப் பார்த்து சொன்னேன். “ ஹலோ, இவர்தாங்க பாய். ‘டை' அடிச்சிருக்கிறதனால உங்களுக்கு அடையாளம் தெரியல...”

அவனும் சிரித்துவிட்டான்.....

பாயுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வயது பேதமில்லாமல், எல்லோருடனும், நகைச்சுவையுடன் பேசுவார். மாலை வேலையில், அவர் கடையின் திண்ணை இளைஞர்களால் நிரம்பி வழியும். பாயும், சுருட்டு சுற்றிக்கொண்டே, எல்லோருடனும் கதை பேசுவார்.

அன்றைய தினம், மகிழ்ச்சியாய் கழிந்தது.

(தொடரும்)

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

பாய் கடை திண்ணை (4)

புலியூர் ராஜேந்திரன் மூலம் என் வாழ்க்கையில் விளையாடிய ஈறு, கிரிக்கெட் மூலம் மீண்டும் என் வாழ்க்கையை தாறுமாறாக ஆக்கப் போகிறான் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

"நிஜமாத்தான் சொல்றியா அருண்?"

"சத்தியமாண்ணே! நீங்க டீம் ஆரம்பிச்சா, நிறைய பேர் அதுல சேருவாங்க" என்றான்.

"எப்படிடா சொல்ற?"
"அது வந்துண்ணே..."
பாபு டீக்கடை வழியாக ஒரு சிறு கும்பல் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னுடைய அடிப்பொடிகள்.வந்தவர்கள் முகம் எல்லாம் வாடிப்போய் இருந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. என்னை மட்டும் அணியில் இருந்து நீக்காமல், என் தற்கொலைப்படையினரையும் ஒட்டு மொத்தமாக நீக்கம் செய்திருக்கிறார்கள்.
ஹும்..என்னையே அணியில் இருந்து தூக்கி விட்டார்களாம். இவர்கள் மட்டும் எம்மாத்திரம்?
ஈறு மீண்டும் தொடர்ந்தான்.
"அண்ணே, இவங்க எல்லாரையும், டீம வுட்டு தூக்கிட்டாங்க. நீங்க ஆரம்பிக்கிற புது டீம்ல நாங்க எல்லாரும் சேர்ந்துடுறோம் அண்ணே..."
சபீர் மெதுவாக தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்."பசங்க சொல்றதுதாங்க சரி. நாம புது டீம் ஆரம்பிக்கலாம். அப்புறம் நாம எல்லாம் டோர்னமென்ட் வெளையாடுறது எப்போ?"
இங்கே நான் சபீரைப் பற்றி சொல்லியாகவேண்டும். கிட்டத்தட்ட என் வயதுக்காரர்.
சபீர் பந்து வீசும் அழகே தனி. வேக வேகமாய் ஓடி வந்து, மிக மெதுவாய் பந்தை வீசுவார். அவருடைய ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் 20 ஓட்டங்களையாவது எதிர் அணியினர் விளாசுவது நிச்சயம். அப்போதெல்லாம் சிறு வயது பந்து வீச்சாளர்கள் என்னிடம் வந்து, சபீரின் பந்து வீச்சை கோபத்துடன் விமர்சிப்பார்கள்.
அவர்களுடைய மனக்குமுறலை எளிதில் தீர்த்து விடுவேன்.
கொதித்தெழுந்த அந்த விடலைப் பையனுக்கு, பந்து வீச அனுமதி தந்தால், அவன் குஷியாகி, பந்து வீச ஆயத்தமாகி விடுவான்.
"அண்ணே! நீங்க தான் கேப்டன். சபீர் அண்ணன் துணை கேப்டன். நான் ஓபனிங் பௌலர்..." என்று சொல்லி சிரித்தான் ஈறு.
"அடப் பாவி. சபீர் பற்றி தெரிந்திருந்தும், அவரை துணை கேப்டன் என்கிறானே இந்த ஈறு". அவனுடைய செவுளில் ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.
"சரி. மறுபடியும் நாளைக்கு இதைப் பத்தி பேசலாம். எல்லாரும் நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஏரிக்கு வந்திடுங்க.." என்றேன்.
ஒட்டு மொத்தக் கும்பலும் திருப்தியாகக் கலைந்து சென்றது.
தன்னுடைய ஜெராக்ஸ் இயந்திரத்தை பழுது நீக்கிவிட்டு என்னருகே வந்து அமர்ந்த அக்பர் பாய், என்னைப் பார்த்து விஷமமாய் சிரித்தார்.
அக்பர் பாய்க்கு 38 வயது தான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 60 வயசு கிழவர் போல் இருப்பார். தலை பாதி வழுக்கை. மீதி எல்லாம் வெள்ளைமுடி. எத்தனையோ முறை அவரிடம் "தலைச்சாயம்" அடித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறேன்.ஒருபோதும் அவர் அவ்வாறு செய்ததில்லை. கேட்டால், "இதுதான் என் உண்மையான உருவம், இதை மாற்றிக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை" என்று கூறுவார்.

ஆனால் அன்று "தலைச்சாயம்" பூசி இருந்தார்.என்னால் நம்பவே முடியவில்லை. "பாய், என்ன இது அதிசயம்"..என்றேன் - அவர் தலையை பார்த்தபடி.
"எல்லாம் என் பொண்டாட்டி வற்புறுத்தல்" என்றார்.
"பத்து வயசு கொறஞ்சிட்டீங்க பாய்" என்றேன்.
"அப்படினா 28 வயசு ஆள் மாதிரி தெரியறனா?"
"இல்லை 50 வயசு ஆள் மாதிரி"....
குழந்தையைப் போல் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தார் பாய்.
(தொடரும்)