செவ்வாய், ஜூன் 15, 2010

கால எந்திரம் என்னும் அதிசயம்

எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை, காலத்தில் பின்நோக்கிப் பயணம் என்பது இயலாத காரியம். ஏனெனில், காலம் என்பது தட்டையானது, முன்னோக்கி மட்டும் நகரக்கூடியது என்கிறார். மேலும், தாத்தாவுடன் முரண்பாடு (?!) (GrandFather Paradox) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, மிஸ்டர் எக்ஸ், காலத்தில் பின்நோக்கிப் பயணப்படுகிறார். அங்கே அவர்  தனது தாத்தாவைக் கொன்று விட்டு, நிகழ்காலத்திற்குத் திரும்புகிறார். எனில், மிஸ்டர் எக்ஸ்ஸின் அப்பா எப்படி உருவாகியிருக்க முடியும்? மிஸ்டர் எக்ஸ் தான் எப்படி பிறந்திருக்கமுடியும்?




இந்தப்பிரச்சினைக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி இகர் நோகிகோவ், இப்படி பதில் அளிக்கிறார்.”இறந்த காலத்திற்கு சென்று ஒருவர் வரலாற்றை மாற்ற முடியாது. அப்படி அவர் அதை மாற்றினால், அவரால் நிகழ்காலத்திற்குத் திரும்ப வரமுடியாது.” இந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் என்ன ஆகும் என்பதை யாராவது இறந்த காலத்திற்கு சென்று வந்தால் தான் சொல்லமுடியும். மேலும், கால எந்திரம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று சில விஞ்ஞானிகள் குழுவும், முடியும் ஆனால் நிறைய செலவாகும் என்று மற்றொரு குழுவும் தெரிவிக்கிறார்கள்.



எது எப்படியோ, காலத்தில் பயணம் செய்வது என்பதே ஒரு சந்தோஷமான, ஆச்சர்யமான கற்பனைதான். சிறுவயதில் நான் லயன் காமிக்ஸில் வரும் ஆர்ச்சி கதைகளில், ஆர்ச்சி என்னும் இயந்திர மனிதன், தன் நண்பர்களுடன் காலத்தில் முன்நோக்கியும், பின்னோக்கியும் பயணம் செய்வது, அங்கே சாகஸங்கள் புரிவது போன்ற சம்பவங்களப் படித்து விட்டு, பலமுறை கற்பனைகளில் ஆழ்ந்து, காந்தி வாழ்ந்த காலத்திற்கு நான் செல்வது போலவும், அங்கே கோட்ஸேவைக் கண்டுபிடித்து, காந்தியைக்கொல்லாமல் செய்யும்படி நான் சாகஸம் புரிவதுபோலவும் கற்பனை செய்து, அதைக் கதையாகக் கூட எழுத முயன்றிருக்கிறேன்.

தமிழில் கால எந்திரம் பற்றிய திரைப்படம் எதுவும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்தத் திரைப்படம் ஒன்று தமிழில் “அபூர்வ சக்தி 365” என்றப் பெயரில் வெளியானது. அதில், பாலகிருஷ்ணா கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் கால எந்திரம் மூலம் பயணம் செய்வார். கடந்த காலம் என்பது ராஜாக்களின் காலமாகவும், அங்கே இளவரசியுடன் காதல், அரசருடன் சண்டை என்று திரைக்கதை செல்லும். பெரும்பாலும், கால எந்திரத்தில் பயணம் செய்யும் ஹீரோ, தவறாமல் ஹீரோயினுடன் பயணம் செய்வதுதான் உசிதம். அப்போதுதான் அதில் சுவாரஸ்யமிருக்கும். கூடவே ஒரு காமெடியனும் இருந்துவிட்டால் - பலே!. இந்தப்படத்திலும், இதே மாதிரி தான் ஹீரோ இறந்த காலத்தில் வந்து லூட்டி அடிக்கிறார். பிறகு, எதிர்காலத்திற்கு செல்லுகிறார்கள். அங்கே, பூமியில் ரசாயனமாற்றம் ஏற்பட்டுவிட்டதால், மக்கள் எல்லோரும் பூமிக்கு அடியில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வந்து வில்லனைப்பழி வாங்குகிறார் பாலகிருஷ்ணா. அந்த வயதில் எனக்கு இந்தப்படம் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 3 முறை அந்தப்படத்தைப் பார்த்தேன்.



ஆங்கிலத்தில் எத்தனையோ படங்கள், கால எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றுள் என்னைக்கவர்ந்தப் படம் “Time Machine (2002)". இறந்துபோன காதலியை, இறந்தகாலத்திற்குச் சென்று, அவளைக் காப்பாற்ற முயல்கிறான் நாயகன். ஆனால், அதிலும் அவள் இறந்துபோகிறாள். இங்கே, ரஷ்ய விஞ்ஞானி இகர் நோகிகோவின் தத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். அதாவது, விதியை மாற்ற முடியாது. பிறகு, நிகழ்காலத்திற்கு வரும்போது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டு, எதிர் காலத்திற்கு செல்கிறான் நாயகன். எதிர்காலத்திலும் கூட வெவ்வேறு ஆண்டுகளுக்குப் பயணப்படுகிறான் . முடிவில், எதிர்காலத்திலேயே தங்கிவிடுகிறான்.

தமிழில் இப்படியொரு சினிமாவை எடுக்கும் ஆற்றல் சிம்பு தேவனுக்கு இருப்பதாகக் கருதுகிறேன். இறந்தகாலம் மற்றும் எதிர்காலக் காட்சிகளில் தன் பின்நவீனத்துவ உரையாடல்கள் மூலம் அவர் வசனத்தில் பின்னி எடுக்கலாம்.எத்தனையோ படங்கள் கால எந்திரத்தைப் பற்றி நான் பார்த்திருந்தாலும், இன்னும் எத்தனைப் படங்கள் இதே தளத்தில் வந்தாலும் சலிக்காமல் பார்ப்பேன்.

(தகவல் உபயம் : விக்கி பீடியா)

திங்கள், ஜூன் 14, 2010

தந்தையின் அன்பு எதுவரை?

என் பெற்றோரின் திருமணமும் காதல் திருமணம்தான். ஒரே தெருவில் ஐந்தாறு வீடுகள் தள்ளி குடியிருந்த என் தாயுக்கும், தந்தைக்கும் எப்படியோ காதல் தீ பற்றிக்கொண்டது. இருவருமே ஒரே ஜாதி என்பதால் காதலுக்குத் தடையேதுமிருக்கவில்லை. என் தந்தை ஆத்தூரில் (எங்கள் ஊரிலிருந்து 30 கி.மீ. தொலைவு) ஒரு வங்கியில் பணிபுரிந்துவந்தார். காலை எட்டு மணிக்கு அலுவலகம் செல்லும் அவர் இரவு 8 மணிக்குமேல் தான் வீடு திரும்புவார்.


பெரும்பாலும் எங்கள் வாழ்க்கை (நான், என் அண்ணன், என் தங்கை) எங்கள் தாத்தா (அம்மா வழி) வீட்டில்தான் கழியும். அங்கேயே உண்டு, உறங்கி, குளித்து - பள்ளி மற்றும் ட்யூசன் செல்வோம். தந்தையை பெரும்பாலும் பார்ப்பது வார இறுதியான ஞாயிறு மட்டுமே. அவர் எங்களை கொஞ்சியது எனக்கு நினைவில்லை. எங்களுடன் விளையாடியதில்லை. ஒரு கலாச்சார கிராமத்து தந்தையாகவே வாழ்ந்து மடிந்தார். 

நம்மில் பலர் பெரும்பாலும், நமது குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. அவர்களுக்கு கதை சொல்வதில்லை. வாழ்க்கை முழுவதும் வேலை, வேலை என்று அலைந்துவிட்டு, வயதானப் பிறகு பேரக்குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள்.


நான் காலை 9 முதல் 7 மணி வரை மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்ப்பேன். பிறகு நேராக வீட்டிற்குச் சென்றுவிடுவேன். காத்திருக்கும் என் மகள்களுடன் கொஞ்சி விளையாடுவதில் உள்ள சுகமே தனி. இரவில் தூங்கும்போது என்னிடம் கதைக்கேட்பதில் சௌமியாவிற்கு (5 வயது) கொள்ளை இஷ்டம். நான் அவளுக்கு டோரா கதைகள், டாம் அண்ட் ஜெர்ரி கதைகள், ஜங்கிள் புக் கதைகள் என்று அவற்றில் இல்லாத புனைவுக்கதைகளை என்னிஷ்டம்போல் அவிழ்த்து விடுவேன். விரிந்த விழிகளுடன் சௌமியா நிறைய குறுக்குக்கேள்விகள் கேட்பாள். சலிக்காமல் பதில் சொல்லுவேன். கதை முடிந்ததும், என்னை அண்டி படுத்துக்கொண்டு, “அய்யா, நீங்க ரொம்ப நல்ல அய்யா! எனக்கு கதை சொல்றீங்க, என் கூட விளையாடுறீங்க, உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்லுவாள். எனக்கு லேசாக கண்ணில் நீர் அரும்பும். எனக்குக் கிடைக்காத அந்தப் பாசத்தை என் மகள்களுக்குக் கொடுப்பதில் எனக்கு மனதிருப்தி.


ஒருமுறை “டாம் அண்ட் ஜெர்ரி” கதையில் “Heavenly Puss" என்ற கதையைப் பார்த்தோம். சௌமியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அந்தக் கதையில் நிறைய காமெடி வசனங்களைப் புகுத்தி சொன்னேன். அவளுக்கு அது ரொம்பப் பிடித்துப்போயிற்று. அதன் பிறகு அவள் அதை ஒரு விளையாட்டாக மாற்றினாள். அதாவது, அவள் டாம் ஆகவும், நான் ஜெர்ரியாகவும் நடிக்கவேண்டும். மற்ற கேரக்டர்களை இருவரும் சமமாகப்பிரித்துக்கொண்டு சைகையில் விளையாடுவோம். பிறகு நான் டாம் ஆகி, அவள் ஜெர்ரி ஆகிவிடுவாள். அப்போது அவள் முகத்தில் வரும் சந்தோஷம் அளவிடமுடியாதது.


நான் அலுவலகம் விட்டு வந்ததும், என்னை வரவேற்கும் இன்னொரு குட்டிதேவதை தீபிகா. ஒரு வயதுதான் ஆகிறது. என்னைக்கண்டவுடன் “அய்யா” எனக்கூவி, கைகளை ஆட்டி, தலையசைத்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்துவார். நான் அவரைக் கையில் தூக்கி “தீபிகா கண்ணு, உன் பேர் என்னம்மா” என்றால், “கீ..கி.காஆஆஆஆஆஆ” என்று சொல்லிவிட்டு கீழ்வரிசை பற்கள் இரண்டையும் காட்டி சிரிப்பார். அப்படியே அவர் உதடுகளில் முத்தமிட்டு, அவரை என் தோளில் சாய்த்துக்கொள்வேன். உடனே என் மேல் இறுக்கமாய் ஒட்டிக்கொள்வார். இதுதான் சொர்க்கம்.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை. அப்படி கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் குழந்தைகள் வடிவில் ஒவ்வொருவர் வீட்டிலும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

செவ்வாய், ஜூன் 08, 2010

சாருவின் குத்தாட்டம்

மிஷ்கினின் “நந்தலாலா” படத்தை சிலாகித்து இடுகை போட்ட சாநிக்கு, மிஷ்கின் காட்டியிருக்கும் நன்றி தான், யுத்தம் செய் படத்தில் நீது சந்திராவுடன் சாநி போட்டுக்கொண்டிருக்கும் குத்தாட்டம். நடக்கட்டும். இலக்கியவெறி தலைக்கு ஏறி, உ.த.எ. வையும், மன்னிப்புக்கேட்க வைத்த ஸ்டார் டிவி நீயா,நானா டைரக்டர் ஆண்டனியையும் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் சாநிக்கு இது ஒரு உடனடி நிவாரணமாக இருக்ககூடும்.


நிற்க, சாநி பரிந்துரை செய்து கொண்டிருக்கும் “அறிவுப்புத்திரன்” என்னும் இணையத்தளத்தைக் காணவில்லை. உடற்பயிற்சியிலும், அடிதடியிலும் ஆர்வம் கொண்ட ஸ்டீபன் ராஜ், ஏன் இந்த தளத்தை நீக்கிவிட்டார் என்று தெரியவில்லை. சாநியால் உத்தம தமிழ் எழுத்தாளர் -2 (உ.த.எ.1 - சுந்தர ராமசாமி) என்று அழைக்கப்படும் ஜெயமோகன் பற்றியும், அவர் குடும்பம், மகன் பற்றியும் ஸ்டீபன் எழுதியிருந்த விதம் கொஞ்சம் கூட ரசிக்கமுடியவில்லை. தனிமனித வக்கிரத் தாக்குதலின் உச்சம். 


புளிப்பெடுத்துப்போன இந்துத்துவா, கடவுள் விஷயத்தில் இரட்டை நிலை (Agnostic), காந்தியின் புகழ் பாடுதல் தவிர ஜெயமோகன் ஒரு சிறப்பான எழுத்தாளர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.பிரச்சார நெடியில் நீட்டி முழக்கி எழுதப்படும் அவரின் கட்டுரைகளை, மம்மி படத்தில் வில்லன் வாயிலிருந்து கிளம்பும் குளவிகளுக்கு ஒப்பிட்டு சாநி எழுதியதை நான் ரசித்தேன். உண்மையில், ஜெயமோகனின் புனைவுகளுக்கு முன் சாநியின் புனைவுகள் மண்டியிடவேண்டும். சரோஜாதேவி கதைப் புத்தகங்களுக்கு இணையாக சாநி தன் எழுத்தில் பயன்படுத்தும் வார்த்தைகள், படிக்கச்சகிக்கதக்கதல்ல.

சாநியின் எழுத்தில் சுவாரஸ்யம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்,அவற்றில் இலக்கிய இன்பம் கிட்டுவதில்லை. தான் அணியும் ஜட்டிகள் குறித்தும், ஷூக்கள் குறித்தும் இவர் எழுதும் கட்டுரைகள் எந்த விதத்தில் இலக்கியத்தில் சேர்த்தி என்பதை ஸ்டீபன் தான் சொல்லவேண்டும்.

முன்பொருமுறை, ஒரு பதிவர் சாநி தன் மகளை வன்புணர்ச்சி செய்ய முயன்றார் என்று எழுதியதைப் படித்துவிட்டு ஆங்காரமாய் ஆடிய சாநி, இன்று ஸ்டீபன் ஜெயமோகனின் மகன் பைத்தியக்காரன் என்றும், ஜெமோ தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறவர் என்றும் எழுதியிருப்பதை எப்படி நியாயப்படுத்துகிறார். ஆக, ஜெயமோகன் பற்றி சாநி மனதில் நிலவும் வன்மத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஒருவேளை இந்தமாதிரி இணையத்தளங்களை தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், நித்யானந்தன் விஷயத்தில் தனக்கு ஏற்பட்ட அவப்பெயரை மக்கள் மறக்கும் வண்ணம் திசைதிருப்ப முயல்கிறாரோ என்று தோன்றுகிறது.

இப்படி நான் சொல்வதன் மூலம் நான் ஜெமோவுக்கு சொம்பு தூக்குவதாக யாராவது சொன்னால், சந்தோஷம். நர்சிம்-சந்தனமுல்லை விவகாரத்தில் எல்லோரும் தலையிட்டு ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களைச் சொல்லி பஞ்சாயத்து செய்தார்கள். அறிவுப்புத்திரன் - சாநியின் இழிசெயலை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை இரண்டு எழுத்தாளர்களும் பேசித்தீர்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களோ? இல்லை, எழுத்தாளர்களிடையே சண்டையும், சச்சரவும் சகஜம் என்று விட்டுவிட்டார்களோ?

இதையெல்லாவற்றையும் விட, ஜெமோ இதையெல்லாம் கண்டுகொள்ளாலும், பதிலுக்கு வன்மம் நிறைந்தக் கட்டுரைகள் எழுதாமலும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாவம் சாநி, இனிமேல் சினிமாவில் பிசியாகிவிடுவார். அதனால் அடிக்கடி இணையத்தில் எழுதமுடியாமல் போகலாம். அப்போது, அவரின் போலீஸ் ரசிகர் அவரை லாக்கப்பில் தள்ளி கையில் லேப்-டாப் கொடுத்து எழுதச்சொல்லுவார். அப்போது சாநி என்ன செய்வார்?

ஹி.. ..ஹி.... நிற்க, சாநியின் குத்தாட்டம் காண நான் ஆவலுடனிருக்கிறேன்.

திங்கள், ஜூன் 07, 2010

சினிமா என்னும் கானல் நீர்

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள், நான் ஒரு எதிர்பாராத சினிமாச் சுழலில் சிக்கிக்கொண்டேன். என் அண்ணனுடைய பிரிண்டிங் ப்ரஸில்தான் அந்த துக்க  சம்பவம் நேரிட்டது.

டாக்டர் சுந்தர்காந்த் (நிஜப்பெயர் வேண்டாமே!) என் எதிரில் வந்து நின்றார்.

”வாங்க சார்” என்று வரவேற்றேன். “நீங்க சுவாமி அய்யப்பன் படம் பாத்தீங்களா? என்றார்.

”இல்லை சார்.”

“அந்தப்படத்துல நான் நடிச்சிருக்கேன். சபரிமலைக்குப் போகும்போது, அந்தப்படத்தோட டைரக்டர் என்னை நடிக்கச்சொன்னார். குருசாமியா நடிச்சிருக்கேன்”.

“ஆமா பெத்து. நான் கூட அந்தப்படம் பாத்திருக்கேன். அதுல சார் நடிச்சிருக்கார்.” - என் நண்பன் செந்தில் சொன்னான்.

சற்றே பெருமிதமேறிய முகத்துடன் என்னைப்பார்த்தார் டாக்டர். 

“இப்போ கூட அன்னக்கிளி சொன்னக்கதை-ங்கிற படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். சத்யராஜ் படம். நான் ஒரு வில்லன் ரோல்-ல வரேன்.”
”அப்படியா சார்” - முகத்தில் ஆச்சர்யம் காட்டினேன்.

டாக்டர் முகத்தில் பெருமிதமும், லேசான சிரிப்பும் தென்பட்டது.

டாக்டர் - என்றால் அவர் எம்.பி.பி.எஸ். படித்தவர் இல்லை. ஏதோ ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக சேர்ந்து, தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் டாக்டர் பரிந்துரைக்கும், மாத்திரைகளையும், ஊசியையும் கொடுத்து அனுபவப்பட்டவர். அப்படியே ஒரு சுபயோக சுபதினத்தில் டாக்டரானார்.

கிராமத்தில் இவர் ஒரு மொபைல் டாக்டர். தன் லெதர் மருந்துப் பையை சைக்கிளில் மாட்டிக்கொண்டு, யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், ஊரில் விசாரித்துக்கொண்டு வீடு தேடி சென்று ஊசி போடுவார். பணம் இருந்தால் கொடுக்கலாம். இல்லையென்றால் அக்கவுண்ட்டில் எழுதிக்கொள்வார்.

”சத்யராஜிக்கு ஒரு தடவ, சரியான தலைவலி. நான் ஒரு ஊசி போட்டேன். ஒடனே சரியாயிடுச்சி. நீங்க டாக்டரான்னு ஆச்சர்யப்பட்டார்.”
எனக்குப் பெருமிதமாக இருந்தது. செந்தாரப்பட்டி என்னும் சிறிய கிராமத்திலிருந்து போய் சினிமாவைக் கலக்குகிறாரே.

அப்புறம்தான் அவர் தன் சுயரூபத்தைக்காட்ட ஆரம்பித்தார்.

”என் கிட்ட கூட ஒரு கதை இருக்குது. கேளேன்.” என்றார்.

”சொல்லுங்க, சொல்லுங்க” என்றபடியே என் நண்பன் செந்திலைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து பல்லைக்கடித்தான். ஓடிப்போகும்படி சைகை செய்தான்.

நான் கதைக் கேட்பதில் ஆர்வமானேன்.

ஒரு சின்ன கிராமம். அதுல ஒரு ஜமீன்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள். டவுன்ல படிச்சிட்டு இருக்கிற அந்த ஜமீன்தார் பையன் லீவுல ஊருக்கு வர்றான். வந்த எடத்துல அவங்க தோட்டத்துல களை வெட்ட வந்த ஹீரோயினி(?!) மேல அவனுக்கு காதல் வருது. இங்க ஒரு சாங் வைக்கிறோம். அந்தப் பெண்ணைக் கிண்டல் பண்ணி ஹீரோ பாடற சாங்.

”கன்னிப்பொண்ணு மீனா, களைவெட்டப் போனா....” - ராகமெடுத்துப் பாட ஆரம்பித்தார்.

முழுப்பாட்டும் ஓடிக்கொண்டிருந்தது. செந்தில் சொன்னதன் அர்த்தம் அப்போது தான் புரிந்தது.

அப்புறம் ரெண்டு பேருக்கும் காதல் ஆயிடுது. இத தெரிஞ்சப் பண்ணையார், மகனைப் படிக்க மறுபடியும் டவுனுக்கு அனுப்பிடுறார். இங்க ஒரு பேதாஸ்  சாங் வைக்கிறோம்.

“கண்மணி ராஜா, கலங்குது ரோஜா” - மீண்டும் முழுப்பாடல்.

வாழ்க்கை நொந்தேன். திடீரென்று வந்த என் அண்ணன் தான் என்னைக்காப்பாற்றினார். “இன்னும் சாப்பிடலயா? வீட்டுக்குப்போய் சாப்பிடு” என்றார். 

“நான் வரேன் சார்” என்று நழுவினேன். செந்தில் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்தான்.

ஒவ்வொரு முறை நான் ஊருக்குப்போகும்போதும், டாக்டர் என்னைப் பார்த்துவிடுவார். “இப்போ ஒரு படத்துக்கு டிஸ்கஷன் நடந்துகிட்டிருக்கு. ப்ரொடியூஸரும் கெடச்சிட்டார். நான் வில்லன் ரோல் பண்றேன்” என்பார்.

சென்ற ஆண்டு நான் ஊருக்குப் போனபோது, ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை சொல்லி ஆச்சர்யப்பட்டார்கள்.

“டாக்டர் வீட்டுத் தோட்டத்துல ஷூட்டிங் எடுத்தாங்க. அவர் ஹீரோ,-ஹீரோயின் கூட, தென்னந்தோப்புல குத்தாட்டம் போட்டார். ஊரே அங்க தான் இருந்தது.”

இந்த முறை ஊருக்கு சென்றபோது டாக்டரைப்பார்த்தேன். அதே சைக்கிளில், மருந்துப்பையுடன் ஊருக்குள் சென்றுகொண்டிருந்தார்.

“சார். எப்படி இருக்கீங்க?” என்றேன்.

“நல்லா இருக்கேன்” என்றார். அவருக்கு மூச்சு வாங்கியது. ”சினிமா சூட்டிங் எல்லாம் உங்க தோட்டத்துல எடுத்தீங்களாம்?” என்றேன்.

வியர்வை, களைப்பை மீறி அவர் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியது. “உனக்கும் தெரிஞ்சிடுச்சா? ஆக்சுவலா, கதை என்னன்னா....”?

நான் சுதாரித்துக்கொண்டேன். “ஏன் சார், சூட்டிங் நின்னுபோச்சி?”

”எல்லாம் ஃபைனான்ஸ் ப்ராப்ளம் தான். பணம் கெடச்சதும் அடுத்த செட்யூல் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்.. நம்ம கார்பெண்டர் முருகேசனுக்கு காய்ச்சலாம். போய் ஊசி போட்டுட்டு வரேன்.” உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.

என் மனதிற்குள் ஏதோ துயரம் பரவியது - என்னவென்று சொல்லத்தெரியவில்லை.

புதன், மே 19, 2010

காதல் கசக்குதய்யா (அ) கிராமத்துக்காதல்

புலியூரான் (எ) ராஜேந்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஈறு (எ) அருண் தான். கபடி ஆட்டத்திலும், ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்ட ராஜேந்திரனை, முதன் முதலில் பார்த்தபோது, மிரண்டு போனேன். மலைமாடு மாதிரி வளர்த்தியாய் இருந்தான். என்னைப் பார்த்ததும், 'வணக்கண்ணே!' என்று கூறி, சல்யூட் அடித்தான்.

மூவரும் சற்று நேரம் அமைதியாய் இருந்தோம். ஈறு தான் ஆரம்பித்தான்.

"அண்ணே!.. ராஜேந்திரன் அண்ணன் லவ் பண்றார். உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற "கவிதா" வை அண்ணன் மடக்கிட்டாரு..". சொல்லிவிட்டு, கண் சிமிட்டி சிரித்தான்.

எனக்கு ஆத்திரமாய் வந்தது. +1 படிக்கும் சின்னப் பெண், 5 ஆவது கூடத் தாண்டாத இவனைப் பார்த்து எப்படி மயங்கினாள்?

ராஜேந்திரன் தொடர்ந்தான்.

"அண்ணே! நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே! புக்ல கூட வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்..எனக்கு ஒரு காதல் கவிதை எழுதிக்குடுங்க...கவிதாவுக்கு கவிதைனா உயிர்."

"முடியாது போடா" என்று கத்த நினைத்தேன்.ஆனால், ராஜேந்திரனின் புகழ்ச்சி, என்னைத் தடுமாற வைத்து விட்டது.

"இல்ல..ராஜேந்திரா..எனக்கு காதல் கவிதை எழுத வராது..இதுவரைக்கும் நான் காதல் கவிதை எழுதியதில்லை."

ஈறு இடைமறித்தான். "உங்களால முடியும்ணே..".

பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நானும் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு யோசிப்பது போல் நடித்தேன். அப்புறம், எழுத ஆரம்பித்தேன்.

கரையும், அலையும்
இருந்தால் தான் கடல்.
உயிரும், உணர்வும்
இருந்தால் தான் உடல்.
எண்ணமும், எழுத்தும்
இருந்தால் தான் மடல்.
அன்பே! நீயும், நானும்
இணைந்தால் தான் காதல்.

கவிதையை(?!) படித்து விட்டு, ராஜேந்திரன் துள்ளினான். "அண்ணே..இது தான் கவித..கவித.." என்று புல்லரித்தான். என் கையிலிருந்த கவிதை காகிதத்தை, ஏறக்குறைய உருவிக் கொண்டு போயினர் ஈறும், புலியூரானும். பிறகு தான், எனக்கு வினையே ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலையில் நான் கண்விழித்ததும், எனக்கு வசவு காத்திருந்தது.

காப்பியை என் கையில் கொடுத்தக் கையோடு, என் தாயார் சற்றுக் கோபத்துடன் ஆரம்பித்தார்.

"டேய்! பின்னாடி வூட்டு கவிதாவுக்கு, நீ லவ் லெட்டர் கொடுத்தியா?"

நான் சகலமும் நடுங்கிப் போனேன். "இது என்னடா புதுக் கரடி?"

எங்கிருந்தோ வந்து, வீட்டுக்குள் நுழைந்த என் தங்கை தான் என்னைக் காப்பாற்றினாள்.

"அம்மா! அந்த லவ் லெட்டர் எழுதுன ஆள கண்டுபுடிச்சாச்சி! புலியூரான் ராஜேந்திரன் தான் அத குடுத்துருக்கான். அவன அடிக்கிறதுக்காக, கவிதா வூட்ல எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க"

"அப்புறம் ஏன் லெட்டர்ல இருக்கறது ஒங்க அண்ணன் கையெழுத்து மாதிரி இருக்குதுன்னு சொன்னாங்க?"

நான் அந்த லெட்டரப் பாத்தேன். அது அண்ணன் கையெழுத்து இல்ல..."

அம்மா போய்விட்டார். மெதுவாக என் தங்கையிடம் சென்றேன். அவள் என்னைக் கோபத்துடம் நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனுக்கு ஏன் கவிதை எழுதிக் கொடுத்தீங்க? அவன் நீங்க எழுதிக் கொடுத்த பேப்பர்லயே, மத்ததெல்லாம் சேத்து எழுதிக்கொடுத்திருக்கான்.."

எனக்கு டென்ஷன் எகிறியது. "அடேய்..புலி.."

நேராக, பாய் வீட்டுத் திண்ணைக்குப் போனேன். அங்கே, எனக்காக ஈறு காத்திருந்தான். என்னைக் கண்டதும் அசிங்கமாய் சிரித்தான்.

"அண்ணே! கை குடுங்க...ஒங்க கவிதையை "கவிதா" சூப்பர்னு சொல்லிச்சி"..

எனக்கு வந்தக் கோபத்தில், ஈறுவின் தலையைப் பிடித்து கீழே தள்ளி, அவன் முதுகில், ஆசை தீர கும்மினேன்.

"ஏண்டா நான் எழுதிக் கொடுத்த கவிதை பேப்பர அப்படியே குடுத்தீங்க? புதுசா எழுதிக் குடுத்திருக்கலாம்ல.."

"அண்ணே..ஒங்க கையெழுத்து நல்லா இருந்துச்சி..அதனால தான் ராஜேந்திரன் அண்ணன்..."

எனக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது."போடி..புலி எழுதுன லவ் லெட்டர், அவங்க அப்பா கைல மாட்டிக்கிச்சி...அவஙக வூட்ல, புலிய தேடிக்கிட்டு இருக்காங்க.. கெடச்சான் அவனுக்கு சங்குதான்டி.."

"நெஜமாவாண்ணே சொல்றீங்க?" என்றவன், புலியூரானைத் தேடிப் போனான். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. புலியூரானைப் பார்க்க முடியவில்லை. எனக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. ஈறுவிடம் விசாரித்தேன்.

"என்னடா அருண்..புலி எங்கடா?"

"கவிதா புள்ள அப்பன், ராஜேந்திரன் அண்ணன கூப்டு திட்டிட்டார். அந்த புள்ள என்னடான்னா, ராஜேந்திரன் அண்ணன பாக்க வேணாம்னு சொல்லிடிச்சி.. அண்ணனுக்கு மனசே சரியில்லாம..வீட்டோட இருக்காரு..."

எனக்கு புலி மேல் பரிதாபம் வந்தது.

"புலி, கொட்ட எடுத்த புலி ஆயிடுச்சி போல" என்று சொல்லி என் நண்பன் செந்தில் சிரித்ததை என்னால் ரசிக்க முடியவில்லை. ஒரு மாதம் சென்றது.

கவிதாவுக்கும், ராசிபுரத்தை சேர்ந்த ஒரு வக்கீலுக்கும் திருமணம் நடந்தது. என்னால் நம்ப முடிய வில்லை. கல்யாணத்திற்கு நானும் சென்றிருந்தேன். கவிதா முகத்தில் பயங்கர வெட்கச் சிரிப்பு. எனக்கு, புலியின் ஞாபகம் வந்து போனது. இன்னும் ஒரு மாதம் போனது.

ஒரு நாள், புலியூரானும், ஒரு வாட்ட சாட்டமானப் பெண்ணும் சாலையில் சிரித்து பேசியபடி சென்றார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில், புதுத் தாலி தொங்கிக் கொன்டிருந்தது. எனக்குப் புரிந்தது. ஈறுவிடம் கேட்டபோது, உற்சாகமாய் பேசினான்.

"ஆமாண்னே.. அண்ணன் போன வாரம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. பொண்ணு வீட்லயே கல்யாணம் நடந்துச்சி...அதனால தான், யாருக்கும் சொல்ல முடியல..."

"அப்போ..அந்த கவிதாவ 'லவ்' பண்ணுனது?"

"அடப் போங்கண்ணே..அதெல்லாம் சும்மா டைம்-பாஸ்...இன்னுமா அத நீங்க ஞாபகம் வச்சுருக்கீங்க..அய்யோ...அய்யோ..."

அதற்குப் பிறகு நான் கவுஜை எல்லாம் எழுதுவதில்லை.

திங்கள், மே 10, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸாகும் பெரிய பேனர் தமிழ்த்திரைப்படங்கள் இப்போதெல்லாம் பூனாவிலும் கிட்டத்தட்ட 6 மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். தினசரி 1 காட்சி தான். மூன்று நாட்களுக்குப் பிறகு, எல்லா தியேட்டர்களிலும் படம் தூக்கப்பட்டு, எதாவது 1 தியேட்டரில் மட்டும் மேலும் 4 நாட்கள் ஓடும். இந்த புதிய உத்தி நல்ல பயன்கொடுக்கிறது என்றுதான் நினைக்கிறேன். பூனா மிகச்சிறிய நகரம் என்பதால், உங்கள் வீடு இருக்கும் 1 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு தியேட்டரில் புதிய திரைப்படங்கள் ரிலீஸாகக் கூடும். சனி, ஞாயிறு இரு நாட்களிலும் அரங்கங்கள் நிரம்பி விடுகின்றன. ஏதோ தமிழ் நாட்டில் படம் பார்ப்பது போன்ற ஒரு சந்தோசம். ஆனால், திரைப்படங்கள் அந்த இரண்டரை மணி நேரத்தில் சந்தோஷம் தருகின்றனவா என்பது வேறு விஷயம். அங்காடித் தெரு, பையா இரண்டும் வெவ்வேறு மாதிரியான திரைப்படங்கள். இரண்டுமே நான் ரசித்துப்பார்த்தேன். சுறா பார்க்க இருந்த சமயத்தில், வேட்டைக்காரனை ஞாபகப்படுத்தி என் மனைவி என்னை மருட்சியுறச்செய்யவே, முழுவதும் பின்வாங்கினேன். மனைவி சொல்லே மந்திரம் என்பதை சொன்னவர் கண்டிப்பாக ஒரு மகான்தான் என்று உணர்ந்துகொண்டேன். சகபதிவர்கள் ”டேய் சுறாடா....” என்று விமர்சனத்தில் அலறி, என் மனைவியின் கூற்றை உண்மையாகினார்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.




முந்தாநாள் கூட, என் மனைவியிடம் “இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்” போலாமா என்று கேட்டபோது, பின்வாங்கினாள். நான் அப்போதே சுதாரித்துக் கொண்டிருக்கவேண்டும். ”கௌபாய்படம்” என்ற ஒரு வார்த்தையே என்னை தியேட்டருக்கு இழுக்கும் மந்திரக்கயிறு போலாகியது. தனியாகவே படம் பார்க்கக் கிளம்பிவிட்டேன். என் பெரிய மகளிடம் “ஆஃபீஸில் இரவு வேலை இருப்பதாக” பொய் சொல்லி கிளம்பினேன். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் “கராடி பாலிவுட் ஈ-ஸ்கொயர்” மல்டிப்ளக்ஸ். தியேட்டர் (ஸ்க்ரீன்னு சொல்றது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்) கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சரியாக இரவு 8:50 க்கு படம் ஆரம்பித்தது.

படத்தின் ஆரம்பக்காட்சி ரொம்ப சீரியஸாக இருந்தது. டெக்ஸாஸ் முள்ளங்கி என்ற வைரம் காணாமல் போனதற்கு சிங்காரம்(லாரன்ஸ்) தான் காரணம் என்றும், அவரைத் தூக்கில் இடவேண்டுமென்றும் காட்சிகள் ரொம்ப இழுவையாக இருந்தன. எப்படா, இந்த கோர்ட் சீன் முடியும் என்று தோன்றியது. சிங்காரத்தை தூக்கிலிடும் சமயத்தில் அவரைக் காப்பாற்றுகிறார்கள் மௌலி,இளவரசு, ரமேஷ் கண்ணா மற்றும் வையாபுரி. ஜெய்சங்கர்புரம் என்ற ஊரிலிருந்து அவர்கள் வருவதாகவும், அவர்களின் ஊரில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சிங்கம் (இவரும் லாரன்ஸ் தான்) கொஞ்ச நாட்களாக காணவில்லை எனவும், அதனால் ஊரில், இரும்புக்கோட்டை கிழக்குக்கட்டை ஆட்களின் அராஜகம் எல்லை மீறி விட்டதாகவும், எனவே, சிங்காரம் சிங்கமாக நடித்தால், எதிரி ஓடிவிடுவார்கள் என்றும், அதே சமயத்தில் ஜெய்சங்கர்புரத்தில் இருக்கும் மாரியம்மன் சிலையின் கழுத்திலிருக்கும் டெக்ஸாஸ் முள்ளங்கி போன்ற வைரத்தை சிங்காரத்திற்கு பரிசாகத் தருவதாகவும் சொல்கிறார்கள் (மூச்சு வாங்கிக்கிறேன் சாமிகளா...)

அவர்கள் சொன்னதை நம்ம்ம்ம்ம்பி ஜெய்சங்கர்புரம் செல்கிறார் சிங்காரம். அங்கே சென்று அவர் தன்னை சிங்கம் என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார். உடனே ஒரு பாட்டு. எனக்கு தலைவலி அதிகமாகியது. சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுபோல், பாதி படத்திலேயே எழுந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது. என்னதான் நடக்குமென்று பார்க்கலாமே என்று நம்பிக்கையோடு உட்கார்ந்துவிட்டேன்.

கிழக்குக்கட்டை நாசரிடமிருந்து, போலி சிங்கம் எப்படி ஜெய்சங்கர்புரத்தைக் காப்பாற்றுகிறது என்பது தான் கதை. நடுவே செவ்விந்தியர்கள் கூட்டம், புதையல் வேட்டை என்று ஜாலியான சமாச்சாரங்களும் உண்டு. அப்புறம்,ஹீரோயின்கள் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். பத்மபிரியா தான் நாயகி. “உடைந்தது அவன் மண்டை மட்டும் இல்லை” என்று அடிக்கடி அவர் லாரன்ஸிடம் சொல்லும்போதெல்லாம், தியேட்டரில் ஒரு கலீஜான கமெண்ட் கேட்டிக்கொண்டேயிருந்தது.தக்காளி சூப் எப்படி வைப்பது என்று ரஸிகர்களுக்கு சமையல் குறிப்பு தருகிறார். ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். அப்புறம் எங்கே போனார்ன்னு தெரியவில்லை. வழக்கம்போல் கிளைமாக்ஸில் ஹீரோவுடன் குதிரையில் தொற்றிக்கொள்கிறார்.

ராகவா லாரன்ஸ் முடியெல்லாம் வளர்த்துக்கொண்டு, கௌபாயாக வருகிறார். கண்களில் ஒரு காந்தம் இருக்கிறது. ரஜினிகாந்த் மாதிரி கண்ட இடத்தில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவழைக்கிறார். விஜய்க்கு சரியான போட்டி (தீக்குச்சிகளை பொருத்தவைப்பதில்).

அப்புறம் லட்சுமிராய். வில்லன் நாசரின் வலதுகண்ணாக வருகிறார். பெரும்பாலும் தொடை காட்டுகிறார். வெள்ளைக்காரி நீ என்னும் பாடலில், தன் அனாடமியை ரசிகர்களுக்குக் காட்டுகிறார். அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்த 2 விடலைகள் பேசிக்கொண்டது. ”பாத்தியா, என்னா ஃஃபிகரு, சும்மாவா டோனி கவுந்தான்?” இவர்களாவது பரவாயில்லை. ஒரு காட்சியில் வையாபுரி குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராயைப் பார்த்து சொல்கிறார். “ஒரு குதிரை, இன்னொரு குதிரை மேல சவாரி செய்யறதை இப்பதான் நான் பாக்கிறேன்”...

சந்தியா...சொல்வதற்கு எதாவது இருந்தால் தானே?

படத்தின் 2 ஆம் பாதி தான் ரசிகர்களின் ஹாஷ்ய உணர்வுக்கு சரியான தீனி போடுகிறது. செவ்விந்தியராக வரும் எம்.எஸ். பாஸ்கர், அவரின் மொழிபெயர்ப்பாளர் ஷாம்ஸ், நகைச்சுவையில் கொடிகட்டியிருக்கிறார்கள். அதுவும் ஷாம்ஸ் எம்.எஸ்.பாஸ்கரின் உடல்மொழியோடு அவர் பேச்சை மொழிபெயர்க்கும் விதம், டாப் க்ளாஸ். போய் ஒரு முறை பார்த்து ரசித்துவிட்டுதான் வாருங்களேன். நாசரின் வசன உச்சரிப்பு பல சமயங்களில் எம்.ஆர்.ராதாவை நினைவுப் படுத்துகிறது. அழுக்குப்பற்களுடன் வரும் சாய்குமாரின் தோற்றம் மட்டும் புதுசு(அவருக்கு!) . வசன உச்சரிப்பு எரிச்சலோ எரிச்சல்.

மரவீடுகள், கௌபாய் உடைகள், குதிரைகள், துப்பாக்கிச்சண்டைகள் என்று அத்தனை கௌபாய் சமாச்சாரங்களையும் தந்திருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துகள். இசை ஜி.வி. ப்ரகாஷ் குமாராம். இம்சை. பாடல்கள் ஒன்றும் தேறவில்லை என்றாலும், காட்சியமைப்பில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.

சிம்புத்தேவன், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் படத்தில் தொய்வு ஏற்படுவதும், உடனே சுவாரஸ்யமாவதுமாய் வரும் ஊசலாட்டங்களை தவிர்த்திருக்கலாம். பாஸ்மார்க், ரிவால்வர் தெரு, உஷாபுரம் (USA புரமாம்), குடி குடியை ரேப் பண்ணும், தின ஒப்பாரி, அணு குண்டு ஒப்பந்தம் என்று சிம்புத்தேவன் ப்ராண்ட் ஐட்டங்களும் படத்தில் உண்டு. சிம்புத்தேவனுக்கு ஜஸ்ட் பாஸ்மார்க் கொடுக்கலாம்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - எம்.எஸ்.பாஸ்கர், ஷாம்ஸ் இல்லாவிட்டால் டவுசர் கிழியும்.

புதன், மே 05, 2010

ஜெயகாந்தன் என்னும் அற்புத ஆளுமை

அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறை காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களை கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் - ‘இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான்’ என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது.

அதற்கப்புறம் ஒன்றுமில்லை. வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான். தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கிற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஒளியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது.. நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஒளி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வெளிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.

மேற்கண்டவை ஜெயகாந்தனின் ‘நான் இருக்கிறேன்’ என்னும் சிறுகதையின் முதலிரண்டுப் பத்திகள். இந்தப் பத்திகளை நான் பலமுறைப் படித்து, கற்பனை செய்து எழுச்சியுற்றிருக்கிறேன். ஒரு கதைக்கான களத்தை இதைவிட வேறு யாரும் எளிதாக விளக்க முடியாது என்பது என் எண்ணம்.

எனக்கு ஜே.கே.வின் கதைகளைக்காட்டிலும், அவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை விரும்பிப் படிப்பேன். அதனால் தான், அவர் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்” மற்றும் “ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” நூல்கள் எனக்கு என்றும் பிடித்தமானவை.
 
                                                        
                                          

ஞானத்திற்கு பீடம் எதற்கு?

தனக்கு ஞானபீட பரிசு அளிக்கப்படுவதைப் பற்றி கேள்விப்பட்டவுடன், திரு.ஜெயகாந்தன் அவர்கள் சொன்ன கருத்து தான், மேற்கண்ட வரி.

எழுத்தாளர் ஜெயகாந்தனை அறியாத 'தமிழ் வாசகர்கள்' மிகவும் அரிதாகத் தான் இருப்பார்கள்.தான் எழுதிய கதைகளை விட, தன்னுடைய 'முன்கோப' பேச்சுகளின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜே.கே. 'வாழ்க்கை அழைக்கிறது' என்னும் நாவல் தான், இவரின் முதல் படைப்பு. ஏறத்தாழ, பெரும்பாலான புதிய எழுத்தாளர்களைப் போலவே, இவரின் முதல் கதையும், அவரின் சொந்த வாழ்க்கைக் கதையேயாகும்.'யாருக்காக அழுதான்' என்ற நெடுங்கதை, இவருக்கு சிறந்தப் புகழைத் தேடித்தந்தது. இதை திரைப் படமாக்க, பலர் முயன்றனர். அதில், நடிகர் 'சந்திர பாபு'வும் ஒருவர். சினிமாவுக்காக கதையின் முடிவை மாற்றி அமைக்க முடிவு செய்த இயக்குனர் (பெயர் ஞாபகமில்லை) அதை ஜே.கே விடம் சொன்னார்.

ஜே.கே. எழுதியக் கதைப்படி, எதற்குமே அழாத நாயகன் சோசப், தான் குற்றமற்றவன் என்பது நிரூபணம் ஆனதும், வாய் விட்டு கதறி அழுவான். அத்துடன் கதை முடிந்துவிடும். ஆனால், சினிமாவாக எடுக்கும் போது, நாயகன் அழுது கொண்டே இறந்து விடுவதாகக் காட்டினால், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த முடியும் என்று இயக்குனர் விரும்பினார்.

இவ்வாறு கதையின் முடிவை மாற்றிக் கொள்ளலாமா? என்று ஜே.கே. விடம் கேட்டார் அந்த இயக்குனர். 'ஓ, மாற்றிக் கொள்ளுங்கள். கூடவே ஒரு சின்ன திருத்தமும் செய்து விடுங்கள்.' என்று சொன்ன ஜே.கே. 'படத்தின் தலைப்பான ’யாருக்காக அழுதான்’ என்பதை 'யாருக்காக செத்தான்' என்று மாற்றுங்கள். மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்று கடுங்கோபத்துடன் கூற, அதிர்ந்து போன இயக்குனர், துரிதமாக நடையைக் கட்டிவிட்டார்.

ஜே.கே.வின் பெரும்பாலான கதைகள், முரட்டு மனிதர்களின் 'மென்மையான மனம்' குறித்தே அமைந்துள்ளது. சினிமாத் தனமான கதாபாத்திரங்கள், கதைக்களம், முடிவு என எழுதப்பட்ட இவரின் கதைகள், பெரும்பாலும் 'சென்டிமென்ட் டைப்' களே என்பது சில இலக்கியவாதிகளின் கருத்து. தனது இளம் வயதில் (ஏன், இப்போதும் கூட!) தன் மனதுக்குப் பட்ட விஷயங்களை, வெளிப்படையாக பேசி விடுவார் ஜெயகாந்தன். சம்மந்தப்பட்டவர்களை இது பாதிக்கும் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்.

ஒரு முறை, தன் நண்பர்களுடன் ஒரு மதுக் கடையில் அமர்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தார் ஜே.கே. அப்போது, நண்பர்களில் ஒருவர், அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு மேடை நாடக கலைஞரைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். "அடடா! என்ன அற்புதமான நடிகர். தன்னை அந்த கதா பாத்திரமாகவே மாற்றிக் கொள்பவர். ஒரு முறை, காந்தியாக நடிக்கும்போது, உண்மையில் மொட்டை அடித்துக் கொண்டார். என்ன ஒரு தொழில் பக்தி.."

இதைக் கேட்டதும் ஜெயகாந்தன் இவ்வாறு சொன்னார்.

"அப்படியா! அப்படி என்றால், "ஷேக் சின்ன மெளலானா" வேஷம் கட்டினால், உண்மையில் 'சுன்னத்' செய்து கொள்வாரா?"
 
நான் பிறப்பதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திக்கொண்ட இந்தக் கிழட்டுச் சிங்கம் தான் என் ஆதர்ச எழுத்தாளர்.

புதன், ஏப்ரல் 28, 2010

காதல் இனிக்குதய்யா.....

சுமித்ராவை நான் முதன்முதலில் சந்தித்தது, என் நண்பன் ஒருவனின் கம்ப்யூட்டர் சென்டரில்தான். அந்த சமயத்தில் நானும் ஒரு கம்ப்யூட்டர் கல்வி நிலையத்தை நடத்திவந்தேன். மனநோயிலிருந்து நான் வெளிவர ஆரம்பித்த நிலையில், 3 கம்ப்யூட்டர்களுடன் அதை ஆரம்பித்திருந்தோம். மாத வருமானம் மின்சாரக் கட்டணத்திற்கே சரியாகிவிடும். என் அண்ணன் அதை லாப நோக்கோடு பார்க்காமல், என் கம்ப்யூட்டர் அறிவை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டே அதை எனக்கு ஆரம்பித்துக்கொடுத்திருந்தார்.நானும், என்னை நம்பி வந்த 5 மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை சொல்லிக்கொடுத்து, கம்ப்யூட்டர் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் உசுப்பிவிட்டேன். இந்தக் காலக்கட்டத்தில்தான் தனது சென்டர் மாணவர்களுக்கு டேலி (Tally) கற்றுக்கொடுக்கச்சொல்லி என் நண்பன் வேண்டுகோள் விடுத்தான். ஏதோ கொஞ்சம் அதை நான் கற்றுவைத்திருந்தக் காரணத்தினால், துணிந்து அவன் சென்டருக்கு சென்றேன். நிற்க, என் ஊருக்கும், என் நண்பனின் ஊருக்கும் உள்ள தொலைவு 3 கி.மீ. மட்டுமே.

சுமித்ரா அங்கே அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி சொல்லித்தரும் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள்.  அவளை முதன்முதலில் பார்த்தபோது, எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை. அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று தோன்றியது.ஒன்றை மட்டும் நான் அவளிடம் கூர்ந்து கவனித்தேன். அவள் நடக்கும்போது இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து நடந்தாள். எனக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு இடது கால் போலியா நோய் தாக்கியதில் பலமிழந்திருக்கிறது.

அடுத்த நாள் நான் அந்த சென்டருக்கு சென்றபோது, யாரும் இருக்கவில்லை. சுமித்ரா மட்டும் இருந்தாள்.

“சார் இன்னும் வரல. வெய்ட் பண்றீங்களா?” என்று கேட்டாள். நான் சரியென்று தலையசைத்ததும், ஒரு நாற்காலியில் அமரச் சொன்னாள். பிறகு ஒரு கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆஃபீஸில் வேலை செய்யத்துவங்கினாள். அப்போது தான் அவளைக் கவனித்தேன். பாவாடை, தாவணியில் மிக லேசான மேக்-அப்புடன் அழகாகத் தோன்றினாள். அவளின் காலைப் பற்றி எண்ணியபோது பாவமாக இருந்தது. ஹ்ம்ம்.. யாராவது நல்லப்பையன் இவளுக்குக் கணவனாகக் கிடைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

அன்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. சுமித்ரா பற்றிய எண்ணங்களே என்னை சுற்றி, சுற்றி வந்தன. ”என்ன ஒரு எகத்தாளம், யாரோ ஒரு நல்லப் பையன் அவளுக்குக் கிடைப்பானாம். இப்படித்தான் தப்பிப்பதா?” என் மனம் என்னை கேலி செய்தது. அதே சமயம் ”அந்தப்பையன் ஏன் நானாக இருக்கக்கூடாது?” என்ற எண்ணம் தோன்றியது. மனநிலை தேறி வரும் நிலையில், இந்தப்பெண்ணைக் கல்யாணம் செய்வதின் மூலம் நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கமுடியுமே. முடிவு செய்துவிட்டேன். அவளிடம் என் காதலை சொல்லிவிடுவதென்று.

காதலை சொல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பயமாக இருந்தது. என்றாலும், சுமித்ராவை சந்திக்கும்போதெல்லாம், எனக்கு ஏற்பட்ட மனநோய் பற்றியும், அதிலிருந்து நான் மீண்டு வருவது குறித்தும் பேச ஆரம்பித்தேன். அவளும் அதை ஆர்வமாகக் கேட்டுக்கொள்வாள். அவளும் தனக்கு 3 வயதாக இருக்கும்போது, போலியோ அட்டாக் வந்ததாகவும், அது இடது காலைப் பாதித்து, ஓரிரு அறுவை சிகிச்சைக்குப்பின்னர் நடக்க முடிவதாகவும் சொன்னாள்.

என் கம்ப்யூட்டர் நிலையத்தில் படித்துவந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் (பிஞ்சிலேயே பழுத்தவன்) எப்படியோ இதை மோப்பம் பிடித்துவிட்டான். ஒரு நாள் அவன் என்னிடம் வந்து, “சுமித்ரா அக்கா பி.ஏ.படிக்கிறாங்க. அவங்க **** ஜாதி. கடவுள் பக்தி அதிகம். ஒவ்வொரு பௌர்ணமியும் அவங்க முருகன் கோயில் அடிவாரத்துல இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வருவாங்க....” என்றான். நான் சட்டென்று அவனை கையமர்த்தினேன். “இதையெல்லாம் எங்கிட்ட ஏண்டா சொல்ற?”. “எனக்குத் தெரியும்ணே நீங்க அந்த அக்காவ லவ் பண்றீங்க. இல்லாட்டி ஏன் அடிக்கடி அவங்க சென்டருக்கு போறீங்க?”. பதில் சொல்லமுடியாமல் அவனைப்பார்த்தேன்.”விடுங்கண்ணே, பாத்துக்கலாம்.” எல்லாம் என் நேரம். 15 வயது பையன் எனக்கு அட்வைஸ் பண்ணுகிறான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை என் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணும், அந்த பிஞ்சில் பழுத்தப் பயலும், சுமித்ராவை நட்பு முறையில் என் சென்டருக்கு வரவழைத்தார்கள். நானும் சுமித்ராவை வரவேற்றப் பின்னர் ஒரு டேபிளைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.என் சென்டரின் பெண் நைஸாக வெளியேப் போனாள். அந்த பிஞ்சுப்பயல் என்னைப்பார்த்து கண்ணைக்காட்டினான். பிறகு லேசானக் குரலில் சொன்னான் என்னிடம் “அண்ணே, சொல்லுங்க”.. நானோ பயத்தின் பிடியில் இருந்தேன். காதல் சொல்லும் கணங்களில், உயிர் போய் திரும்ப வரும் என்பது உண்மைதான் போலும். ”கொஞ்சம் இருடா” என்றேன். சுமித்ரா இதைக் கண்டவுடன், “என்ன பேசிக்கிறீங்க, எனக்குப் புரியல” என்றாள். நான் சற்றுத் தயங்கினேன். அப்போதுதான், அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. அந்த பிஞ்சுப்பயல் சட்டென்று சுமித்ராவை நோக்கி,”அக்கா, நீங்க எங்க அண்ணனை லவ் பண்றீங்களா?” என்றான். சுமித்ரா பயந்துபோய்விட்டாள்.

“இல்ல.. நான் அவரை என் குருவாதான் பாக்குறேன்”. மத்தபடி வேற எண்ணமெல்லாம் இல்லை.”

எனக்கோ பயங்கர அதிர்ச்சி. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு கேட்டேன்.

“நான் உங்கள லவ் பண்ண சொல்லல. என்னை கல்யாணம் பண்ணிக்க் உங்களுக்கு இஷ்டமா?”

இப்போது அதிர்ச்சி அவள் பக்கம். “எங்க அம்மா சொன்னா, யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்குவேன்”.

“அப்போ உங்க அம்மாவைப் பார்த்து நான் பேசலாமா?”..

”சரி” என்றாள்.

இரண்டு நாட்களாய் எனக்கு தூக்கம் வரவில்லை. அவளும் என்னை லவ் பண்ணுவதாய் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி குரு என்று சொல்லுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. நல்லவேளை அண்ணன் என்று சொல்லவில்லையே! 3ஆவது நாள் எனக்கு சுமித்ராவிடமிருந்து ஃபோன் வந்தது. “நான் உங்களப் பத்தி என் அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். வந்து பேசச் சொன்னாங்க. அப்புறம் உங்களை எனக்குப் புடிச்சிருக்கு”.

றெக்கக் கட்டிப்பறந்தேன். சுமித்ராவின் வீட்டுக்குப் போனேன். சுமித்ராவின் அம்மாவிடம் பேசினேன். எம்.சி.ஏ. படித்திருப்பதால் நல்ல வேலை கிடைக்குமென்றும், ஆரம்ப சம்பளமே 20 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்குமென்றும் சொன்னேன்.ஆனால், வேலை வாங்கிவிட்டுதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றும் சொன்னேன்.  அவருக்கும் என்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வந்துவிட்டது. மேலும், ”சாதிப் பிரச்சினை இருக்கிறதே” என்றார். அதை நான் சமாளித்துவிடுவதாகச் சொன்னேன்.

இது நடந்து 1 மாதத்திற்குள் நான் சுமித்ராவை நன்கு புரிந்துகொண்டிருந்தேன். அவளும் என்னை. திடீரென்று ஒரு நாள் சுமித்ரா என்னை வந்து சந்தித்தாள். தன் சொந்தக்காரர் ஒருவர் சென்னையில் லேடீஸ் ஹாஸ்டல் நடத்துவதாகவும், தான் அங்கு வார்டனாக பணிபுரிய சென்னை செல்வதாகவும் சொன்னாள். கஷ்டமாக இருந்தது. அனுப்பிவைத்தேன். 1 மாதம் கழித்து நானும் சென்னைக்கு வேலை தேடி சென்றேன். என் கம்ப்யூட்டர் சென்டர் மூடப்பட்டது.

கஷ்டப்பட்டு ஒரு வேலை வாங்கினேன். மாத சம்பளம் 20ஆயிரம் ரூபாய். மூன்று மாதங்கள் கழித்து சுமித்ராவை பதிவுத்திருமணம் செய்துகொண்டேன். வீட்டிற்குத் தெரிந்து ஃபோனிலேயேத் திட்டினார்கள். இனி உனக்கும், எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றார்கள். அழுது அரற்றினேன். சுமித்ரா தேற்றினாள். கோடம்பாக்கத்திலிருக்கும் ஒரு மாரியம்மன் கோயிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டோம். சுமித்ராவின் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள். தனிக்குடித்தனம் போனோம். சுமித்ரா வேலையை உதறினாள்.

ஏற்கெனவே நான் மனநோய் பாதிப்பிலிருந்ததைக் கணக்கில் கொண்டு, நான் சந்தோஷமாய் வாழவேண்டுமென்று என் குடும்பம் என்னை மனமுவந்து ஏற்றுகொண்டது.

சுமித்ரா வீட்டிலிருந்து வரதட்சிணையாக ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை. நாங்களே சிக்கனமாய் இருந்து நிறைய பொருட்கள் வீட்டிற்காக வாங்கியிருக்கிறோம். வாழ்க்கை சந்தோஷமாயிருக்கிறது. சௌமியாவும் (5 வயது), தீபிகாவும் (1 வயது) மகள்களாய் இருக்க, வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்?

திங்கள், ஏப்ரல் 26, 2010

பெத்துசாமி : தாத்தாவின் பேனா

ரசனின் வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது - எட்வர்ட்.

To hold a pen is to be at war - வால்டேர்.
--------------------------------------------------------------------

அப்பாடா. ஒரு வழியாக-நான் எழுத வந்த விஷயத்திற்கு, பஞ்ச் டயலாக் கிடைத்தாயிற்று.

அணுவைப் பயன்படுத்தி ஆக்கமும் செய்யலாம், அழிவும் செய்யலாம். அது, கிடைப்பவர் மனநிலையைப்பொறுத்தது. பேனாவும் அப்படித்தான். புரட்சியும் உருவாக்கலாம். சரோஜாதேவி கதைகளும் எழுதலாம். ஆனால், பேனா-எல்லோருக்கும் சுலபத்தில் கிடைத்துவிடும் வஸ்து. (அப்பாடா! தத்துவ டயலாக்கும் கிடைத்தாயிற்று)

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது-தேர்வு சமயத்தில், பேனாவில் மை தீர்ந்துபோனபோது, 4 சொட்டு இங்க் கொடுத்துதவிய நண்பனை மறக்கமுடியுமா? அதே பள்ளிக்கூடத்தில், ஏப்ரல் -1 அன்று, எல்லோரின் சட்டையிலும், பேனா மசியைத் தெளித்து, அவர்களை, முட்டாள்கள் என்று நகைக்கிறோம். (லாஜிக் இடிக்கிறதே!)

நம் அன்றாட வாழ்வில்-பேனா-எவ்வளவோ அங்கம் வகித்தாலும், இன்றைய தலைமுறை இளைஞர்கள், பையில் பேனா வைத்துக்கொள்வதில்லை. வங்கியில், படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது, “எக்ஸ்க்யூஸ், மீ...பென் ப்ளீஸ்..” என்று ஸ்டைலாக பேனா கடன் கேட்கும், இளைஞனைப் பார்க்குபோது,கோபம் பொங்கிவருவதைத் தடுக்கமுடியவில்லை. வெட்டியாகப் பேசி பொழுதுபோக்குவதற்கு, கையில் செல்ஃபோன் இருக்கும்போது, உருப்படியாய் எழுதுவதற்கு ஒரு சிறிய பேனாவைப் பையில் வைத்துக்கொள்வதற்கு என்ன வலிக்கிறது? இப்போதெல்லாம் யாரும் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.எல்லாம் செல்ஃபோனின் நினைவடுக்கில்தான் பதியவைக்கப்படுகிறது. செல்ஃபோன் தொலைந்துபோனால், கூடவே, நண்பர்களின் தொடர்பும் அற்றுப்போகிறது.

முதன்முதலாக என் (அம்மா வழி) தாத்தா, எனக்கு வாங்கித்தந்த பேனா, எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் விடியற்காலை, 5 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, திருச்சி மாவட்டத்திலிருக்கும் வீரகனூர் என்னும் ஊருக்கு புறப்பட்டுப் போனோம் நானும், தாத்தாவும். அப்போதெல்லாம், வீரகனூர் பேனா என்றால், படுபிரசித்தம். சுமார் 8 மணிக்கு வீரகனூரை அடைந்த நாங்கள், ஒரு பேனா கடைக்குச்சென்றோம். அட்டா, எத்தனைவிதமான பேனாக்கள். கடை முழுவதும் ஒரே பேனா மயம், எக்கச்சக்கக் கூட்டம் வேறு. 5 ரூபாய் பேனாவுக்காக (1985-ல்) அந்தக் கடையையே புரட்டுப்போட்டார் என் தாத்தா. இந்தப்பேனாவில், முள் சரி இல்லை. இதில், நாக்(கு)கட்டை சரியில்லை. கலர் சரியில்லை. மரை சரியில்லை, மூடி சரியில்லை.கடைக்காரர்கள் மிரண்டுபோனார்கள். இறுதியாக, ஒரு மரக்கலர் பேனாவை எனக்காக தேர்வு செய்து கொடுத்தார்.ஒரு சின்னபேனாவுக்காக 1 மணி நேரம் இத்தனை ஆர்ப்பாட்டமா? தாத்தாவிடம் கேட்டேவிட்டேன்.

”ஒரு பேனாவுல எழுதக்கத்துக்கிட்டம்னா, அது நமக்கு பழக்கமாகிடும். கையெழுத்தும் அழகாகிடும். புதுப் பேனாவை வச்சி பரிச்சை எழுதியிருக்கியா?”.ரொம்பக்கஷ்டம். புதுப்பேனாவின் முள், பேப்பரைக் கிழித்துவிடும் அபாயமிருக்கிறது. இங்க் ஒழுகலாம். அது பேப்பரை நனைத்து, விடைத்தாள் திருத்துபவரை வெறிகொள்ளச்செய்யும். உண்மை. இதை நான் என் வாழ்க்கையில் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

நான் எத்தனையோ பேனாக்களை இழந்திருக்கிறேன். வாங்கியிருக்கிறேன். என்னால், ஒற்றைப்பேனாவுடன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த முடிந்ததில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த மட்டில் என் தாத்தா, ஒரே ஒரு ஜோடி பேனாவுடன் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்.அவரின் வேலை அப்படி. என் தாத்தா ஒரு பத்திர எழுத்தர். பத்திரம் எழுதும்போது அவர் தன் பேனாவின் முள்ளை 360 டிகிரியிலும் சுழற்றி, சுழற்றி எழுதுவதைப் பார்த்து, அதே போல், நானும் ஸ்டைலாக எழுதியிருக்கிறேன்.

தாத்தாவை, பேனா இல்லாமல் என்னால் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாது.தொடக்கக்கல்வி கற்ற நாட்களில், பள்ளி செல்லும் சமயங்களில், பெரும்பாலும் தாத்தாவை, பாபு டீ கடை வாசலில் பார்ப்பேன். குளித்து முடித்து, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து இருப்பார்.தோளில் வெள்ளைத்துண்டு. நெற்றியில் விபூதிப்பட்டையிருக்கும். (வைணவர் எப்படி பட்டை அணிந்திருந்தார் என்று இப்போதுதான் எண்ணிப்பார்க்கிறேன்). நடுவில்,ஒரு பெரிய குங்குமம்.சட்டைப்பையில், இரண்டு பேனாக்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நீல நிற மசியுடன், இன்னொன்று கருப்பு நிற மசியுடன். கூட யார் இருக்கிறார் என்று கூட நான் பார்ப்பதில்லை. அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் கையை நீட்டி, “தாத்தா, காசு குடு” என்று கேட்பேன்.அருகில், இருந்த மன்னாதி உடையார் ஒரு முறை சிரித்துக்கொண்டே சொன்னார். “கப்பம் வாங்க ஆளு வந்தாச்சி. குடுத்து அனுப்பு”. தாத்தாவும், புன்னகைத்துக்கொண்டே 10 பைசா கொடுப்பார்.இது தினமும் நடக்கும். அது ஒரு மகிழ்ச்சிகாலம்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன், தனது 72 ஆவது வயதில், தாத்தா இறந்துபோனார். அப்போது எனக்கு வயது 30. எங்கள் வீட்டில் நடக்கும் முதல் சாவு அது. எனக்கு அழக்கூடத் தெரியவில்லை. அல்லது அழுகை வரவில்லை.என் அண்ணன் அழுது அரற்றினார். ”இப்போ தான் டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போனன். டாக்டர் நெஞ்சு வலிக்கு ஊசிபோட்டாரு.வீட்டுக்கு வந்து படுத்ததும், கொஞ்ச நேரத்துல, செத்துட்டார்.”

தாத்தாவின் கடைசி காலம் அவ்வளவு உசிதமாக இல்லை. பத்திரம் எல்லாம் யாரும் எழுதுவதில்லை. எல்லாம், கம்ப்யூட்டர் பிரிண்ட் தான். ஆகையால் அவருக்கு அதிகம் வேலை கிடைக்கவில்லை. பெரும்பாலான சமயங்களில் அண்ணனிடம் வந்து காசு வாங்கிச் செல்வார். அப்போதெல்லாம், என் அண்ணன் என்னிடம் சொல்லி வருத்தப்படுவார்.

தாத்தாவைப் புதைக்க சுடுகாட்டுக்கு வந்தோம். தலையில், துணியைக்கட்டி, வேட்டி, சட்டையுடன் தாத்தா குழியில் இடப்பட்டார். வெட்டியான் முருகேசன், தாத்தா பையிலிருந்த காசுகளை எடுத்துக்கொண்டான். அவர் பையிலிருந்த பேனாவை அவன் எடுக்க எத்தனித்த போது, அம்மாசி அய்யா வெடித்து அழுதபடியே, அவனைப்பார்த்துக் கத்தினார். “டேய், மசுராண்டி, அந்தப் பேனாவை எடுக்காதடா. அதுதாண்டா, அவருக்கு சோறு போட்டுச்சி. அவரு அந்தப் பேனாவோட போவுட்டும் வுடுடா.” சட்டைப்பையில் பேனாவோடு தாத்தாவைப் பார்த்த நான், எதை நினைத்தேனோ தெரியவில்லை. என் கண்களில் நீர் கரகரவென சுரந்தது. சத்தமிட்டு அழ ஆரம்பித்தேன். அண்ணன் என்னை அணைத்துக்கொண்டார்.

எல்லோரும், குழியில் மண்ணைத்தள்ள ஆரம்பித்தார்கள்.

நிற்க, இது ஒரு மீள்பதிவு.

புதன், ஏப்ரல் 14, 2010

பார்ப்பனீயமும், கர்நாடக ஸங்கீதமும்

“கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் பிராமணர்கள் தத்தெடுத்துக்கொண்டதைப்போல், சினிமாத்துறையையும் யாராவது தத்தெடுக்க முன்வரவேண்டும்” என்று ஏதோ ஒரு பேட்டியிலோ அல்லது மேடையிலோ ’உலக நாயகன்’ திருவாய்மலர்ந்தருளியிருந்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------

Tamijarassane - இந்த வார்த்தையை நீங்கள் தமிழரசன் என்று உச்சரித்தால், உங்களுக்கு ஃப்ரெஞ்ச் மொழி நன்றாகத் தெரியுமென்று அர்த்தம்.

1997 ஆம் ஆண்டு நான் வேலை தேடி பூனா வந்தபோது,திகி கிராமத்தில் என் மச்சான் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது அவர் CBI -ல் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருந்தார். அவருக்கென்று ஒரு தனி பங்களா கொடுத்திருந்தார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து அவர் வீடு திரும்ப நேரமானால், அந்த பேய் பங்களாவில் தனியாக இருக்க பயப்படுவேன்.

இப்படிப்பட்ட ஒரு நன்னாளில் என் மச்சான் தமிழரசனை எனக்கு அறிமுகப்படுத்தினார். சுருள்சுருளான தலைமுடியும், நெற்றியில் விபூதியும், அழகான புன்சிரிப்புடன் தன்னை என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார் தமிழரசன். பாண்டிச்சேரிக்காரர். அவர் வி.எஸ்.என்.எல்-லில் ட்ரெய்னீ எஞ்சினியராக கல்லூரி கேம்பஸ் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பூனாவில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருக்கும் ஒரு அழகான பங்களா ஒன்றை தங்குவதற்காக வி.எஸ்.என்.எல்.கொடுத்திருந்தது. என் மச்சானின் வீடும், தமிழரசனின் வீடும் குறைந்த தொலைவிலிருந்தன.தமிழரசனுக்கு இரவு நேர ஷிஃப்ட் ஒர்க் இல்லையென்றால், பெரும்பாலும் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன். அப்போது அவர் எனக்கு ஜோதிடம் பார்ப்பதைக் கற்றுக்கொடுத்தார். எனக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றாலும், அவர் ஆர்வத்துடன் சொல்லித்தரும்போது கேட்டுக்கொள்வேன்.

திடீரென ஒருநாள் தமிழரசனை இரவு நேரத்தில் சந்திக்கமுடியவில்லை. ”இன்றைக்கு வரலாமா” என்று நான் தொலைபேசியில் கேட்டேன்.”சாரி சார். நான் இப்போ கர்நாடக இசை கத்துக்கிட்டிருக்கேன். விஸ்ராந்தவாடியில் ஒரு கேரளாக்கார பிராமிண் மாமிகிட்ட டெய்லி கத்துக்கிறேன். அதனால வீட்டுக்கு வர ராத்திரி லேட்டாகும்” என்றார்.பின்பொருநாள் நான் பகலில் அவருக்கு ஃபோன் செய்துவிட்டு, அவரின் வீட்டிற்கு சென்றபோது, வீட்டினுள்ளிருந்து தமிழரசன் உரக்கப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். ஒரு போர்வையை தரையில் விரித்து, அதன் மேல் சம்மணமிட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார் தமிழரசன். அருகில் கருப்பாக ஏதோ பேட்டரி போல் இருந்தது. அதிலிருந்து ‘கொய்ங்க்’ என்ற சத்தம் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது.

காலிங் பெல்லை அழுத்தினேன். “கதவு தொறந்து தான் இருக்கு. உள்ளே வாங்க சார்”. உள்ளே சென்று அவர் எதிரே அமர்ந்தேன். தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். பாடி முடித்ததும் என்னைப்பார்த்து, கண்ணைச் சிமிட்டினார். “சார், பாட்டு எப்படி இருந்தது?”. எனக்கும், கர்நாடக இசைக்கும் துளியும் சம்மந்தமில்லை.இருந்தாலும், லேசாக தலையசைத்து, சூப்பர் என்று சொன்னேன். மனிதர் உற்சாகமாகிவிட்டார். இப்போ நான் பாடினது மாயமாளவகௌள என்ற ராகம். எல்லா டீச்சர்ஸும் இதைத்தான் முதல் ராகமாக சொல்லிக்கொடுப்பார்கள். ‘அலைகள் ஒய்வதில்லை’ படத்துல கூட கமலா காமேஷ், ராதாவுக்கு இதைத் தான் முதல் ராகமா சொல்லிக்கொடுப்பாங்க”. எனக்கு போரடித்தது. ”அது என்னங்க, கருப்பா, சத்தமெல்லாம் கொடுக்குது?” என்றேன். இதுக்குப் பேருதான் சார் சுருதிப்பெட்டி. எந்தக்கட்டையிலப் பாடணுமோ அதுல வச்சி பாடலாம். பாருங்க, இந்த பட்டனை, இப்படித் திருப்பினா அது ஒரு கட்டை.. ஆக்சுவலா எட்டு கட்டைன்னு எதுவும் கிடையாது. கழுதைக் கத்தல்தான் எட்டுக் கட்டைன்னு சொல்லுவாங்க”.

இதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேய் பங்களாவில் தனியாக இருந்தாலும் சரி. இனிமேல், தமிழரசன் வீட்டிற்கு வருவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டேன். என்றாலும், தொலைபேசி மூலமாக அவர் என் மீது படையெடுத்துக்கொண்டிருந்தார். “சார், நேத்து எங்க மேடம், சாருகேசி ராகத்தோட ஆரோகணம், அவரோகணம் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. லவ்லி ராகா சார். வாத்தியார் வீட்டுப் பிள்ளைப் படத்துல வருமே, “மணமாலையும், மஞ்சளும் சூடி” அதுகூட சாருகேசி தான். அப்புறம், ஸ்ரீ ராகவேந்திராவுல வர்ற “ஆடல் கலையே தேவன் தந்தது”,மன்மத லீலையை வென்றார் உண்டோ, வசந்த முல்லை போலே வந்து”.. சினிமாவுல சாருகேசி சாங்க்ஸ் எல்லாம் ஹிட் சார்”. எனக்கு தலை சுற்றியது. அதன் பிறகு போன் அலறினால், நானும் அலறிவிடுவேன்.

அதே வி.எஸ்.என்.எல்-லில் வெங்கட கிருஷ்ணன் தலைமை கணக்காளராக இருந்தார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவர் ஒரு பிராமிண். ஒரு முறை நவராத்திரி விழா அன்று வெங்கட கிருஷ்ணன் வீட்டில் கொலு வைத்திருந்தார்கள். அன்றைக்கு அவர் வீட்டிற்கு நிறைய பிராமிண் தம்பதியினர் வந்திருந்தார்கள். வந்தவர்கள், யாராவது பாட்டு பாடினால் நன்றாக இருக்குமென்று அபிப்ராயப்பட்டார்கள். வெங்கடகிருஷ்ணனின் மனைவி, ”தமிழரசன் நல்லாப் பாடுவாரே, அவரைக்கூப்பிடுறேன்” என்றார். சற்று நேரத்தில் தமிழரசன் தன் சுருதி பெட்டி சகிதம் வந்துவிட்டார்.

மாமிகளெல்லாம் வாயெல்லாம் பல்லாக அவரிடம் கர்நாடக இசைப் பாடல் பாடத்தெரியுமா என்று விசாரித்தார்கள். உற்சாக மிகுதியில். தமிழரசன் தனக்குத் தெரிந்த ராகங்களை எல்லாம் சொல்ல, மாமிகள் புல்லரித்துப் போனார்கள்.கடைசியாக அவர் ரேவதி ராகத்தில் ஒரு பாடல் பாடுவதாக முடிவாயிற்று. கணீரென, அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பிப் பாட ஆரம்பித்தார் தமிழரசன். மாமிகளிடம் இந்தப் பாடலுக்கு ஆதிதாளம் என்று க்ளூ வேறு கொடுத்தார்.

“போ, சம்போ, சிவ சம்போ, ஸ்வயம்போ....”

மாமிகள் அந்தப்பாடலை ரசித்துக்கொண்டே தொடை தட்டினார்கள். தமிழரசன் பாடி முடிந்ததும், மாமிகள் கரகோஷம் எழுப்பி அவரைப் பாராட்டினார்கள். ஒரு மாமி அவரிடம் கேட்டார். “நோக்கு கல்யாணம் ஆச்சா, அம்பி?”. தமிழரசன் இல்லையென்று தலையாட்டினார். ”எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா, சேப்பா இருப்பா, நன்னா பாடுவா. நோக்கு என்ன கோத்திரம்டா அம்பி?”. சட்டென்று தமிழரசன் முகம் இருண்டது. தலையை குனிந்து கொண்டார்.

 “இல்லை. நான் வேற ஜாதி”.

“என்ன வேற ஜாதியா? அப்போ நீ நம்மவா இல்லையா? சரி, நீ என்ன ஜாதி?”

இப்போது தமிழரசன் கண்கள் கலங்கிவிட்டன. தலையை குனிந்துகொண்டே சொன்னார். “நான் வள்ளுவர்-ங்கிற ஜாதி.”

“எது? ஜோசியம் சொல்லுவாளே அந்த ஜாதியா? அது எஸ்.ஸி தானே?”


தமிழரசன் அழுகை அதிகமானது. சட்டென்று எழுந்து தன் சுருதிப்பெட்டியுடன் வெளியேறினார். மாமிகள் எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.ஒரு மாமி, வெங்கட கிருஷணனின் மனைவியிடம் கேட்டார். “ஏண்டிம்மா, பாட்டு பாட நோக்கு வேற ஆள் கிடைக்கலையா? அதற்கு அவர் சொன்னார், “ சாரி மாமி, அவர் இந்த ஜாதின்னு எனக்குத் தெரியாது”. எனக்கு அங்கே இருப்பது அருவருப்பாகப்பட்டது. வெங்கட கிருஷணனின் மனைவி என்னிடம் கூட நான் என்ன ஜாதியென்று கேட்டிருக்கிறார். நான் என் ஜாதியை சொன்னபோது, “அப்போ நீங்க ப்ராமிண் இல்லையா? உங்க மச்சானைப்பார்த்தா ப்ராமிண் மாதிரி இருக்கிறார். நீங்க பொய் சொல்லலையே”...

அதற்குப் பின் நான் வெங்கட கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றதில்லை.

கொசுறு : என்னுடன் பணிபுரியும் ஜாகீத் மீர் ஒரு காஷ்மீரி. பெண்களுடன் இணையத்தில் அரட்டை அடிப்பது அவனின் பொழுதுபோக்கு. ஒருமுறை அவன், யு.எஸ். ஸில் சாஃப்ட்வேரில் பணி புரியும் ஒரு ப்ராமிண் பெண்ணிடம் இப்படி கேட்டிருக்கிறான்.

“நீங்க இவ்வளவு படிச்சிருக்கீங்களே..இன்னும் மனுஷன்ல ஏற்றத்தாழ்வு இருக்கிறதை ஆதரிக்கிறீங்களா?”

”அதிலென்ன சந்தேகம். ப்ராமின்ஸ் தான் எப்பவுமே இண்டெலெக்சுவலஸ். மற்றவங்களை விட உயர்வானவங்க”...

அதற்குப்பின் அவனுடைய அரட்டைத் தொடர்பிலிருந்து அந்த மாமியை அவன் நீக்கிவிட்டான்.

பார்ப்பனீயம் என்பது ஒரு கீழ்மையான குணம்.(நன்றி : டாக்டர் ருத்ரன்)



வெள்ளி, மார்ச் 26, 2010

டாக்டர் ருத்ரனும் நானும்

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன் நான் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். மூச்சு சட்டென்று நின்று போய்விடுமோ என்ற தேவையற்ற பயம் என்னை பலமாக பீடித்திருந்தது. நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டு பயப்படுத்தும். கையில் நாடி ஒழுங்காகத் துடிக்கிறதா என்று அடிக்கடி சுய பரிசோதனை செய்துகொள்வேன். பஸ்ஸில் பயணம் செய்யும்போது நெஞ்சு அடிக்கடி அடைப்பதுபோல் உணர்வு ஏற்பட்டு, தலையை மேலும், கீழும் ஆட்டிக்கொள்வேன். யாராவது அப்போது என்னைப்பார்த்தால், அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்ற வெறி ஏற்படும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓட யத்தனித்து, பலமுறை கண்டக்டர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், இறங்கி வேறு பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.

அப்போதெல்லாம்,என்னை ஏகப்பட்ட மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று வைத்தியம் பார்த்தார்கள்.அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு பயம் இருப்பதாகக் கூறி அல்ப்ராக்ஸ் மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நோய் எனக்கு தீர்ந்தபாடில்லை. நாளாக, நாளாக எனக்கு நோய் அதிகரித்துக்கொண்டே வந்தது. எல்லோரிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். சோற்றைக்கண்டால் வெறுப்பாக வரும். மீறி சாப்பிட்டால், கழுத்து நரம்புகள் இறுக்கிக்கொள்ளும். விழுங்க முடியாது. எனக்கு நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது. வீட்டைவிட்டு வெளியில்கூட வராமல் வீட்டிலேயே அடைந்துக்கிடந்தேன். விரைவில் நான் இறந்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.


கடைசி முயற்சியாக என்னை ஒரு சாமியாரிடம் கூட்டிச்சென்றார்கள். அந்த ஆள் ஒரு எலுமிச்சைப் பழத்தில் சூடம் ஏற்றி, அதை உற்றுப்பார்க்கச் சொன்னான். என்னால் அதில் கவனம் செலுத்திப்பார்க்கமுடியவில்லை. அப்புறம் தாயத்து ஒன்று கொடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொன்னான். தூக்கத்தில் அந்தத் தாயத்து என் இடுப்பைப் பதம் பார்த்தது மட்டுமே அதனால் ஆன பலன். பிறகு, என்னை குணசேகரம் என்ற ஊருக்கு அழைத்து சென்று, அந்தக்கோயிலில் பைத்தியங்களுக்கு முகத்தில் தெளிக்கும் நீரை என் முகத்தில் தெளிக்க வைத்தார் என் மாமா ஒருவர். எனக்கு அது அவமானமாக உணர்ந்தேன். அவரிடம் சண்டை போட்டுக் கத்தினேன். மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளித்தாகள். அந்தக்கோயிலில் இசைக்கப்பட்ட வாத்தியங்களில் அதிர்வுகள் தாங்காமல் வெளியே ஓடி வந்துவிட்டேன். “ பாத்தியா, பைத்தியங்களால இந்தக்கோயில் சாமி முகத்தை ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருக்கமுடியாது. அது தான் நீ ஓடி வந்துட்ட” என்று சொல்லி என் மாமா என்னை மேலும் வெறுப்பேற்றினார்.

ஊரிலிருந்து ஒருநாள் என் மாமா மகன் செந்தில் குமார் (இப்போது இவர் என் தங்கையின் கணவர்) வந்திருந்தார். அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக்கொடுத்துப் படிக்கச்சொன்னார். அது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சை முறைகள்” என்னும் புத்தகம். அப்போது எனக்கு என் மாமன் மகன் மீது பயங்கரக் கோபம் வந்தது. புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் கோபம் தணிந்தது. அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதானிருக்கிறது என்ற ஆவலில் அதைப்படிக்க ஆரம்பித்தேன்.

முற்றிலும் பிரக்ஞையின்றி, சட்டையைக்கிழித்துக்கொண்டு ரோட்டில் திரிபவர்களை மட்டுமே பைத்தியம் என்று நான் நினைத்திருந்தேன். மனதில் ஏற்படும் குழப்பங்கள் கூட ஒருவரை மனநோயாளி ஆக்கிவிடக்கூடும் என்பதை படித்தபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மிகத்தெளிவானத் தமிழில் அழகாக, மனநோய்களின் வகைகளையும், அவற்றின் குறியீடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தார் டாக்டர் ருத்ரன் அவர்கள். எனக்கு வந்திருப்பது தீவிர மனசோர்வு நோய் என்பதை, அந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொண்டேன்.

அன்று அலுவலகத்திலிருந்து வந்த என் தந்தையிடம் சென்று கேட்டேன். “நான் கடைசியா ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்கலாம்னு நெனைக்கிறேன்”. அவர் சற்று இகழ்ச்சியாக என்னைப்பார்த்துக்கேட்டார். “சைக்கியாட்ரிஸ்ட்னா, பைத்தியக்கார டாக்டர் தான?”. நான் சொன்னேன் “டாக்டர் பைத்தியக்காரர் கிடையாது. அவரைப்பாக்கப் போறவங்கதான் பைத்தியம்”. அவர் தன் நண்பர்களிடம் கேட்டறிந்து சேலத்தில் அப்துல் ஜப்பார் என்ற டாக்டரிடம் என்னைக்கூட்டிச்சென்றார். அப்புறம் நடந்ததெல்லாம் அற்புதம்.

இன்றைக்கு நான் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். பூனாவில் குடும்பத்தோடு வசிக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மாத சம்பளம் 80,000 ரூபாய். என் ஊரார் என்னைக்கண்டு வியக்கிறார்கள். என் குணமே மாறிவிட்டது. (பிகேவியர் மாடிஃபிகேசன் தியரி மூலம்). எனக்கு இப்போது எந்தப்பிரச்சினையும் இல்லை.

என் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்போது, எனக்கு ஒரு நல்ல வழி காட்டியது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சைமுறைகள்” புத்தகம் தான் என்று அறுதியிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியப் புத்தகம் அது.

இதுவரை நான் டாக்டர் ருத்ரன் அவர்களை சந்தித்ததில்லை. ஒருமுறை அவரைச் சந்திக்க கோடம்பாக்கம் பாலத்தின் கீழிருக்கும் அவரின் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை.

இதோ இந்தக்கட்டுரை வழியாக, என் மனமார்ந்த நன்றியை டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.

வெள்ளி, மார்ச் 19, 2010

’ஒன்றை’ உதயகுமார்

முன்குறிப்பு:  இந்தத் தொடரில் நான் எழுதும் சம்பவங்கள் எதையாவது நீங்கள் ஆட்சேபித்தால், தயவுசெய்து எனக்கு அதைத் தெரியபடுத்தவும். அவற்றை நான் உடனடியாக நீக்கிவிடுவேன் என்று உத்திரவாதமளிக்கிறேன்.


                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

பிரபுராஜ் பார்க்கத்தான் வளர்த்தியாய் பெரியமனிதன் போல் காட்சி அளிப்பான். ஆனால், நிஜத்தில் அவன் ஒரு சிறுவன். அதுவும் சாதாரண சிறுவன் இல்லை. குறும்புக்கார சிறுவன். அவனிடம் அடிவாங்காதவர்களை எங்கள் வகுப்பில் பார்ப்பது கடினம். (எம்.சி.ஏ. படிக்கும்போது கூட இவன் ஒரு சிறுவன் மாதிரி நடந்துகொண்டது எங்களில் பலருக்கு எரிச்சலூட்டியதுண்டு). ஆங்... உதயகுமாரை விட்டுவிட்டு பிரபுராஜ் பற்றி ஏன் சொல்லுகிறேன்? ஒருமுறை பிரபுராஜிக்கும், உதயகுமாருக்கும் சண்டை மூண்டது. பிரபுராஜின் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே! அதனால் நாங்கள் அந்த சண்டையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சட்டென்று சண்டை மிகக்கேவலமான முறைக்கு மாறியது. வேறொன்றுமில்லை. பிரபுராஜ் திடீரென்று உதயகுமாரை கற்களால் தாக்க ஆரம்பித்தான். உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில், பீதியில் உதயகுமார் வேகமாக ஓட ஆரம்பித்தார்.ஓடினார், ஓடினார், மகாத்மா காந்தி ஹாஸ்டலின் கிரிக்கெட் கிரவுண்டிற்கே ஓடினார். விட்டதா விதி. வடகிழக்கு திசையிலிருந்து பிரபுராஜினால் ஏவப்பட்ட கல்லொன்று வேகமாய் அக்னி-2 ஏவுகணை போல் பாய்ந்து வந்து உதயகுமாரின் வலது கணுக்காலைத் தாக்கி, இலக்கினைக் கச்சிதமாய் வீழ்த்திய மகிழ்ச்சியில் கீழே விழுந்தது. அடிபட்ட உதயகுமாருக்கு கோபமும், வீரமும் ஒரு சேர கிளம்ப, இப்போது உதயகுமார் பிரபுராஜை கற்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்தார். ஆனால், பிரபுராஜ் வளைந்து, வளைந்து ஓடி உதயகுமாருக்கு போக்கு காட்டினான். போதாக்குறைக்கு என்னை அடிக்க முடியாது என்று பற்களைக்காட்டி பழிப்பு காட்ட, உதயகுமாருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது. பிரபுராஜை கற்களை வீசிக்கொண்டே துரத்தியபடி, உதயகுமார் சொன்னார் “ஒன்ற காலை ஒடைக்காம விடமாட்டன்டா”. கோயம்புத்தூர் பாஷையில் இவ்வாறு உதயகுமார் சொன்னவுடன், பிரபுராஜிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஓடிக்கொண்டே பிரபுராஜ், “ஒன்றை காலை என்னடா,  ரெண்டு காலையும் ஒடைடா” என்று உதயகுமாரை வெறுப்பேற்றினான். இதுதான், உதயகுமாருக்கு “ஒன்றை” என்று நிக் நேம் வரக் காரணம். பிறகு அவர்கள் சண்டை என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரபுராஜின் ஒன்றைக்காலை உதயகுமார் உடைக்கவில்லை.

உதயகுமார் தற்போது பெங்களூருவிலிருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். அவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன், நான் செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, கல்லூரி மாணவராக என்னுடன் பழகியபோது எப்படி பேசினாரோ, அப்படியே பந்தா இல்லாமல் பேசினார். என்னைப் பற்றியும் கேட்டு, வாழ்க்கையில் முன்னுக்கு வரும்படி உற்சாகமூட்டினார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. சொந்த வீடும் (பெங்களூரில்), காரும் வாங்கியிருப்பதாக அவர் சொன்னபோது சந்தோஷமாயிருந்தது. (அட சத்தியமாப்பா..).நான் இன்னும் எதுவும் வாங்கவில்லை.

கல்லூரியில் படிக்கும்போது உதயகுமார் மற்ற நண்பர்களுடன் எதோ ஒரு ஊருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே எல்லோரும் ஒரு வட்டமான மேஜையில் அமர்ந்து டின் கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எல்லோருடைய டின்னும், கோகோ-கோலா என்று அச்சிடப்பட்ட பக்கத்தைக்காட்டிக்கொண்டிருக்க, உதயகுமார் தன்னுடைய டின்னை பார்த்திருக்கிறார். அதில் கோக் என்று அச்சிடப்பட்டிருக்க, கோபப்பட்ட உதயகுமார் கத்தினார். “டேய் நீங்க எல்லாம் கோகோ-கோலா சாப்புடறீங்க. எனக்கு மட்டும் ஏண்டா கோக் வாங்கி கொடுத்திருக்கிறீங்க”. வழக்கம்போல் பிரபுராஜ் கோக் புரையேற பயங்கரமாக சிரித்து, உதயகுமாரை வெறியேற்றினான்.

ஏம்.சி.ஏ. இறுதியாண்டில் நானும், பொன்னுசாமியும்,  தேவநாதனும்,  உதயகுமாரும் அபினிமங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போதெல்லாம், நாங்கள் இரவு நேர கம்ப்யூட்டர் லேபுக்கு அபினிமங்கலத்திலிருந்து புத்தனாம்பட்டிக்கு நள்ளிரவில், நடந்தே வருவோம், நடந்தே திரும்பிப்போவோம். உதயகுமாரிடமிருந்து நான் ப்ரோகிராம் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கலக்குங்கள் பொள்ளாச்சி சிங்கமே!!!

நாளை இடம்பெற இருப்பவர் “ப்ரூக்பாண்ட்” விஸ்வநாதன்.  ஒரே நாளில் கணக்கு வழக்கில்லாமல் டீயை மெஷின்போல் குடிப்பவர் இவர்.

புதன், மார்ச் 17, 2010

அப்துல்லாஹ்வும், மாயாவதியும்

என்னுடைய மாமா ஒருவர் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கை உடையவராக இருந்தார். பெரியாரின் பேச்சில் (அ) கருத்தில் கவரப்பட்டு பகுத்தறிவுவாதியாக மாறினார். பெரியார் அறிவித்த ‘குடுமி அறுப்புப் போராட்டத்தில்’ கலந்துகொண்டு, சில பார்ப்பனர்களின் குடுமிகளை அறுத்து, அதற்காக போலீஸாரால் தேடப்பட்டிமிருக்கிறார். அப்போது, அவர் செந்தாரப்பட்டியில் இருக்கும் எங்கள் வீட்டில் தான் ஒளிந்திருந்ததாக என் தாத்தா கூறுவதுண்டு.  அச்சமயத்தில் நான் பிறந்திருக்கவேயில்லை. பிறகு என்ன ஆனதோ, திடீரென்று ஒரு நாள் தீவிர ஆன்மீகவாதியாக மாறினார். தினமும் குளித்து, முருகனை வழிபட்டு, திருநீறு பூசி, குடும்பத்தார்க்கும் தன் கையாலே திருநீறு பூசிய பிறகே அன்றைய தினத்தைத் தொடங்குவார்.

இதுபற்றி என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: “உங்க மாமன் போலீஸுக்கு பயந்து நம்ம வீட்ல வந்து ஒளிஞ்சிக்கிட்டிருந்தான். சாமி இல்லவே இல்லைன்னு என்கிட்ட வாதம் செஞ்சான். நான் மாரியப்பன் பூசாரி கிட்ட ஒரு நாள் அவனை கூட்டிக்கிட்டு போனேன். பூசாரி கிட்டயும் உங்க மாமன் இதே மாதிரி கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தான். மாரியப்பன், உங்க மாமனை அங்கே சுவரில் மாட்டியிருந்த ஒரு முருகன் படத்தை உற்றுப்பார்க்கச் சொன்னான். உங்க மாமன் கூட சேர்ந்து நானும் அந்தப்படத்தை உற்றுப்பாத்தேன். சற்று நேரத்தில்  புகைப்படத்திலிருந்த முருகன் சிரிக்க, உன் மாமன் பயந்துபோய்விட்டான். கூடவே, முருகன் பின்னாலிருந்த மயிலும் தன் தோகையை ஆட்டியது. அதற்குப் பின் தான் உன் மாமன் கடவுளை நம்ப ஆரம்பிச்சான்.”

என்னால் சத்தியமாக இதை நம்ப முடியவில்லை.மாமாவிடமே கேட்டேன். அவர் சொன்னார். “உங்க தாத்தா சொன்னது உண்மை தான். அது மட்டுமில்லை. நான் போன ஜென்மத்தில் பிராமணனா பொறந்ததா, ஒரு ஜோசியக்காரன் சொன்னான்”.



தலையில் அடித்துக்கொண்டேன். பெரியார் எதை எல்லாம் எதிர்த்து வந்தாரோ, அதையெல்லாம் என் மாமா மனமுவந்து ஏற்றுகொண்டிருக்கிறார்.


பெரியாரின் தி.க.விலிருந்து அண்ணா பிரிந்து வந்தபோது, கிட்டத்தட்ட கடவுள் மறுப்புக்கொள்கையை கைவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புதிய கொள்கை முழக்கத்தை அறிவித்தார். முதலில் கடவுளை மறுப்பதும், பிறகு கடவுளை ஏற்றுக்கொள்வதுமாக வாழ்ந்த, வாழ்கின்ற நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் ஏற்படாத அதிர்ச்சி, பெரியார்தாசன் என்று தன் பெயரை அறிவித்துக்கொண்ட சேஷாசலம், இன்று தன் பெயரை ‘அப்துல்லாஹ்’ என்று மாற்றிக்கொண்டு,இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருகிறார் என்பதும், இனி அவர் கடவுளின் புகழைப் பரப்பப்போவதாக அறிவித்திருப்பதும்தான். அப்துல்லாஹ் எந்த அளவிற்கு, கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்துவந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், திடீரென்று அவருக்கு அவர் நம்பும் இறைவன் தன் இருப்பை எந்த நிகழ்வின் மூலம் அவருக்கு உணர்த்தியிருப்பான் என்று தெரியவில்லை.

பெரும்பாலும், வயதாக ஆக, மரணத்தின் வாசலில் இருக்கும் பலருக்கு மறு ஜென்மம் பற்றிய பயம் வரலாம். அப்படி மறுஜென்மம் என்று ஒன்று இருக்கும்பட்சத்தில், கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் என்னவாகும் என்ற பயம் வந்து, கடவுளை பலர் நம்ப ஆரம்பிப்பார்கள். அப்படி ஏதாவது ஒன்று அப்துல்லாஹ்வுக்கு நிகழ்ந்ததா தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும், கடவுளை நம்ப ஆரம்பித்துவிட்ட, முன்னாள் பெரியார்தாசனை, நாம் வாழ்த்தி வைப்போம்.

நிற்க, தற்சமயம் நான் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்து வருகிறேன். ஒருவேளை நான் எதிர்காலத்தில் கடவுளை தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டால், நான் எதனால் அப்படி மாறிப்போனேன் என்பதை அறிய நானே ஆவலாக இருக்கிறேன்.


கொசுறு: மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் பணமாலை சாத்திய பகுஜன் சமாஜ் கட்சியினர், எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு அஞ்சாமல், இனிமேல் தங்களின் தலைவிக்கு பணமாலை மட்டுமே சூட்டுவோம் என்று தில்லாக அறிவித்திருக்கிறார்கள். சபாஷ்.

ஒருத்தன் மலம் கழித்துக்கொண்டே, ஏதோ தின்று கொண்டிருந்தானாம். அந்தவழியே சென்றவன் கேட்டானாம், “ஏண்டா, பேண்டுகிட்டே திங்கறே”. அதற்கு மலம் கழிப்பவன் சொன்னானாம். “நான் தொட்டுகிட்டும் தின்பேன். வேலையைப் பாத்துக்கிட்டுப் போடா”...



புதன், மார்ச் 10, 2010

ரூமர் செல்வா

செல்வகுமாரையும், பாலாஜியையும் நீங்கள் ஒன்றாகப் பார்க்காவிட்டால், அன்று புத்தனாம்பட்டியில் இடிமழை நிச்சயம். அந்த அளவிற்கு அவர்கள் நெருங்கிய நண்பர்கள். (இந்த சமயத்தில் உங்களுக்கு கோவா திரைப்படம் ஞாபகம் வந்து, 'இது வித்தியாசமான நட்பா இருக்gay' என்று ஆச்சர்யப்பட்டால், நீங்கள் நாசமாகப்போகக்கடவது. இது வேறு மாதிரியான புனிதமான நட்பு.)



                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)


செல்வகுமாருடன் அமர்ந்து வகுப்பைக் கவனிப்பதே ஒரு பேரானந்தம். முன்னிருக்கை பெஞ்சில் பெண்கள் அமர்திருக்க, அவர் பின்னிருக்கை பெஞ்சிலிருந்து ‘இரட்டை அர்த்த’ (அ) நேரடி அர்த்த அசைவ நகைச்சுவையை அடிக்குரலில் சத்தமின்றி எடுத்து விட்டால், உம்மனாம்மூஞ்சி லட்சுமிக்குக்கூட சிரிப்பு வரும். அந்த அளவிற்கு நகைச்சுவை செய்வார். வெண்ணிற ஆடை மூர்த்தி கூட இவரிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். தவிர, ஒரு நாள் தெரியாமல் அவர் அருகில் உட்கார்ந்து  ஒரு வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது செல்வா, “மேடம் எனக்கு ஒரு டவுட், இங்க வந்து கொஞ்சம் க்ளியர் பண்ணுங்களேன்’ என்று சொன்னார். ஆனால், மேடமோ நாளை பார்க்கலாம் என்றார். செல்வா, என் காதில் சொன்னார். “மேடம் அந்த 3 நாள்ல இருக்காங்க. பார்த்தாவே டயர்டா தெரியறாங்க பாரு. கூப்பிட்டா கிட்ட வரமாட்டாங்க”. “இது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்றேன். ”போன மாசம் கூட இப்படித்தான் இருந்தாங்க. இன்னையோட கரெக்டா 30 நாள் ஆகுது”. சொல்லிவிட்டு சிரித்தார். உண்மையில் செல்வா கணக்கில் சூரப்புலி என்று அன்று தான் நான் உணர்ந்தேன். அதன்பிறகு, செல்வா அருகில் நான் அமர்வதில்லை. நிற்க, எனக்கு கணக்குப்பாடம் பிடிக்காது.


உதய கீதம் படத்தில், தேங்காய்க்குள் பாம் இருக்கிறது என்று உதார் விடுவார் கவுண்டமணி. பிறகு, அந்தப் புரளி கடைசியில் அவரிடமே வந்து சேரும். செல்வாவும் அப்படித்தான். ஒரு புரளியை சத்தமின்றி கிளப்பிவிட்டு, அப்பிராணியாய் முகத்தை வைத்துக்கொள்வார். இதனால்தான் அவருக்கு ‘ரூமர்’ என்று செல்வா என்று பெயர் வந்தது.


2004 ஆம் ஆண்டு முதன்முதலாக SakSoft என்னும் கம்பெனியில் நான் வேலைக்கு சேர்ந்தபோது, (அப்போ 1996 -லிருந்து 8 வருஷமா, நீ என்னத்தப் புடுங்கிக்கிட்டிருந்த என்று நீங்கள் கேட்டால், பொறுமை. அதைப்பற்றி ‘கும்பகர்ணன்’ என்னும் தலைப்பில் என்னைப்பற்றி எழுதும்போது, விளக்கம் தருகிறேன்). செல்வா ‘சத்யத்தில்’ வேலை பார்த்துகொண்டிருந்தார். ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து, கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேசினார். மனிதர் மாறவேயில்லை. பழச எல்லாம் மறங்க என்று அட்வைஸ் செய்தார். அவர் பல வெளிநாடுகளுக்கு சென்று வந்ததையும் அறிந்துகொண்டேன். பிற்பாடு SakSoft-ல் தாக்குபிடிக்க முடியாமல், ஓடி வந்துவிட்டேன். பிறகு ஒரு நாள் ‘டைடல்’ பார்க்கில் உள்ள ‘சத்யம்’ கம்பெனியில், நண்பர் பரணீதரன் ஏற்பாடு செய்த இண்டர்வியூவுக்கு வந்தபோது, செல்வாவைப் பார்த்தேன். அதே சிரிப்பு. அதே பூனைக்கண் பார்வை. நன்றாக பேசினார். பிறகு நடந்த இண்டர்வியூவில், ஒரு கறுத்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சொத்தையாக பதிலளித்தேன். அந்தப் பெண் என்னைப் பார்த்து சொன்னார். ‘அடிப்படையே உங்ககிட்ட சரி இல்லை. நல்லாப் படிங்க”. தலையாட்டிவிட்டு வந்தேன். பரணீதரன் திட்டினார். “யோவ் என்னய்யா, இப்படி சொதப்பிட்ட! நீ சுமாரா பதில் சொல்லியிருந்தா கூட, செலக்ட் ஆயிருப்ப. நேரா பூனாவுக்கு போஸ்டிங்க் போட்டு அனுப்பியிருப்பாங்க”. “சாரி பாஸ்” என்று தலையை சொறிந்தேன். அதன் பிறகு 2 மாதம் கழித்து, வேறு ஒரு பூனா கம்பெனியில் செலக்ட் ஆகி, இன்னமும் பூனாவிலிருக்கிறேன். விதி வலியது.


அடடா, செல்வா பற்றி சொல்லவந்துவிட்டு, சுயபுராணம் பாடுகிறேன் பாருங்கள்.


ஒருமுறை கல்லூரியில் நடந்த Quiz போட்டியில் நானும், செல்வாவும், செந்தில்குமரனும் ஓரணியாக கலந்து கொண்டோம். அதில், வெற்றி பெற நாங்கள் செய்த தகிடுத்தத்தங்கள், நித்யானந்தா செய்ததை விடவும் மொள்ளமாறித்தனம். இறுதியில் நாங்கள் தான் வென்றோம் என்பதை சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அது, ரகசியமாகவே இருக்கட்டும் விடுங்கள். அதை இப்போது சொல்லி, நிகழ்ச்சி நடத்திய பங்க்ஸ், பிரபுராஜ் மற்றும் சிவசங்கரை வெறுப்பேற்ற விரும்பவில்லை. மேலும், நாங்கள் செய்த கேப்பமாறித்தனத்தை அவர்கள் வேறு ஒரு சோர்ஸ் மூலம் அறிந்துகொண்டு எங்களைத் திட்டியதை நாங்கள் இன்னொரு சோர்ஸ் மூலம் அறிந்துகொண்டு மகிழ்ந்தோம்.


இறுதியாக, நான் செல்வாவிடம் கேட்க மறந்த (அ) இப்போது கேட்க நினைக்கும் கேள்வி.

1. அன்று இரவு, ஷண்முகப்பிரியாவின் லாகின் - இல் நுழைந்து, அவரின் பேசிக் மொழி ப்ரோகிராம்களை அழித்து, அவரைப்பற்றி தாறுமாறாக வெறும் REM Statement-ல் டைப் செய்து வைத்தது யார்?

2. லேப் செந்தில் அதைக் கண்டுபிடித்தவுடன், பிரின்சிபால் ராமலிங்கத்திடம் சென்று விசாரணையில் கலந்து கொண்டது யார் யார்?

நாளை இடம்பெற இருப்பவர் “ஒன்றை” உதயகுமார். கோக்குக்கும், கோக்கோ-கோலாவுக்கும் வித்தியாசம் அறியா அப்பிராணி இவர்.

புதன், மார்ச் 03, 2010

உ.த.எ.வும், சாநியும் பின்னே ஒரு போலி சாமியாரும்

இலங்கையில் நடந்த தமிழின படுகொலைப் போரில், விடுதலைப்புலிகள் பின்வாங்கியவுடன் (அல்லது முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டதாக சொன்னவுடன்) உத்தம தமிழ் எழுத்தாளரும், சாநியும் ஆனந்தக் கூத்தாடினார்கள். இருவருமே காந்தியை உதாரணம் காட்டி, வன்முறை எப்போதும் வெற்றி பெறாது என்று தத்துவமழை பொழிந்தார்கள். இதில் உத்தம தமிழ் எழுத்தாளர் ஒரு படி மேலே போய், காந்தியைப் பற்றி தினமும் ஒரு கட்டுரை எழுதி,தன் வாசகர்களை அடிக்கடி புல்லரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.


இப்போது இந்த இருவருமே போலிச்சாமியார் நித்யானந்தர் (எ) ராஜசேகரன் விஷயத்தில் ஒரே மாதிரியான மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள்.


“இந்து ஞான மரபை, இந்து தத்துவ மரபை, இந்து சிந்தனை மரபை நித்யானந்தர் போன்ற தனி மனிதர்களால் அழிக்க முடியாது. தர்மம், சத்தியம் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்காது” என்று சொல்லி தன் இந்து மத வெறியைத் தணித்துக்கொண்டிருக்கிறார் உ.த.எ. இந்து மதத்தின் பெயரால், இழி செயல் செய்திருக்கும் அந்தச் சாமியாரைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும், இந்து மத மரபுகள் அழிக்கப்படமுடியாது என்று ஸ்தாபிப்பதில்தான் இவருக்கு எவ்வளவு அவசியம் நேர்ந்திருக்கிறது பாருங்கள்.



சாநி- தன் இணையத்தளத்திலிருந்து, அவரின் “வாழும் கடவுளை” அப்புறப்படுத்தியிருக்கிறார். “நித்யானந்தன் என்னும் அயோக்கியன்” என்று தலைப்பிட்டு ஒரு இடுகையை இட்டு, அதை உடனடியாக நீக்கியும் இருக்கிறார். இதற்குப்பிறகு தான் காமெடி. Scandal என்னும் தலைப்பில் அவரின் வாசகர் ஒருவரின் கடிதத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் அந்த வாசகர் எழுதியிருப்பது.

“தினமும் 16 மணி நேரம் கடுமையாக உழைக்கும் நித்யானந்தர், பெண்களின்மேல், ஈர்க்கப்பட்டு தவறு செய்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. (பின்னே என்ன மயிறுக்கு இவர் ப்ரம்மச்சர்யத்தைப் போதிக்கிறாராம்). தினமும் இரவில் சிறிது நேரம் தூக்கம் வராமல் அவதிப்படும் நான் அவரிடம் சென்று யோகம் பயில இருந்தேன். இனிமேல், அதற்கு வாய்ப்பில்லை போல் தோன்றுகிறது. அவருக்கு கடவுள் நிறைய பரிசுகளை அளித்திருக்கிறார். அவர் மிகச்சிறந்த யோகா மாஸ்டர்.”

அடடா, நேர்மையாக கட்டுரை எழுதவேண்டிய இந்த இரு எழுத்தாளர்களும், இந்து மதத்தையும், நித்யானந்தரையும் காப்பாற்ற செய்யும் முயற்சிகளைப் பார்க்கும்போது, கோபம் பொங்கி எழுகிறது. ஒரு தனி மனித தவறுக்கும், இந்து மதத்திற்கும் முடிச்சுப் போட்டு, ”கவலைப்படாதீர்கள், நம் இந்து மதம் அழியாது” என்று கட்டுரை எழுதியிருக்கும் உ.த.எ. தன்னை இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவராகிறார்.

நித்யானந்தரை விட்டு விலகும் மக்கள் கூட்டம் இன்னொரு சாமியாரை நம்ப ஆரம்பிக்கும் - அவரின் தகிடுதத்தம் வெளிப்படும்வரை.

வாழ்க தமிழகம். வாழ்க தமிழ் மக்கள்.