புதன், அக்டோபர் 22, 2008

பெத்துசாமி : தாத்தாவின் பேனா

அரசனின் வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது - எட்வர்ட்.

To hold a pen is to be at war - வால்டேர்.
--------------------------------------------------------------------

அப்பாடா. ஒரு வழியாக-நான் எழுத வந்த விஷயத்திற்கு, பஞ்ச் டயலாக் கிடைத்தாயிற்று.

அணுவைப் பயன்படுத்தி ஆக்கமும் செய்யலாம், அழிவும் செய்யலாம். அது, கிடைப்பவர் மனநிலையைப்பொறுத்தது. பேனாவும் அப்படித்தான். புரட்சியும் உருவாக்கலாம். சரோஜாதேவி கதைகளும் எழுதலாம். ஆனால், பேனா-எல்லோருக்கும் சுலபத்தில் கிடைத்துவிடும் வஸ்து. (அப்பாடா! தத்துவ டயலாக்கும் கிடைத்தாயிற்று)


பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது-தேர்வு சமயத்தில், பேனாவில் மை தீர்ந்துபோனபோது, 4 சொட்டு இங்க் கொடுத்துதவிய நண்பனை மறக்கமுடியுமா? அதே பள்ளிக்கூடத்தில், ஏப்ரல் -1 அன்று, எல்லோரின் சட்டையிலும், பேனா மசியைத் தெளித்து, அவர்களை, முட்டாள்கள் என்று நகைக்கிறோம். (லாஜிக் இடிக்கிறதே!)

நம் அன்றாட வாழ்வில்-பேனா-எவ்வளவோ அங்கம் வகித்தாலும், இன்றைய தலைமுறை இளைஞர்கள், பையில் பேனா வைத்துக்கொள்வதில்லை. வங்கியில், படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது, “எக்ஸ்க்யூஸ், மீ...பென் ப்ளீஸ்..” என்று ஸ்டைலாக பேனா கடன் கேட்கும், இளைஞனைப் பார்க்குபோது,கோபம் பொங்கிவருவதைத் தடுக்கமுடியவில்லை. வெட்டியாகப் பேசி பொழுதுபோக்குவதற்கு, கையில் செல்ஃபோன் இருக்கும்போது, உருப்படியாய் எழுதுவதற்கு ஒரு சிறிய பேனாவைப் பையில் வைத்துக்கொள்வதற்கு என்ன வலிக்கிறது? இப்போதெல்லாம் யாரும் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.எல்லாம் செல்ஃபோனின் நினைவடுக்கில்தான் பதியவைக்கப்படுகிறது. செல்ஃபோன் தொலைந்துபோனால், கூடவே, நண்பர்களின் தொடர்பும் அற்றுப்போகிறது.

முதன்முதலாக என் (அம்மா வழி) தாத்தா, எனக்கு வாங்கித்தந்த பேனா, எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் விடியற்காலை, 5 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, திருச்சி மாவட்டத்திலிருக்கும் வீரகனூர் என்னும் ஊருக்கு புறப்பட்டுப் போனோம் நானும், தாத்தாவும். அப்போதெல்லாம், வீரகனூர் பேனா என்றால், படுபிரசித்தம். சுமார் 8 மணிக்கு வீரகனூரை அடைந்த நாங்கள், ஒரு பேனா கடைக்குச்சென்றோம். அட்டா, எத்தனைவிதமான பேனாக்கள். கடை முழுவதும் ஒரே பேனா மயம், எக்கச்சக்கக் கூட்டம் வேறு. 5 ரூபாய் பேனாவுக்காக (1985-ல்) அந்தக் கடையையே புரட்டுப்போட்டார் என் தாத்தா. இந்தப்பேனாவில், முள் சரி இல்லை. இதில், நாக்(கு)கட்டை சரியில்லை. கலர் சரியில்லை. மரை சரியில்லை, மூடி சரியில்லை.கடைக்காரர்கள் மிரண்டுபோனார்கள். இறுதியாக, ஒரு மரக்கலர் பேனாவை எனக்காக தேர்வு செய்து கொடுத்தார்.ஒரு சின்னபேனாவுக்காக 1 மணி நேரம் இத்தனை ஆர்ப்பாட்டமா? தாத்தாவிடம் கேட்டேவிட்டேன்.


”ஒரு பேனாவுல எழுதக்கத்துக்கிட்டம்னா, அது நமக்கு பழக்கமாகிடும். கையெழுத்தும் அழகாகிடும். புதுப் பேனாவை வச்சி பரிச்சை எழுதியிருக்கியா?”.ரொம்பக்கஷ்டம். புதுப்பேனாவின் முள், பேப்பரைக் கிழித்துவிடும் அபாயமிருக்கிறது. இங்க் ஒழுகலாம். அது பேப்பரை நனைத்து, விடைத்தாள் திருத்துபவரை வெறிகொள்ளச்செய்யும். உண்மை. இதை நான் என் வாழ்க்கையில் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

நான் எத்தனையோ பேனாக்களை இழந்திருக்கிறேன். வாங்கியிருக்கிறேன். என்னால், ஒற்றைப்பேனாவுடன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த முடிந்ததில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த மட்டில் என் தாத்தா, ஒரே ஒரு ஜோடி பேனாவுடன் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்.அவரின் வேலை அப்படி. என் தாத்தா ஒரு பத்திர எழுத்தர். பத்திரம் எழுதும்போது அவர் தன் பேனாவின் முள்ளை 360 டிகிரியிலும் சுழற்றி, சுழற்றி எழுதுவதைப் பார்த்து, அதே போல், நானும் ஸ்டைலாக எழுதியிருக்கிறேன்.

தாத்தாவை, பேனா இல்லாமல் என்னால் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாது.தொடக்கக்கல்வி கற்ற நாட்களில், பள்ளி செல்லும் சமயங்களில், பெரும்பாலும் தாத்தாவை, பாபு டீ கடை வாசலில் பார்ப்பேன். குளித்து முடித்து, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து இருப்பார்.தோளில் வெள்ளைத்துண்டு. நெற்றியில் விபூதிப்பட்டையிருக்கும். (வைணவர் எப்படி பட்டை அணிந்திருந்தார் என்று இப்போதுதான் எண்ணிப்பார்க்கிறேன்). நடுவில்,ஒரு பெரிய குங்குமம்.சட்டைப்பையில், இரண்டு பேனாக்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நீல நிற மசியுடன், இன்னொன்று கருப்பு நிற மசியுடன். கூட யார் இருக்கிறார் என்று கூட நான் பார்ப்பதில்லை. அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் கையை நீட்டி, “தாத்தா, காசு குடு” என்று கேட்பேன்.அருகில், இருந்த மன்னாதி உடையார் ஒரு முறை சிரித்துக்கொண்டே சொன்னார். “கப்பம் வாங்க ஆளு வந்தாச்சி. குடுத்து அனுப்பு”. தாத்தாவும், புன்னகைத்துக்கொண்டே 10 பைசா கொடுப்பார்.இது தினமும் நடக்கும். அது ஒரு மகிழ்ச்சிகாலம்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன், தனது 72 ஆவது வயதில், தாத்தா இறந்துபோனார். அப்போது எனக்கு வயது 30. எங்கள் வீட்டில் நடக்கும் முதல் சாவு அது. எனக்கு அழக்கூடத் தெரியவில்லை. அல்லது அழுகை வரவில்லை.என் அண்ணன் அழுது அரற்றினார். ”இப்போ தான் டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போனன். டாக்டர் நெஞ்சு வலிக்கு ஊசிபோட்டாரு.வீட்டுக்கு வந்து படுத்ததும், கொஞ்ச நேரத்துல, செத்துட்டார்.”

தாத்தாவின் கடைசி காலம் அவ்வளவு உசிதமாக இல்லை. பத்திரம் எல்லாம் யாரும் எழுதுவதில்லை. எல்லாம், கம்ப்யூட்டர் பிரிண்ட் தான். ஆகையால் அவருக்கு அதிகம் வேலை கிடைக்கவில்லை. பெரும்பாலான சமயங்களில் அண்ணனிடம் வந்து காசு வாங்கிச் செல்வார். அப்போதெல்லாம், என் அண்ணன் என்னிடம் சொல்லி வருத்தப்படுவார்.

தாத்தாவைப் புதைக்க சுடுகாட்டுக்கு வந்தோம். தலையில், துணியைக்கட்டி, வேட்டி, சட்டையுடன் தாத்தா குழியில் இடப்பட்டார். வெட்டியான் முருகேசன், தாத்தா பையிலிருந்த காசுகளை எடுத்துக்கொண்டான். அவர் பையிலிருந்த பேனாவை அவன் எடுக்க எத்தனித்த போது, அம்மாசி அய்யா வெடித்து அழுதபடியே, அவனைப்பார்த்துக் கத்தினார். “டேய், மசுராண்டி, அந்தப் பேனாவை எடுக்காதடா. அதுதாண்டா, அவருக்கு சோறு போட்டுச்சி. அவரு அந்தப் பேனாவோட போவுட்டும் வுடுடா.” சட்டைப்பையில் பேனாவோடு தாத்தாவைப் பார்த்த நான், எதை நினைத்தேனோ தெரியவில்லை. என் கண்களில் நீர் கரகரவென சுரந்தது. சத்தமிட்டு அழ ஆரம்பித்தேன். அண்ணன் என்னை அணைத்துக்கொண்டார்.

எல்லோரும், குழியில் மண்ணைத்தள்ள ஆரம்பித்தார்கள்.

நிற்க, இது ஒரு மீள்பதிவு.

வெள்ளி, அக்டோபர் 10, 2008

செல்வி. பெ.சௌம்யா - ஒரு இம்சை அரசி அறிமுகம்



இன்றையத் தேதிக்கு, செல்வி பெ.சௌம்யாவின் வயது மூன்று ஆண்டுகள் மற்றும் 53 நாட்கள். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, அவரைப் பள்ளிக்குக் கூட்டிச்சென்றார் சௌமியாவின் தந்தை. சுட்டி டிவியில் வரும் ’டோராவின் பயணங்கள்’ தொடரின் தீவிர ரசிகரான சௌமியா, தன் தந்தையிடம் ’அய்யா, குள்ளநயி வவுமா? என்றார். ’வராது கண்ணு. வந்தா திருடக்கூடாது குள்ளநரின்னு சொல்லிடலாம்’ என்று சொன்னார் அவரின் தந்தை. ஹோண்டா ஸ்ப்லெண்டர் ப்ளஸ் வண்டியின் பெட்ரோல் டேங்கர் மேல், தன் தாயாரால் உட்கார வைக்கப்பட்டார் செல்வி. பெ.சௌம்யா அவர்கள்.

‘பாப்பா, எங்கப்போறீங்க தெரியமா? என்று தன் தாயார் கேட்டதும், “ஃபூலுக்கு’ என்றார் சௌ. ‘அங்கபோயி அடம் பண்ணக்கூடாது. உச்சா வந்தா, பாத்ரூம் எங்கன்னு கேட்டு போகணும். சரியா?’ ‘சரிம்மா’ என்று சொல்லி தலையாட்டினார் சௌ. மேலும், அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, ‘அய்யா, போலான்யா’ என்று கத்தினார். வண்டி புறப்பட்டது.

பள்ளி செல்லும்வரை, தெருவை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்தவர், பள்ளியை நெருங்கியதும், சற்றே சீரியஸானார். ’விஸிடெக் அகாடமி’ என்னும் வரவேற்புப்பலகையை விசித்திரமாகப் பார்த்தவாறே, வண்டியிலிருந்து இறக்கப்பட்டவர், ‘அய்யா, டூக்கு’ என்று சொல்லி, கைகள் இரண்டையும் மேலே தூக்கினார். ‘அடடா, நடந்து வாம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவரைத் தூக்கிக்கொண்ட தந்தை, பள்ளியின் வாயில் நோக்கி நடந்தார்.

‘ஆயியே..’ என்று அவர்களை வரவேற்றுப்பேசினார் தலைமையாசிரியை. ‘ஆஜ் ஜல்தி ஆயியே..கியாரா..பாரா பஜே பர். க்யோங்கி, ஸ்கூக் கேலியே ஏ நயா ஹை நா?’ தன் அரைகுறை ஹிந்தி அறிவை வைத்துப் புரிந்து கொண்டார் செல்வி.சௌமியாவின் தந்தை. அதாவது, செல்வி. சௌ அவர்கள் பள்ளிக்குப் புதியவராம். அதனால், சீக்கிரமாக - அதாவது 11 அல்லது 12 மணிக்குள் சீக்கிரம் வந்து கூட்டிச்செல்ல வேண்டுமாம்.

‘டீக் ஹை மேடம்’ என்றார்.

‘ஆவோ பேட்டா’ என்று சொல்லி தலைமையாசிரியை கையை நீட்டியவுடன், ’வீல்’ என்று அலறிக்கொண்டு தன் தந்தை மீது பாய்ந்தார் செல்வி சௌ. அவரைத்தூக்கித் தோளில் போட்டு, முதுகில் தட்டிக்கொடுத்தபடியே அவரின் தந்தை சொன்னார். ‘அழுவக்கூடாது. நிறுத்து’. ‘அய்யா.அய்யா...’ என்று தேம்பித்தேம்பி அழுத சௌமியாவை, தட்டிக்கொடுத்தார் சௌவின் தந்தை.

‘இன்கோ ஹிந்தி நஹி ஆத்தா ஹை க்யா?’ என்று கேட்ட த.ஆ.விடம், ‘நஹி மேடம். சிர்ஃப் தமிழ் ஆத்தா ஹை’ என்றார் அவரின் தந்தை.

’ப்ரதீபா’என்று குரல் கொடுத்தார் த.ஆ. உள்ளே இருந்து வந்த ப்ரதீபா (நர்சரி வகுப்பின் ஆசிரியை) செல்வி சௌமியாவை, அவரின் தந்தையிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச்சென்றார். கதவு சாத்தப்பட்டது. உள்ளேயிருந்து செல்வி.சௌ.வின் அழுகைக் குரல் தெளிவாகக்கேட்டது.

இரவு அலுவலகத்திலிருந்து வந்த தந்தையைக் கண்டவுடன் உற்சாகமானார் சௌ. அவரின் தந்தை ஆடையை மாற்றும்போது லுங்கி கொண்டு வந்து கொடுத்தார்.

அசதியில் சோஃபா மீது அமர்ந்த தந்தையின் தோளில் உட்கார்ந்துகொண்டார் சௌ. ‘கண்ணு, அய்யாவ தொந்தரவு செய்யாத, பாவம் அவளே (?!) களச்சிப்போயி வந்துருக்கா’ என்றபடி அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் சௌமியாவின் தாயார்.

செல்வி சௌமியாவிடம் ‘கண்ணு, உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?’ என்ற தந்தையிடம் ‘இல்லய்யா’ என்று தலையை இடம்வலமாக ஆட்டினார் சௌ. ‘ஏம்மா, புடிக்கல?’ பதில் சொல்லத்தெரியாமல் சிரித்தார் சௌமியா. ‘அவங்க ஹிந்தியில பேசுறது, இவுலுக்கு புரியாது இல்லயா. அது தான், பிடிக்கலைன்னு சொல்றா போலருக்கு’ என்றார் தாயார்.

தனக்குப்புதிதாகக் கொடுக்கப்பட்டப் பாடப் புத்தகங்களை பிரித்து ஆர்வமாகப்பார்த்த சௌ. ’இது என்னாய்யா?’ என்று ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தார். எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்த செல்வி.சௌமியாவின் தந்தை, திடீரென அவரிடம், ‘கண்ணு, அய்யா, எங்க போய்ட்டு வர்றாரு?’
’ஆபீஸ்’
‘பாப்பா?’
‘ஃப்பூல்”
’அய்யா?’
’ஆஃபீஸ்’
’பாப்பா’
‘ஃபூல்’

மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தார் சௌமியாவின் தந்தை.

கேட்டுக்கொண்டே வந்த சௌமியாவின் தாயார், ‘ஏண்டி அழிச்சாட்டி (அழிச்சாட்டியம் செய்கிறவர்) புள்ளய நக்கல் பண்ற?’ என்று சொல்ல, ‘அம்மா, அய்யா நக்கல் மா’ என்று சொல்லி சிரித்தார் சௌமியா.


புதன், அக்டோபர் 08, 2008

2011-ல் நம்பர்-1 இலக்கியவாதி யார்?

வேறு யாருமில்லை, அடியேன் தான். எதற்கு சிரிக்கிறீர்கள்? சாதாரணத் தமிழில் எழுதுபவன் எப்படி இலக்கியவாதியாக முடியுமென்றா?

2011-ல் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ரித்தீஷ் இவர்களெல்லாம், தமிழகத்தின் முதலமைச்சர் ஆக முடியுமென்றால், என்னால், தமிழில் நம்பர் 1 இலக்கியவாதியாக முடியும்தானே? (நீ ‘இலக்கியவியாதியாகத்தான் முடியும் என்று நீங்கள் நினைப்பது, எனக்குத் தெரியும்).

சரி, அரசியலில் நுழையத்தான் எந்த விதமானத் தகுதியும் அவசியமில்லை. ஆனால், இலக்கியத்திற்கும் அப்படித்தானா? அப்படியில்லை.

எனில், நான் இலக்கியவாதியாக மாற எடுத்துக் கொண்ட பயிற்சிகள் யாவன?

1. இதுவரை நான் தமிழில் ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. (இது எப்படி தகுதியாகும் என்று நீங்கள் கேட்கலாம். தமிழைக் கொலை செய்து-அந்தப் பாவத்தை நான் இதுவரை சுமந்ததில்லை)

2. எனக்கென்று ஒரு இணையத்தளத்தைத்திறந்திருக்கிறேன். (பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் சிலேட்டில் எழுதப்பழகுவதைப்போல, இணையத்தில் இலக்கியம் எழுதப்பழகுவது சாலவும் நன்று என்கிறார் இணைய முன்னோடி ஒருவர்)

3. என்னுடைய நண்பர்கள் நிறையபேர் என்னுடைய எழுத்தை ரசிக்கிறார்களென்பது என் தாழ்மையான அபிப்ராயம் (ஒவ்வொரு முறை - இடுகை (அ) மொக்கைப்பதிவு இடும்போதெல்லாம், என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரிவிப்பேன். பிறகு அபிப்ராயம் கேட்பேன். பெரும்பாலும், அவர்களின் பதில் இவ்வாறே அமையும் - “ஏன் ஆஃபீஸில் இப்பெல்லாம் வேலையே தர்றதில்லையா?”)

4. இலக்கியமென்றால் என்னவென்று தெரியாமல் கொஞ்ச நாள் தெரு பொறுக்கிக்கொண்டிருந்தபோது, திவாகரன் தம்புவிடம் சென்று, இலக்கியமென்றால் என்னவென்று கேட்டேன். அது ஒரு காலம் காட்டும் கண்ணாடி என்றார். (ஆக, இலக்கியமென்றால், அடியேனுக்கு என்னவென்று தெரியும்)

5. இலக்கியவாதி யார்? (இது தான் எனக்கு பதில் தெரியாத கேள்வி. என்றாலும், நான் சில அனுமானங்களை வைத்திருக்கிறேன். சில கலைச்சொற்களை அடிக்கடி தன் எழுத்தில், ஆங்காங்கே போட்டு நிரப்பும் வல்லமை வேண்டும்.பின் நவீனத்துவம்,விளிம்பு, கட்டுடைத்தல், இருத்தலியம், படிமம், கூறு, அவதானம், உள்ளீடு...போதாதா அய்யா?)

6. அரசியல்வாதிகளுக்கு விழும் திட்டுபோலவே, சமயத்தில் இலக்கியவாதிகளுக்கும் நிகழுமென்பது எனக்குத் தெரியும். (என் பரம்பரை பற்றி அவதூறாக யாராவது திட்டினால், “காய்ச்ச மரம் தானே கல்லடிபடும்” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன்)

7. யாராவது என்னை வணிக எழுத்தாளன் என்று சொன்னால், எனக்கு கொலைவெறி கிளம்பிவிடும். (நிற்க, என் எழுத்தை மக்கள் பரவலாகப்படித்தால் தானே, நான் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியும். என்றாலும், என்னை நீங்கள் இலக்கியவாதி என்று அழைத்தால், நான் பரவசப்படுவேன்.)

ஆகவே, என்னையும் ஒரு இலக்கியவாதியாக கருதி, என் எழுத்துக்களை நீங்கள் படிக்கவேண்டுமாய், தமிழ் கூறும் இணைய உலகத்தை, வேண்டி, விரும்பி கேட்டுக் கொல்கிறேன் (கொள்கிறேன் அல்ல!)

வெள்ளி, மே 02, 2008

பாய் கடை திண்ணை (7)


பாய் கடைக்கு அருகில்தான் என்னுடைய அண்ணன் ரெங்கநாதனின் ”கணினி அச்சகம்” இருந்தது. அங்கே, தாண்டவன், நடராஜ், அன்பழகன், வெங்கடேஷ் ஆகியோர் வேலை செய்து வந்தார்கள். இதில் தாண்டவன் தவிர, மீதி எல்லோரும் விடலைப் பயல்கள்.
தாண்டவனுக்கு வயது 48 இருக்கும். அவருக்கு காது கேட்காது. பிறவியிலிருந்து அப்படி அல்ல. தாண்டவன் 9ஆம் வகுப்பு படிக்கும்போது, அவருக்கு காது வலி வந்திருக்கிறது. அவருடைய அம்மா, எருக்கம் இலையை, விளக்கெண்ணையில் விட்டு, காய்ச்சி, அதை அவரின் காதில் ஊற்றி இருக்கிறார். அடுத்த நாள் பள்ளியின் சார்பாக, அருகிலிருக்கும் புளியஞ்சோலைக்கு எல்லோரும் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அங்கே, தனது செவியொலித்திறனை இழந்ததாக அடிக்கடி தாண்டவன் நினைவுகூர்வார்.
தாண்டவனுக்கு ஆழ்ந்த தமிழறிவு உண்டு. நொடிப்பொழுதில் கவிதை எழுதுவார். ஊரில் ஏதாவது கோயில் திருவிழா வந்தால், என் அண்ணனின் அச்சகத்தில் தான் நோட்டீஸ் அடிக்க வருவார்கள். தாண்டவனிடம் விஷயத்தை சொன்னால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில் நோட்டீஸ் வாசகங்கள் தயாராகிவிடும்.விநாயகர் துதியில் ஆரம்பிப்பார்.
”ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்திரன் இளம்பிறைபோலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தனை
புந்தியில் வைத்தடி போற்றுகிறேனே.....”
இது போல பல பாடல்கள் இவருக்கு அநாசயம். கதை, கவிதை, நகைச்சுவை என்று பல விஷயங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி சன்மானம் பெறுவார்.
அன்று, நான் பாய் கடையில் அமர்ந்திருந்தபோது, நடராஜ் வந்து, “தாண்டவன் உங்களைப் கூப்புடுறார்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
நான், அச்சகத்திற்குள் நுழைந்தேன். அங்கே, கணினி அறையில் என் அண்ணன், “பேஜ் மேக்கரில்” ஏதோ ஒரு மேட்டரை தட்டச்சு செய்துகொண்டிருந்தார். தாண்டவன் ஒரு பெஞ்சில் கையில் பேனா, பேப்பருடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்த தாண்டவன், “ஏய், இங்க வாடா” என்றார்.
“என்னய்யா?” என்றேன் சைகையில்.
“அதாகப்பட்டது, கவிதை எப்படி எழுதணும்னு கேட்டியே, இங்க ஒக்காரு சொல்லித்தரேன்.”
நானும் பெஞ்சில் அமர்ந்தேன்.
“வெண்பா. இது ஒரு செய்யுள் வகை. இதோட இலக்கணம் என்ன தெரியுமா? அதாகப்பட்டது, ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி, வேற்றுத்தளைகள் விரவாமல், ஈற்றுச்சீர் ஈற்றடி “நாள், மலர், காசு, பிறப்பு” என்னும் அலகிடும் வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடியும்.”
அவரைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டேன்.
“எனக்கு செய்யுள் எல்லாம் வேணாம். புதுக் கவிதை சொல்லி கொடு”...சைகையில் சொன்னேன்.
சைக்கிள் டயரின், வால் டியூபை பிடுங்கி விட்டது போல் சிரித்தார்.
”ஆஹா.. இந்த ஆள் மறுபடியும் காத்தப் புடுங்கி வுட்டுட்டான்யா” என்று சலித்துக் கொண்டான், ஆஃப்செட் மெஷினில் வேலை செய்துகொண்டிருந்த நடராஜன்.
”ஆய்.. இந்த புதுக் கவிதை ரொம்ப சுலபம்டா... இப்பப் பாரு..”
“ஏழைக்குப் பசிக்கவில்லை.
ஒருவேளை சாப்பாடு
மிச்சமென்று
சந்தோசப்பட்டான்.
பணக்காரனுக்குப் பசிக்கவில்லை.
வயிற்றுக் கோளாறென்று
வைத்தியரிடம் சொல்லி
வருத்தப்பட்டான்.”
அசந்து போய் கேட்டேன். ”யோவ்..எப்படியா இப்படி எல்லாம் கவிதை எழுதற?”
"வீட்டுல இருந்து வரும்போது, எங்கேயாவது சலூன்ல இருந்தப் பத்திரிகையில, படிச்சிட்டு வந்திருப்பாரு”, என்றான் நடராஜ் நக்கலாக.
சிரித்துவிட்டேன். தாண்டவன் என்னைப் பார்த்துவிட்டு, நடராஜனைப் பார்த்தார். பிறகு என்னிடம் கேட்டார்.
“ஆய். கவுறு (கயிறு) என்னடா சொல்றான்?”.
(கவுறு - பெயர்க் காரணத்தை நான் இங்கே சொல்ல முடியாது. ஷேம் ஷேம்.. பப்பி ஷேம்...)
“கவிதை சூப்பர்னு சொல்றான்”... மீண்டும் கைசாடை காட்டினேன்...
“அதான பாத்தேன்... காப்பி அடிச்ச கவிதைனு சொல்வான்னு நெனச்சேன்.”
நான் நடராஜைப் பார்த்தேன்.. அவன் கண்கள் சிரித்தன. நானும் அப்படியே செய்தேன்..
(தொடரும்)


வியாழன், ஏப்ரல் 24, 2008

பாய் கடை திண்ணை (6)

பாய்க்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்தவன் பெயர் முகமது யஹியா, 10 வயது. அடுத்தது பெண். பாத்திமா பீவி, 8 வயது. கடைசியாக ஒரு பையன் முகமது யாசின்.ஒன்றரை வயது.

அன்று நான் பாய் கடைக்கு வந்தபோது, பாய் சுருட்டு போட்டுக்கொண்டிருந்தார். அவரின் எதிரே அவரின் கடைசி பையன், பாயைப்
போலவே சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். பாய் அவனுக்கருகில் சில ப்ளாஸ்டிக் பொருட்களை பரப்பிக் கொண்டிருந்தார்.

“இது எதுக்கு மொதலாளி...”

”அவனுக்கு இப்போ பல்லு மொளைக்கிற வயசு. எவுறு ஊறிக்கிட்டு இருக்கும். எதையாவது கடிக்கத் தோணும். அதான், இத குடுக்குறன்...விடுங்க, அவன் பாட்டுக்கு கடிச்சிக்கிட்டு இருக்கட்டும்.”

யாசின் என்னைப்பார்த்து, தன் பொக்கைப் வாயைக்காட்டிச் சிரித்தான். பிறகு, பிளாஸ்டிக் சிங்கத்தை வாயில் வைத்து கடிக்க ஆரம்பித்தான். அவன் வாயிலிருந்து ஜொள்ளு ஊற்றியது.

திண்ணையின் மேல் படியில், பாய்க்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டேன்.

”பாய், யாசின் உங்கள ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கறான்.”

”இதுலயும் ஜெராக்ஸ் தானா? சரி, நீங்க எப்போ கல்யாணம் பண்ணி, ஒரு பொட்டப்புள்ளய பெத்து, என் பையனுக்கு கட்டிக் குடுக்கப்போறீங்க?”

“ரொம்ப கஷ்டம் மொதலாளி”

“இப்படியே, கிரிக்கெட், கம்ப்யூட்டர் சென்டர்னு ஊரு சுத்துனா, கண்டிப்பா கஷ்டம் தான்”....

லேசாக எனக்கு உறுத்தியது. ஒன்றும் பேசத் தோன்றவில்லை.பாய் கடை எதிரே இருக்கும் குறுகிய சந்தைப் பார்த்தேன்.அங்கே,என் தாத்தா வந்துகொண்டிருந்தார். பாய் என்னைப் பார்த்து, ஒரு விஷமப் புன்னகையைப் படரவிட்டார். எனக்குப் புரியவில்லை.

என் அம்மா வழி தாத்தா, ஒரு பத்திர எழுத்தர்.அவரின் வீடு அந்த சந்தில்தான் இருந்தது. அவர் எங்கள் அருகில் வந்ததும், பாய் அவரிடம் கேட்டார்.

“ஏன் மாமா, பேசாம பெத்துசாமிக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சா என்ன? அப்பவாச்சும் உருப்படுவானான்னு பாக்க்கலாம்”

வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக்கொண்டே, என் தாத்தா சொன்னார்.
“மொதல்ல அவன ஒரு நல்ல வேலைய பாக்க சொல்லு.” சொல்லிவிட்டு தெற்கு நோக்கி நகர்ந்து போனார்.


“பாருங்க மொதலாளி, 70 வயசாகியும் இன்னும் பத்திரம் எழுதறார். தம்மம்பட்டி சப்-ரெஜிட்ரார் ஆபீஸுக்கு போறதுக்கு சின்னப்பையன் மாதிரி பஸ் பிடிக்கப் போறார். நீங்களும் தான் இருக்கீங்களே..”

”இப்ப அவரக் கூப்பிட்டு என்னை ஏன் பாய் இன்சல்ட் பண்றீங்க?”

”சும்மாதான். பொழுதுபோக வேணாமா?”.

எங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் யாசினை மறந்து போனோம்.சட்டென்று யாசினைப் பார்த்த நான் பதறிப் போனேன்.

அங்கே அவன் மூச்சா போயிருந்தான். கூடவே மலம் கழித்திருந்தான். தன் இடது கையால், மலத்தைப் பிசைந்து, தன் அழகிய கோலிகுண்டு கண்களால், அதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அய்யே...பாய்..என்ன இது? சொல்லிவிட்டு, படியை விட்டுக் குதித்து, ரோட்டில் நின்றேன். பாய் பதட்டப்படவில்லை.

“சைதானி..சைதானி..”

குரல் கேட்டு, உள்ளே அமர்ந்து சுருட்டு போட்டுக்கொண்டிருந்த பாயின் மனைவி ஓடி வந்தார்.

“பாரு இவன”..

பாயின் மனைவியும் பதட்டம் அடையவில்லை. யாசினை கொத்தாக தூக்கி, வீட்டுக்குள் கொண்டு போனார்.5 நிமிடம் கழித்து வாளியும், துடைப்பமுமாக வந்து,அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டுப் போனார்.

மறுபடியும் முதல் படிக்குத்தாவி, பாய் அருகில் அமர்ந்தேன்.

”பாய் உங்களுக்கு, யாசின் மேல கோவம் வரலயா?”

“அவன் சின்னப்பையன் மொதலாளி. எரும மாதிரி வளந்த நீங்களே என் பேச்ச கேக்கமாட்டேங்கிறீங்க.. ஒன்றரை வயசு பையன் அவனுக்கு சொன்னாப் புரியவா போவுது”.

இதுக்கு நான் கேக்காமலேயே இருந்திருக்கலாம்.

பாய் தொடர்ந்தார்.

“மொதலாளி,எங்க இஸ்லாத்துல சொல்வாங்க. மல்யுத்ததில் வெற்றி பெறுபவன் மாவீரன் அல்ல. கட்டுக்கடங்கா கோபம் வரும்போது
அடக்கிகொள்பவனே மாவீரன்னு
...”

பிடறியில் அறைந்த மாதிரி இருந்தது.

(தொடரும்)

புதன், ஏப்ரல் 23, 2008

பாய் கடை திண்ணை (5)

பாய் ஒரு கடுமையான உழைப்பாளி. நானோ படுசோம்பேறி.

ஜெராக்ஸ் போடுதல், இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்றல், சுருட்டு சுற்றுதல், டி.வி. டெக் வாடகைக்கு விடுதல் போன்ற பலவேலைகளை பாய் செய்துவந்தார். அவரை நான் “முதலாளி” என்று அழைப்பது வழக்கம். அவரும் பதிலுக்கு என்னை “முதலாளி” என்று அழைப்பார். காரணம், நான் ”கணினி கல்வி நிறுவனம்” ஒன்றை பாய் கடை அருகில் நடத்தி வந்தேன். நிறுவனம் என்றால், எதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இரண்டு இற்றுப் போன பழைய கணினிகள் மூலம், என்னுடைய கிராமத்து மக்களுக்கு தகவல்- தொழில் நுட்பம் போதித்து, அவர்களுக்கு கணினி பற்றிய விழிப்புணர்வை உசுப்பி வந்தேன் என்று சொன்னால், என் கிராம மக்களின் (அதோ) கதியை உங்களால் ஐயம் திரிபற உணர முடியும். நானும் என்னிடம் அகப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, பெயிண்ட் பிரஸும், எம்-எஸ் வேர்ட்ம் பயிற்றுவித்து, என் கணினி அறிவைப் பெருக்கிக் கொண்டேன்.

“மொதலாளி, ஒரு பய கூட எங்கிட்ட வந்து படிக்கமாட்டேங்கிறானே, என்ன காரணம்?”

”கம்ப்யூட்டர் சென்டர ஏரக் கட்டிட்டு, சென்னைக்கு போங்க மொதலாளி, இல்லைனா இப்படியே என் வீட்டு திண்ணைய தேய்க்கவேண்டியதுதான்”.

என் விஷயத்தில், பாய் - தன் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்து விடக்கூடியவர். நானும் அவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தோம்.

”ஒழுங்கு மரியாதையா சென்னைக்கு போய் ஒரு வேலைய வாங்கி, வாழ்க்கையில செட்டில் ஆகிற வழியை பாருங்க. அப்போதான், நீங்க உருப்படுவீங்க”...

”மொதலாளி, நான் சென்னைக்கு போய்ட்டா, அப்புறம் நம்ம ஊர் மக்களின் கதி?”

பாய் என்னைப் பார்த்து, லேசாக நகைத்தார். பிறகு சொன்னார்.

“புத்திசாலிக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. முட்டாளுக்கு, அறிவுரை சொல்லி பிரயோஜனமில்லை.”

அதற்குப் பிறகு, நான் எதுவும் பேசவில்லை.

அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசாமி, பாய் கடைக்கு வந்தான். பாய் அவனைப் பார்த்துக் கேட்டார்.“என்னப்பா? டிவி. டெக். வாங்கிக்கிட்டு போனியே, திருப்பி கொண்டுவந்திட்டியா?”

ஒரு கணம் திகைத்த அந்த ஆள் சொன்னான்.

“கொண்டு வந்திட்டேங்க.. நீங்க உங்க அப்பாவ கூப்பிடுங்க..நான் அவர்கிட்ட தான் வாங்கிக்கிட்டு போனேன். அவர்கிட்டயே திருப்பி கொடுத்திடுறன்”...

பாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“எங்க அப்பாவ பாக்கணுன்னா, நீ மேல தான் போகணும், அவர் செத்து 10 வருஷம் ஆச்சி....”

திரும்பி என்னைப் பார்த்து சொன்னார்.

“அதுக்குத்தான், நான் 'டை' அடிக்க மாட்டேன்னு சொன்னேன், இப்போ பாருங்க”....

இரண்டு பேரும், வாய் விட்டு சத்தமாக சிரித்தோம்.

வந்தவனைப் பார்த்து சொன்னேன். “ ஹலோ, இவர்தாங்க பாய். ‘டை' அடிச்சிருக்கிறதனால உங்களுக்கு அடையாளம் தெரியல...”

அவனும் சிரித்துவிட்டான்.....

பாயுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வயது பேதமில்லாமல், எல்லோருடனும், நகைச்சுவையுடன் பேசுவார். மாலை வேலையில், அவர் கடையின் திண்ணை இளைஞர்களால் நிரம்பி வழியும். பாயும், சுருட்டு சுற்றிக்கொண்டே, எல்லோருடனும் கதை பேசுவார்.

அன்றைய தினம், மகிழ்ச்சியாய் கழிந்தது.

(தொடரும்)

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

பாய் கடை திண்ணை (4)

புலியூர் ராஜேந்திரன் மூலம் என் வாழ்க்கையில் விளையாடிய ஈறு, கிரிக்கெட் மூலம் மீண்டும் என் வாழ்க்கையை தாறுமாறாக ஆக்கப் போகிறான் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

"நிஜமாத்தான் சொல்றியா அருண்?"

"சத்தியமாண்ணே! நீங்க டீம் ஆரம்பிச்சா, நிறைய பேர் அதுல சேருவாங்க" என்றான்.

"எப்படிடா சொல்ற?"
"அது வந்துண்ணே..."
பாபு டீக்கடை வழியாக ஒரு சிறு கும்பல் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னுடைய அடிப்பொடிகள்.வந்தவர்கள் முகம் எல்லாம் வாடிப்போய் இருந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. என்னை மட்டும் அணியில் இருந்து நீக்காமல், என் தற்கொலைப்படையினரையும் ஒட்டு மொத்தமாக நீக்கம் செய்திருக்கிறார்கள்.
ஹும்..என்னையே அணியில் இருந்து தூக்கி விட்டார்களாம். இவர்கள் மட்டும் எம்மாத்திரம்?
ஈறு மீண்டும் தொடர்ந்தான்.
"அண்ணே, இவங்க எல்லாரையும், டீம வுட்டு தூக்கிட்டாங்க. நீங்க ஆரம்பிக்கிற புது டீம்ல நாங்க எல்லாரும் சேர்ந்துடுறோம் அண்ணே..."
சபீர் மெதுவாக தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்."பசங்க சொல்றதுதாங்க சரி. நாம புது டீம் ஆரம்பிக்கலாம். அப்புறம் நாம எல்லாம் டோர்னமென்ட் வெளையாடுறது எப்போ?"
இங்கே நான் சபீரைப் பற்றி சொல்லியாகவேண்டும். கிட்டத்தட்ட என் வயதுக்காரர்.
சபீர் பந்து வீசும் அழகே தனி. வேக வேகமாய் ஓடி வந்து, மிக மெதுவாய் பந்தை வீசுவார். அவருடைய ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் 20 ஓட்டங்களையாவது எதிர் அணியினர் விளாசுவது நிச்சயம். அப்போதெல்லாம் சிறு வயது பந்து வீச்சாளர்கள் என்னிடம் வந்து, சபீரின் பந்து வீச்சை கோபத்துடன் விமர்சிப்பார்கள்.
அவர்களுடைய மனக்குமுறலை எளிதில் தீர்த்து விடுவேன்.
கொதித்தெழுந்த அந்த விடலைப் பையனுக்கு, பந்து வீச அனுமதி தந்தால், அவன் குஷியாகி, பந்து வீச ஆயத்தமாகி விடுவான்.
"அண்ணே! நீங்க தான் கேப்டன். சபீர் அண்ணன் துணை கேப்டன். நான் ஓபனிங் பௌலர்..." என்று சொல்லி சிரித்தான் ஈறு.
"அடப் பாவி. சபீர் பற்றி தெரிந்திருந்தும், அவரை துணை கேப்டன் என்கிறானே இந்த ஈறு". அவனுடைய செவுளில் ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.
"சரி. மறுபடியும் நாளைக்கு இதைப் பத்தி பேசலாம். எல்லாரும் நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஏரிக்கு வந்திடுங்க.." என்றேன்.
ஒட்டு மொத்தக் கும்பலும் திருப்தியாகக் கலைந்து சென்றது.
தன்னுடைய ஜெராக்ஸ் இயந்திரத்தை பழுது நீக்கிவிட்டு என்னருகே வந்து அமர்ந்த அக்பர் பாய், என்னைப் பார்த்து விஷமமாய் சிரித்தார்.
அக்பர் பாய்க்கு 38 வயது தான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 60 வயசு கிழவர் போல் இருப்பார். தலை பாதி வழுக்கை. மீதி எல்லாம் வெள்ளைமுடி. எத்தனையோ முறை அவரிடம் "தலைச்சாயம்" அடித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறேன்.ஒருபோதும் அவர் அவ்வாறு செய்ததில்லை. கேட்டால், "இதுதான் என் உண்மையான உருவம், இதை மாற்றிக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை" என்று கூறுவார்.

ஆனால் அன்று "தலைச்சாயம்" பூசி இருந்தார்.என்னால் நம்பவே முடியவில்லை. "பாய், என்ன இது அதிசயம்"..என்றேன் - அவர் தலையை பார்த்தபடி.
"எல்லாம் என் பொண்டாட்டி வற்புறுத்தல்" என்றார்.
"பத்து வயசு கொறஞ்சிட்டீங்க பாய்" என்றேன்.
"அப்படினா 28 வயசு ஆள் மாதிரி தெரியறனா?"
"இல்லை 50 வயசு ஆள் மாதிரி"....
குழந்தையைப் போல் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தார் பாய்.
(தொடரும்)