செவ்வாய், பிப்ரவரி 27, 2007

பாய் கடை திண்ணை (2)

நான் பார்த்த பார்வையில் ஈறு சற்று பயந்து போனான்.

புலியூரான் (எ) ராஜேந்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஈறு தான். கபடி ஆட்டத்திலும், ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்ட ராஜேந்திரனை, முதன் முதலில் பார்த்தபோது, மிரண்டு போனேன். மலைமாடு மாதிரி வளர்த்தியாய் இருந்தான். என்னைப் பார்த்ததும், 'வணக்கண்ணே!' என்று கூறி, சல்யூட் அடித்தான்.

மூவரும் சற்று நேரம் அமைதியாய் இருந்தோம். ஈறு தான் ஆரம்பித்தான்.

"அண்ணே!.. ராஜேந்திரன் அண்ணன் லவ் பண்றார். உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற "கவிதா" வை அண்ணன் மடக்கிட்டாரு..". சொல்லிவிட்டு, கண் சிமிட்டி சிரித்தான்.

எனக்கு ஆத்திரமாய் வந்தது. +1 படிக்கும் சின்னப் பெண், 5 ஆவது கூடத் தாண்டாத இவனைப் பார்த்து எப்படி மயங்கினாள்? காதலைப் பற்றி 'அஆ' கூடத் தெரியாத எனக்கு, மனம் குமைந்தது.

ராஜேந்திரன் தொடர்ந்தான்.
"அண்ணே! நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே! புக்ல கூட வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்..எனக்கு ஒரு காதல் கவிதை எழுதிக்குடுங்க...கவிதாவுக்கு கவிதைனா உயிர்."

"முடியாது போடா" என்று கத்த நினைத்தேன்.ஆனால், ராஜேந்திரனின் புகழ்ச்சி, என்னைத் தடுமாற வைத்து விட்டது.

"இல்ல..ராஜேந்திரா..எனக்கு காதல் கவிதை எழுத வராது..இதுவரைக்கும் நான் காதல் கவிதை எழுதியதில்லை."

ஈறு இடைமறித்தான். "உங்களால முடியும்ணே..".

பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நானும் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு யோசிப்பது போல் நடித்தேன். அப்புறம், எழுத ஆரம்பித்தேன்.

கரையும், அலையும்
இருந்தால் தான் கடல்.
உயிரும், உணர்வும்
இருந்தால் தான் உடல்.
எண்ணமும், எழுத்தும்
இருந்தால் தான் மடல்.
அன்பே! நீயும், நானும்
இணைந்தால் தான் காதல்.

கவிதையை(?!) படித்து விட்டு, ராஜேந்திரன் துள்ளினான். "அண்ணே..இது தான் கவித..கவித.." என்று புல்லரித்தான்.
என் கையிலிருந்த கவிதை காகிதத்தை, ஏறக்குறைய உருவிக் கொண்டு போயினர் ஈறும், புலியூரானும்.
பிறகு தான், எனக்கு வினையே ஆரம்பித்தது.
(தொடரும்)

திங்கள், பிப்ரவரி 26, 2007

பாய் கடை திண்ணை (1)

பாய் கடை திண்ணையில் அமர்ந்து, போகிற, வருகிற பிகர்களை நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது, எங்கிருந்தோ, தனது சைக்கிளில் புயல் வேகத்தில் வந்த 'சிம்காக்ஸ்' (எ) சரவணன், என்னிடம் அந்த தகவலை சொன்னான். கேட்டதும், எனக்கு சற்று படபடப்பு உண்டானது.
"அப்படியா?" என்றேன் அவனிடம்.


"ஆமாண்ணே! ஏரியில 'ராக் போர்ட் கிரிக்கெட் கிளப்' மீட்டிங் நடக்குது. உங்கள வேணாம்னு சொன்னது, 'முத்துக்குமார்' அண்ணன் தான்." சொல்லி முடித்துவிட்டு, "எனக்கு டியூசன் இருக்குது, வரண்ணே!" என்று கூறி, சிட்டாய் பறந்து விட்டான்.

எனக்கு அவமானத்தில் அழுகையே வந்து விட்டது.

அடப் பாவிகளா! போன வருஷம் நடந்த டோர்னமெண்டில், என்னை ஓப்பனிங் இறங்க வைத்து விட்டு, இந்த வருஷம் நான் வேண்டாமா?

அதிலும் சென்ற வருடம் தம்மம்பட்டியில் நடந்த டோர்னமெண்டில், ஆத்தூர் 'சைலண்ட் ஸ்ட்ராம்' அணிக்கு எதிராக என்னை ஓப்பனிங் இறக்கினார்கள். ஜல்லிக்கட்டு காளை போல, தறிக் கெட்டு ஓடி வந்து ஓப்பனிங் பவுலிங் செய்த ஆறுமுகம் வீசிய கார்க் பந்து, என் இடது கால் கட்டை விரலை பதம் பார்த்தது. ரத்தம் சொட்டிய நிலையிலும் அடாது நின்று, ஆறுமுகத்தின் பந்துகளை (கால் கொண்டு) தடுத்தாடி, அவனுடைய 3 ஓவர்களை நிறைவு செய்து, 0 ரன்கள் எடுத்து அவுட் ஆனேன்.


எனக்குப் பின்னே வந்த மட்டையாளர்கள், ரன்களைக் குவித்தனர்.
ஒவ்வொரு போட்டியிலும் 5 விக்கெட்டாவது எடுக்கும், ஆறுமுகம் அன்று 2 விக்கெட்டுகள் தான் எடுத்தான். அதற்கு நான் தான் காரணம்.


அன்றைக்கு, என்னை தலையில் வைத்துக் கொண்டாடிய அணி, இன்று, என்னை வெளியே தள்ளி விட்டது, எனக்கு தாங்கொண்ணா துயரம் அளித்தது.

எதிரே, என் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த, ஈறு (எ) அருண், வேகவேகமாய், நடந்து வந்து கொண்டிருந்தான். கிரிக்கெட்டில் நடந்த, பல்வேறு, சுவையான தகவல்களை நான் அவ்வப் போது அவிழ்த்து விடுவதால், எனக்கு நிறைய விசிறிகள் இருந்தனர். அவர்கள், நான் எப்போதாவது கிரிக்கெட்டில் அடிக்கும் ஸ்கொயர் ஷாட், கல்லி ஷாட் - களை பாராட்டிப் பேசுவார்கள்.

"என்னடா அருண்?" என்றேன்.

அண்ணே! உங்கள, டீம வுட்டு தூக்கிட்டாங்கண்ணே!" என்றான் சோகத்தோடு. "என்னையும் தூக்கிட்டாங்க" என்றான் கூடுதலாக.


பெரும் துக்கத்தில் ஆழ்ந்தேன். "விடுங்கண்ணே! நாம ஒரு புது டீம் ஆரம்பிச்சுடலாம்" என்று ஆறுதல்(படுத்தினான்) அருண்.

'சட்' டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தேன்.

(தொடரும்)

வியாழன், பிப்ரவரி 15, 2007

பெண்

'பெண்ணீயம்' குறித்து எழுத்தாளர் 'பிரபஞ்சன்' அவர்கள், நிறைய படைப்புகளைத் தந்துள்ளார். குறிப்பாக இதிகாச கதைகளில் பெண்கள் கேவலப் படுத்தப்பட்டிருப்பதை கோபத்தோடு விளக்கியுள்ளார்.

என் நண்பர் சிவசங்கரன், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். ஆனால், மனிதருக்கு கோபம் அதிகம். எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும், கோபம் வந்து விட்டால் 'பழுக்க காய்ச்சிய' வார்த்தைகளை உமிழ்ந்து விடுவார். உண்மையில் இளகிய மனம் படைத்தவர்.

அன்று கல்லுரியில் பட்டிமன்றம் ஒன்று நடந்தது. தலைப்பு 'வரதட்சணைக்கு காரணம் ஆண்களா? பெண்களா?'.

'பெண்களே' என்னும் தலைப்பில் வாதாடும் ஆண்கள் குழுவில் நண்பர் சிவசங்கர் இடம் பெற்றிருந்தார். 'ஆண்களே' என்ற தலைப்பில் வாதாடிய பெண்கள் குழுவில் அந்த புதிய 'தமிழ் ஆசிரியை' (பெயர் வேண்டாமே!), முதல் முறையாக கலந்து கொண்டார்.

'புதிய தமிழ் ஆசிரியை' யின் முறை வந்தது. மிகவும் கோபத்துடன் பேசினார்.

'வரதட்சணைக் கொடுமைக்கு காரணம் ஆண்களே. வரதட்சணை கேட்கும் ஆண்களை நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை இல்லை. தேசிய கவி என்று போற்றப் படும் பாரதியார் கூட 'கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்று பெண்களின் உடற்கூறு கொண்டு பாடியிருக்கிறான்.'

(இங்கே, நான் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். சிவசங்கர் 'பாரதியாரின்' தீவிர விசிறி. அவர் பாடல்கள் என்றால், இவருக்கு மிகவும் பிரியம். புதிய ஆசிரியை இவ்வாறு பேசியதும், சிவசங்கர் கோபத்துடன் எழுந்து 'மைக்கை'ப் பிடித்தார்.)

'எதிரணியைச் சேர்ந்த ஏ.கே- 47 அவர்களே..(மாணவர்களின் பலத்த கரகோஷம் .புதிய ஆசிரியையின் முகம் வாடிப் போகிறது.) பாரதியார் எந்த சூழ்நிலையில் இப்படி பாடினார் தெரியுமா? ஆங்கிலேயர்கள், தங்களுக்கு கப்பம் கட்ட மறுத்த தமிழ் நாட்டு மன்னர்களை மடக்க, அழகிய பெண்களை தூதாக அனுப்பி அம்மன்னர்களை தம் வயப்படுத்தி, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டச் செய்தனர். 'ஆங்கிலேயர்கள் அனுப்பும் மங்கையரைக் கண்டு மயங்கக் கூடாது' என்னும் பொருள்படும் படி தான் பாரதியார் இவ்வாறு பாடினாரே ஒழிய, ஒட்டு மொத்தப் பெண் இனத்தையும் கேவலப்படுத்த அல்ல.

மேலும், பாரதியார் பெண்கள் பற்றி மிகவும் உயர்வாகத் தான் பாடியுள்ளார். 'மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்' என்னும் வரிகளே அதற்கு சாட்சி.'

இவ்வாறு சிவசங்கரன் பேசி முடித்ததும், பலத்த கரகோஷம் எழும்பியது. மாணவர்கள், புதிய ஆசிரியைப் பார்த்து 'ஏ.கே.47, ஏ.கே.47' என்று நையாண்டி செய்தனர். ஆசிரியையின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. யாரும் பாராதபோது, கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துகொண்டார்.


ஆனால் இதை சிவசங்கர் கவனித்து விட்டார். கோபத்தில் அவர் சொன்ன வார்த்தை தவறு என்று உணர்ந்தார். பின்னர் தனிமையில் ஆசிரியையை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருவரும் நண்பர்களாயினர்.