புதன், ஏப்ரல் 28, 2010

காதல் இனிக்குதய்யா.....

சுமித்ராவை நான் முதன்முதலில் சந்தித்தது, என் நண்பன் ஒருவனின் கம்ப்யூட்டர் சென்டரில்தான். அந்த சமயத்தில் நானும் ஒரு கம்ப்யூட்டர் கல்வி நிலையத்தை நடத்திவந்தேன். மனநோயிலிருந்து நான் வெளிவர ஆரம்பித்த நிலையில், 3 கம்ப்யூட்டர்களுடன் அதை ஆரம்பித்திருந்தோம். மாத வருமானம் மின்சாரக் கட்டணத்திற்கே சரியாகிவிடும். என் அண்ணன் அதை லாப நோக்கோடு பார்க்காமல், என் கம்ப்யூட்டர் அறிவை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டே அதை எனக்கு ஆரம்பித்துக்கொடுத்திருந்தார்.நானும், என்னை நம்பி வந்த 5 மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை சொல்லிக்கொடுத்து, கம்ப்யூட்டர் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் உசுப்பிவிட்டேன். இந்தக் காலக்கட்டத்தில்தான் தனது சென்டர் மாணவர்களுக்கு டேலி (Tally) கற்றுக்கொடுக்கச்சொல்லி என் நண்பன் வேண்டுகோள் விடுத்தான். ஏதோ கொஞ்சம் அதை நான் கற்றுவைத்திருந்தக் காரணத்தினால், துணிந்து அவன் சென்டருக்கு சென்றேன். நிற்க, என் ஊருக்கும், என் நண்பனின் ஊருக்கும் உள்ள தொலைவு 3 கி.மீ. மட்டுமே.

சுமித்ரா அங்கே அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி சொல்லித்தரும் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள்.  அவளை முதன்முதலில் பார்த்தபோது, எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை. அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று தோன்றியது.ஒன்றை மட்டும் நான் அவளிடம் கூர்ந்து கவனித்தேன். அவள் நடக்கும்போது இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து நடந்தாள். எனக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு இடது கால் போலியா நோய் தாக்கியதில் பலமிழந்திருக்கிறது.

அடுத்த நாள் நான் அந்த சென்டருக்கு சென்றபோது, யாரும் இருக்கவில்லை. சுமித்ரா மட்டும் இருந்தாள்.

“சார் இன்னும் வரல. வெய்ட் பண்றீங்களா?” என்று கேட்டாள். நான் சரியென்று தலையசைத்ததும், ஒரு நாற்காலியில் அமரச் சொன்னாள். பிறகு ஒரு கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆஃபீஸில் வேலை செய்யத்துவங்கினாள். அப்போது தான் அவளைக் கவனித்தேன். பாவாடை, தாவணியில் மிக லேசான மேக்-அப்புடன் அழகாகத் தோன்றினாள். அவளின் காலைப் பற்றி எண்ணியபோது பாவமாக இருந்தது. ஹ்ம்ம்.. யாராவது நல்லப்பையன் இவளுக்குக் கணவனாகக் கிடைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

அன்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. சுமித்ரா பற்றிய எண்ணங்களே என்னை சுற்றி, சுற்றி வந்தன. ”என்ன ஒரு எகத்தாளம், யாரோ ஒரு நல்லப் பையன் அவளுக்குக் கிடைப்பானாம். இப்படித்தான் தப்பிப்பதா?” என் மனம் என்னை கேலி செய்தது. அதே சமயம் ”அந்தப்பையன் ஏன் நானாக இருக்கக்கூடாது?” என்ற எண்ணம் தோன்றியது. மனநிலை தேறி வரும் நிலையில், இந்தப்பெண்ணைக் கல்யாணம் செய்வதின் மூலம் நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கமுடியுமே. முடிவு செய்துவிட்டேன். அவளிடம் என் காதலை சொல்லிவிடுவதென்று.

காதலை சொல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பயமாக இருந்தது. என்றாலும், சுமித்ராவை சந்திக்கும்போதெல்லாம், எனக்கு ஏற்பட்ட மனநோய் பற்றியும், அதிலிருந்து நான் மீண்டு வருவது குறித்தும் பேச ஆரம்பித்தேன். அவளும் அதை ஆர்வமாகக் கேட்டுக்கொள்வாள். அவளும் தனக்கு 3 வயதாக இருக்கும்போது, போலியோ அட்டாக் வந்ததாகவும், அது இடது காலைப் பாதித்து, ஓரிரு அறுவை சிகிச்சைக்குப்பின்னர் நடக்க முடிவதாகவும் சொன்னாள்.

என் கம்ப்யூட்டர் நிலையத்தில் படித்துவந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் (பிஞ்சிலேயே பழுத்தவன்) எப்படியோ இதை மோப்பம் பிடித்துவிட்டான். ஒரு நாள் அவன் என்னிடம் வந்து, “சுமித்ரா அக்கா பி.ஏ.படிக்கிறாங்க. அவங்க **** ஜாதி. கடவுள் பக்தி அதிகம். ஒவ்வொரு பௌர்ணமியும் அவங்க முருகன் கோயில் அடிவாரத்துல இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வருவாங்க....” என்றான். நான் சட்டென்று அவனை கையமர்த்தினேன். “இதையெல்லாம் எங்கிட்ட ஏண்டா சொல்ற?”. “எனக்குத் தெரியும்ணே நீங்க அந்த அக்காவ லவ் பண்றீங்க. இல்லாட்டி ஏன் அடிக்கடி அவங்க சென்டருக்கு போறீங்க?”. பதில் சொல்லமுடியாமல் அவனைப்பார்த்தேன்.”விடுங்கண்ணே, பாத்துக்கலாம்.” எல்லாம் என் நேரம். 15 வயது பையன் எனக்கு அட்வைஸ் பண்ணுகிறான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை என் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணும், அந்த பிஞ்சில் பழுத்தப் பயலும், சுமித்ராவை நட்பு முறையில் என் சென்டருக்கு வரவழைத்தார்கள். நானும் சுமித்ராவை வரவேற்றப் பின்னர் ஒரு டேபிளைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.என் சென்டரின் பெண் நைஸாக வெளியேப் போனாள். அந்த பிஞ்சுப்பயல் என்னைப்பார்த்து கண்ணைக்காட்டினான். பிறகு லேசானக் குரலில் சொன்னான் என்னிடம் “அண்ணே, சொல்லுங்க”.. நானோ பயத்தின் பிடியில் இருந்தேன். காதல் சொல்லும் கணங்களில், உயிர் போய் திரும்ப வரும் என்பது உண்மைதான் போலும். ”கொஞ்சம் இருடா” என்றேன். சுமித்ரா இதைக் கண்டவுடன், “என்ன பேசிக்கிறீங்க, எனக்குப் புரியல” என்றாள். நான் சற்றுத் தயங்கினேன். அப்போதுதான், அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. அந்த பிஞ்சுப்பயல் சட்டென்று சுமித்ராவை நோக்கி,”அக்கா, நீங்க எங்க அண்ணனை லவ் பண்றீங்களா?” என்றான். சுமித்ரா பயந்துபோய்விட்டாள்.

“இல்ல.. நான் அவரை என் குருவாதான் பாக்குறேன்”. மத்தபடி வேற எண்ணமெல்லாம் இல்லை.”

எனக்கோ பயங்கர அதிர்ச்சி. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு கேட்டேன்.

“நான் உங்கள லவ் பண்ண சொல்லல. என்னை கல்யாணம் பண்ணிக்க் உங்களுக்கு இஷ்டமா?”

இப்போது அதிர்ச்சி அவள் பக்கம். “எங்க அம்மா சொன்னா, யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்குவேன்”.

“அப்போ உங்க அம்மாவைப் பார்த்து நான் பேசலாமா?”..

”சரி” என்றாள்.

இரண்டு நாட்களாய் எனக்கு தூக்கம் வரவில்லை. அவளும் என்னை லவ் பண்ணுவதாய் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி குரு என்று சொல்லுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. நல்லவேளை அண்ணன் என்று சொல்லவில்லையே! 3ஆவது நாள் எனக்கு சுமித்ராவிடமிருந்து ஃபோன் வந்தது. “நான் உங்களப் பத்தி என் அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். வந்து பேசச் சொன்னாங்க. அப்புறம் உங்களை எனக்குப் புடிச்சிருக்கு”.

றெக்கக் கட்டிப்பறந்தேன். சுமித்ராவின் வீட்டுக்குப் போனேன். சுமித்ராவின் அம்மாவிடம் பேசினேன். எம்.சி.ஏ. படித்திருப்பதால் நல்ல வேலை கிடைக்குமென்றும், ஆரம்ப சம்பளமே 20 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்குமென்றும் சொன்னேன்.ஆனால், வேலை வாங்கிவிட்டுதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றும் சொன்னேன்.  அவருக்கும் என்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வந்துவிட்டது. மேலும், ”சாதிப் பிரச்சினை இருக்கிறதே” என்றார். அதை நான் சமாளித்துவிடுவதாகச் சொன்னேன்.

இது நடந்து 1 மாதத்திற்குள் நான் சுமித்ராவை நன்கு புரிந்துகொண்டிருந்தேன். அவளும் என்னை. திடீரென்று ஒரு நாள் சுமித்ரா என்னை வந்து சந்தித்தாள். தன் சொந்தக்காரர் ஒருவர் சென்னையில் லேடீஸ் ஹாஸ்டல் நடத்துவதாகவும், தான் அங்கு வார்டனாக பணிபுரிய சென்னை செல்வதாகவும் சொன்னாள். கஷ்டமாக இருந்தது. அனுப்பிவைத்தேன். 1 மாதம் கழித்து நானும் சென்னைக்கு வேலை தேடி சென்றேன். என் கம்ப்யூட்டர் சென்டர் மூடப்பட்டது.

கஷ்டப்பட்டு ஒரு வேலை வாங்கினேன். மாத சம்பளம் 20ஆயிரம் ரூபாய். மூன்று மாதங்கள் கழித்து சுமித்ராவை பதிவுத்திருமணம் செய்துகொண்டேன். வீட்டிற்குத் தெரிந்து ஃபோனிலேயேத் திட்டினார்கள். இனி உனக்கும், எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றார்கள். அழுது அரற்றினேன். சுமித்ரா தேற்றினாள். கோடம்பாக்கத்திலிருக்கும் ஒரு மாரியம்மன் கோயிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டோம். சுமித்ராவின் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள். தனிக்குடித்தனம் போனோம். சுமித்ரா வேலையை உதறினாள்.

ஏற்கெனவே நான் மனநோய் பாதிப்பிலிருந்ததைக் கணக்கில் கொண்டு, நான் சந்தோஷமாய் வாழவேண்டுமென்று என் குடும்பம் என்னை மனமுவந்து ஏற்றுகொண்டது.

சுமித்ரா வீட்டிலிருந்து வரதட்சிணையாக ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை. நாங்களே சிக்கனமாய் இருந்து நிறைய பொருட்கள் வீட்டிற்காக வாங்கியிருக்கிறோம். வாழ்க்கை சந்தோஷமாயிருக்கிறது. சௌமியாவும் (5 வயது), தீபிகாவும் (1 வயது) மகள்களாய் இருக்க, வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்?

திங்கள், ஏப்ரல் 26, 2010

பெத்துசாமி : தாத்தாவின் பேனா

ரசனின் வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது - எட்வர்ட்.

To hold a pen is to be at war - வால்டேர்.
--------------------------------------------------------------------

அப்பாடா. ஒரு வழியாக-நான் எழுத வந்த விஷயத்திற்கு, பஞ்ச் டயலாக் கிடைத்தாயிற்று.

அணுவைப் பயன்படுத்தி ஆக்கமும் செய்யலாம், அழிவும் செய்யலாம். அது, கிடைப்பவர் மனநிலையைப்பொறுத்தது. பேனாவும் அப்படித்தான். புரட்சியும் உருவாக்கலாம். சரோஜாதேவி கதைகளும் எழுதலாம். ஆனால், பேனா-எல்லோருக்கும் சுலபத்தில் கிடைத்துவிடும் வஸ்து. (அப்பாடா! தத்துவ டயலாக்கும் கிடைத்தாயிற்று)

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது-தேர்வு சமயத்தில், பேனாவில் மை தீர்ந்துபோனபோது, 4 சொட்டு இங்க் கொடுத்துதவிய நண்பனை மறக்கமுடியுமா? அதே பள்ளிக்கூடத்தில், ஏப்ரல் -1 அன்று, எல்லோரின் சட்டையிலும், பேனா மசியைத் தெளித்து, அவர்களை, முட்டாள்கள் என்று நகைக்கிறோம். (லாஜிக் இடிக்கிறதே!)

நம் அன்றாட வாழ்வில்-பேனா-எவ்வளவோ அங்கம் வகித்தாலும், இன்றைய தலைமுறை இளைஞர்கள், பையில் பேனா வைத்துக்கொள்வதில்லை. வங்கியில், படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது, “எக்ஸ்க்யூஸ், மீ...பென் ப்ளீஸ்..” என்று ஸ்டைலாக பேனா கடன் கேட்கும், இளைஞனைப் பார்க்குபோது,கோபம் பொங்கிவருவதைத் தடுக்கமுடியவில்லை. வெட்டியாகப் பேசி பொழுதுபோக்குவதற்கு, கையில் செல்ஃபோன் இருக்கும்போது, உருப்படியாய் எழுதுவதற்கு ஒரு சிறிய பேனாவைப் பையில் வைத்துக்கொள்வதற்கு என்ன வலிக்கிறது? இப்போதெல்லாம் யாரும் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.எல்லாம் செல்ஃபோனின் நினைவடுக்கில்தான் பதியவைக்கப்படுகிறது. செல்ஃபோன் தொலைந்துபோனால், கூடவே, நண்பர்களின் தொடர்பும் அற்றுப்போகிறது.

முதன்முதலாக என் (அம்மா வழி) தாத்தா, எனக்கு வாங்கித்தந்த பேனா, எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் விடியற்காலை, 5 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, திருச்சி மாவட்டத்திலிருக்கும் வீரகனூர் என்னும் ஊருக்கு புறப்பட்டுப் போனோம் நானும், தாத்தாவும். அப்போதெல்லாம், வீரகனூர் பேனா என்றால், படுபிரசித்தம். சுமார் 8 மணிக்கு வீரகனூரை அடைந்த நாங்கள், ஒரு பேனா கடைக்குச்சென்றோம். அட்டா, எத்தனைவிதமான பேனாக்கள். கடை முழுவதும் ஒரே பேனா மயம், எக்கச்சக்கக் கூட்டம் வேறு. 5 ரூபாய் பேனாவுக்காக (1985-ல்) அந்தக் கடையையே புரட்டுப்போட்டார் என் தாத்தா. இந்தப்பேனாவில், முள் சரி இல்லை. இதில், நாக்(கு)கட்டை சரியில்லை. கலர் சரியில்லை. மரை சரியில்லை, மூடி சரியில்லை.கடைக்காரர்கள் மிரண்டுபோனார்கள். இறுதியாக, ஒரு மரக்கலர் பேனாவை எனக்காக தேர்வு செய்து கொடுத்தார்.ஒரு சின்னபேனாவுக்காக 1 மணி நேரம் இத்தனை ஆர்ப்பாட்டமா? தாத்தாவிடம் கேட்டேவிட்டேன்.

”ஒரு பேனாவுல எழுதக்கத்துக்கிட்டம்னா, அது நமக்கு பழக்கமாகிடும். கையெழுத்தும் அழகாகிடும். புதுப் பேனாவை வச்சி பரிச்சை எழுதியிருக்கியா?”.ரொம்பக்கஷ்டம். புதுப்பேனாவின் முள், பேப்பரைக் கிழித்துவிடும் அபாயமிருக்கிறது. இங்க் ஒழுகலாம். அது பேப்பரை நனைத்து, விடைத்தாள் திருத்துபவரை வெறிகொள்ளச்செய்யும். உண்மை. இதை நான் என் வாழ்க்கையில் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

நான் எத்தனையோ பேனாக்களை இழந்திருக்கிறேன். வாங்கியிருக்கிறேன். என்னால், ஒற்றைப்பேனாவுடன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த முடிந்ததில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த மட்டில் என் தாத்தா, ஒரே ஒரு ஜோடி பேனாவுடன் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்.அவரின் வேலை அப்படி. என் தாத்தா ஒரு பத்திர எழுத்தர். பத்திரம் எழுதும்போது அவர் தன் பேனாவின் முள்ளை 360 டிகிரியிலும் சுழற்றி, சுழற்றி எழுதுவதைப் பார்த்து, அதே போல், நானும் ஸ்டைலாக எழுதியிருக்கிறேன்.

தாத்தாவை, பேனா இல்லாமல் என்னால் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாது.தொடக்கக்கல்வி கற்ற நாட்களில், பள்ளி செல்லும் சமயங்களில், பெரும்பாலும் தாத்தாவை, பாபு டீ கடை வாசலில் பார்ப்பேன். குளித்து முடித்து, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து இருப்பார்.தோளில் வெள்ளைத்துண்டு. நெற்றியில் விபூதிப்பட்டையிருக்கும். (வைணவர் எப்படி பட்டை அணிந்திருந்தார் என்று இப்போதுதான் எண்ணிப்பார்க்கிறேன்). நடுவில்,ஒரு பெரிய குங்குமம்.சட்டைப்பையில், இரண்டு பேனாக்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நீல நிற மசியுடன், இன்னொன்று கருப்பு நிற மசியுடன். கூட யார் இருக்கிறார் என்று கூட நான் பார்ப்பதில்லை. அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் கையை நீட்டி, “தாத்தா, காசு குடு” என்று கேட்பேன்.அருகில், இருந்த மன்னாதி உடையார் ஒரு முறை சிரித்துக்கொண்டே சொன்னார். “கப்பம் வாங்க ஆளு வந்தாச்சி. குடுத்து அனுப்பு”. தாத்தாவும், புன்னகைத்துக்கொண்டே 10 பைசா கொடுப்பார்.இது தினமும் நடக்கும். அது ஒரு மகிழ்ச்சிகாலம்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன், தனது 72 ஆவது வயதில், தாத்தா இறந்துபோனார். அப்போது எனக்கு வயது 30. எங்கள் வீட்டில் நடக்கும் முதல் சாவு அது. எனக்கு அழக்கூடத் தெரியவில்லை. அல்லது அழுகை வரவில்லை.என் அண்ணன் அழுது அரற்றினார். ”இப்போ தான் டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போனன். டாக்டர் நெஞ்சு வலிக்கு ஊசிபோட்டாரு.வீட்டுக்கு வந்து படுத்ததும், கொஞ்ச நேரத்துல, செத்துட்டார்.”

தாத்தாவின் கடைசி காலம் அவ்வளவு உசிதமாக இல்லை. பத்திரம் எல்லாம் யாரும் எழுதுவதில்லை. எல்லாம், கம்ப்யூட்டர் பிரிண்ட் தான். ஆகையால் அவருக்கு அதிகம் வேலை கிடைக்கவில்லை. பெரும்பாலான சமயங்களில் அண்ணனிடம் வந்து காசு வாங்கிச் செல்வார். அப்போதெல்லாம், என் அண்ணன் என்னிடம் சொல்லி வருத்தப்படுவார்.

தாத்தாவைப் புதைக்க சுடுகாட்டுக்கு வந்தோம். தலையில், துணியைக்கட்டி, வேட்டி, சட்டையுடன் தாத்தா குழியில் இடப்பட்டார். வெட்டியான் முருகேசன், தாத்தா பையிலிருந்த காசுகளை எடுத்துக்கொண்டான். அவர் பையிலிருந்த பேனாவை அவன் எடுக்க எத்தனித்த போது, அம்மாசி அய்யா வெடித்து அழுதபடியே, அவனைப்பார்த்துக் கத்தினார். “டேய், மசுராண்டி, அந்தப் பேனாவை எடுக்காதடா. அதுதாண்டா, அவருக்கு சோறு போட்டுச்சி. அவரு அந்தப் பேனாவோட போவுட்டும் வுடுடா.” சட்டைப்பையில் பேனாவோடு தாத்தாவைப் பார்த்த நான், எதை நினைத்தேனோ தெரியவில்லை. என் கண்களில் நீர் கரகரவென சுரந்தது. சத்தமிட்டு அழ ஆரம்பித்தேன். அண்ணன் என்னை அணைத்துக்கொண்டார்.

எல்லோரும், குழியில் மண்ணைத்தள்ள ஆரம்பித்தார்கள்.

நிற்க, இது ஒரு மீள்பதிவு.

புதன், ஏப்ரல் 14, 2010

பார்ப்பனீயமும், கர்நாடக ஸங்கீதமும்

“கர்நாடக இசையையும், பரத நாட்டியத்தையும் பிராமணர்கள் தத்தெடுத்துக்கொண்டதைப்போல், சினிமாத்துறையையும் யாராவது தத்தெடுக்க முன்வரவேண்டும்” என்று ஏதோ ஒரு பேட்டியிலோ அல்லது மேடையிலோ ’உலக நாயகன்’ திருவாய்மலர்ந்தருளியிருந்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------

Tamijarassane - இந்த வார்த்தையை நீங்கள் தமிழரசன் என்று உச்சரித்தால், உங்களுக்கு ஃப்ரெஞ்ச் மொழி நன்றாகத் தெரியுமென்று அர்த்தம்.

1997 ஆம் ஆண்டு நான் வேலை தேடி பூனா வந்தபோது,திகி கிராமத்தில் என் மச்சான் சந்திரசேகர் வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது அவர் CBI -ல் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருந்தார். அவருக்கென்று ஒரு தனி பங்களா கொடுத்திருந்தார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து அவர் வீடு திரும்ப நேரமானால், அந்த பேய் பங்களாவில் தனியாக இருக்க பயப்படுவேன்.

இப்படிப்பட்ட ஒரு நன்னாளில் என் மச்சான் தமிழரசனை எனக்கு அறிமுகப்படுத்தினார். சுருள்சுருளான தலைமுடியும், நெற்றியில் விபூதியும், அழகான புன்சிரிப்புடன் தன்னை என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார் தமிழரசன். பாண்டிச்சேரிக்காரர். அவர் வி.எஸ்.என்.எல்-லில் ட்ரெய்னீ எஞ்சினியராக கல்லூரி கேம்பஸ் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பூனாவில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருக்கும் ஒரு அழகான பங்களா ஒன்றை தங்குவதற்காக வி.எஸ்.என்.எல்.கொடுத்திருந்தது. என் மச்சானின் வீடும், தமிழரசனின் வீடும் குறைந்த தொலைவிலிருந்தன.தமிழரசனுக்கு இரவு நேர ஷிஃப்ட் ஒர்க் இல்லையென்றால், பெரும்பாலும் அவருடைய வீட்டிற்கு சென்று விடுவேன். அப்போது அவர் எனக்கு ஜோதிடம் பார்ப்பதைக் கற்றுக்கொடுத்தார். எனக்கு அதில் நம்பிக்கை இல்லையென்றாலும், அவர் ஆர்வத்துடன் சொல்லித்தரும்போது கேட்டுக்கொள்வேன்.

திடீரென ஒருநாள் தமிழரசனை இரவு நேரத்தில் சந்திக்கமுடியவில்லை. ”இன்றைக்கு வரலாமா” என்று நான் தொலைபேசியில் கேட்டேன்.”சாரி சார். நான் இப்போ கர்நாடக இசை கத்துக்கிட்டிருக்கேன். விஸ்ராந்தவாடியில் ஒரு கேரளாக்கார பிராமிண் மாமிகிட்ட டெய்லி கத்துக்கிறேன். அதனால வீட்டுக்கு வர ராத்திரி லேட்டாகும்” என்றார்.பின்பொருநாள் நான் பகலில் அவருக்கு ஃபோன் செய்துவிட்டு, அவரின் வீட்டிற்கு சென்றபோது, வீட்டினுள்ளிருந்து தமிழரசன் உரக்கப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். ஒரு போர்வையை தரையில் விரித்து, அதன் மேல் சம்மணமிட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார் தமிழரசன். அருகில் கருப்பாக ஏதோ பேட்டரி போல் இருந்தது. அதிலிருந்து ‘கொய்ங்க்’ என்ற சத்தம் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது.

காலிங் பெல்லை அழுத்தினேன். “கதவு தொறந்து தான் இருக்கு. உள்ளே வாங்க சார்”. உள்ளே சென்று அவர் எதிரே அமர்ந்தேன். தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார். பாடி முடித்ததும் என்னைப்பார்த்து, கண்ணைச் சிமிட்டினார். “சார், பாட்டு எப்படி இருந்தது?”. எனக்கும், கர்நாடக இசைக்கும் துளியும் சம்மந்தமில்லை.இருந்தாலும், லேசாக தலையசைத்து, சூப்பர் என்று சொன்னேன். மனிதர் உற்சாகமாகிவிட்டார். இப்போ நான் பாடினது மாயமாளவகௌள என்ற ராகம். எல்லா டீச்சர்ஸும் இதைத்தான் முதல் ராகமாக சொல்லிக்கொடுப்பார்கள். ‘அலைகள் ஒய்வதில்லை’ படத்துல கூட கமலா காமேஷ், ராதாவுக்கு இதைத் தான் முதல் ராகமா சொல்லிக்கொடுப்பாங்க”. எனக்கு போரடித்தது. ”அது என்னங்க, கருப்பா, சத்தமெல்லாம் கொடுக்குது?” என்றேன். இதுக்குப் பேருதான் சார் சுருதிப்பெட்டி. எந்தக்கட்டையிலப் பாடணுமோ அதுல வச்சி பாடலாம். பாருங்க, இந்த பட்டனை, இப்படித் திருப்பினா அது ஒரு கட்டை.. ஆக்சுவலா எட்டு கட்டைன்னு எதுவும் கிடையாது. கழுதைக் கத்தல்தான் எட்டுக் கட்டைன்னு சொல்லுவாங்க”.

இதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பேய் பங்களாவில் தனியாக இருந்தாலும் சரி. இனிமேல், தமிழரசன் வீட்டிற்கு வருவதில்லை என்று சத்தியம் செய்துகொண்டேன். என்றாலும், தொலைபேசி மூலமாக அவர் என் மீது படையெடுத்துக்கொண்டிருந்தார். “சார், நேத்து எங்க மேடம், சாருகேசி ராகத்தோட ஆரோகணம், அவரோகணம் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. லவ்லி ராகா சார். வாத்தியார் வீட்டுப் பிள்ளைப் படத்துல வருமே, “மணமாலையும், மஞ்சளும் சூடி” அதுகூட சாருகேசி தான். அப்புறம், ஸ்ரீ ராகவேந்திராவுல வர்ற “ஆடல் கலையே தேவன் தந்தது”,மன்மத லீலையை வென்றார் உண்டோ, வசந்த முல்லை போலே வந்து”.. சினிமாவுல சாருகேசி சாங்க்ஸ் எல்லாம் ஹிட் சார்”. எனக்கு தலை சுற்றியது. அதன் பிறகு போன் அலறினால், நானும் அலறிவிடுவேன்.

அதே வி.எஸ்.என்.எல்-லில் வெங்கட கிருஷ்ணன் தலைமை கணக்காளராக இருந்தார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவர் ஒரு பிராமிண். ஒரு முறை நவராத்திரி விழா அன்று வெங்கட கிருஷ்ணன் வீட்டில் கொலு வைத்திருந்தார்கள். அன்றைக்கு அவர் வீட்டிற்கு நிறைய பிராமிண் தம்பதியினர் வந்திருந்தார்கள். வந்தவர்கள், யாராவது பாட்டு பாடினால் நன்றாக இருக்குமென்று அபிப்ராயப்பட்டார்கள். வெங்கடகிருஷ்ணனின் மனைவி, ”தமிழரசன் நல்லாப் பாடுவாரே, அவரைக்கூப்பிடுறேன்” என்றார். சற்று நேரத்தில் தமிழரசன் தன் சுருதி பெட்டி சகிதம் வந்துவிட்டார்.

மாமிகளெல்லாம் வாயெல்லாம் பல்லாக அவரிடம் கர்நாடக இசைப் பாடல் பாடத்தெரியுமா என்று விசாரித்தார்கள். உற்சாக மிகுதியில். தமிழரசன் தனக்குத் தெரிந்த ராகங்களை எல்லாம் சொல்ல, மாமிகள் புல்லரித்துப் போனார்கள்.கடைசியாக அவர் ரேவதி ராகத்தில் ஒரு பாடல் பாடுவதாக முடிவாயிற்று. கணீரென, அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பிப் பாட ஆரம்பித்தார் தமிழரசன். மாமிகளிடம் இந்தப் பாடலுக்கு ஆதிதாளம் என்று க்ளூ வேறு கொடுத்தார்.

“போ, சம்போ, சிவ சம்போ, ஸ்வயம்போ....”

மாமிகள் அந்தப்பாடலை ரசித்துக்கொண்டே தொடை தட்டினார்கள். தமிழரசன் பாடி முடிந்ததும், மாமிகள் கரகோஷம் எழுப்பி அவரைப் பாராட்டினார்கள். ஒரு மாமி அவரிடம் கேட்டார். “நோக்கு கல்யாணம் ஆச்சா, அம்பி?”. தமிழரசன் இல்லையென்று தலையாட்டினார். ”எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கா, சேப்பா இருப்பா, நன்னா பாடுவா. நோக்கு என்ன கோத்திரம்டா அம்பி?”. சட்டென்று தமிழரசன் முகம் இருண்டது. தலையை குனிந்து கொண்டார்.

 “இல்லை. நான் வேற ஜாதி”.

“என்ன வேற ஜாதியா? அப்போ நீ நம்மவா இல்லையா? சரி, நீ என்ன ஜாதி?”

இப்போது தமிழரசன் கண்கள் கலங்கிவிட்டன. தலையை குனிந்துகொண்டே சொன்னார். “நான் வள்ளுவர்-ங்கிற ஜாதி.”

“எது? ஜோசியம் சொல்லுவாளே அந்த ஜாதியா? அது எஸ்.ஸி தானே?”


தமிழரசன் அழுகை அதிகமானது. சட்டென்று எழுந்து தன் சுருதிப்பெட்டியுடன் வெளியேறினார். மாமிகள் எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.ஒரு மாமி, வெங்கட கிருஷணனின் மனைவியிடம் கேட்டார். “ஏண்டிம்மா, பாட்டு பாட நோக்கு வேற ஆள் கிடைக்கலையா? அதற்கு அவர் சொன்னார், “ சாரி மாமி, அவர் இந்த ஜாதின்னு எனக்குத் தெரியாது”. எனக்கு அங்கே இருப்பது அருவருப்பாகப்பட்டது. வெங்கட கிருஷணனின் மனைவி என்னிடம் கூட நான் என்ன ஜாதியென்று கேட்டிருக்கிறார். நான் என் ஜாதியை சொன்னபோது, “அப்போ நீங்க ப்ராமிண் இல்லையா? உங்க மச்சானைப்பார்த்தா ப்ராமிண் மாதிரி இருக்கிறார். நீங்க பொய் சொல்லலையே”...

அதற்குப் பின் நான் வெங்கட கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றதில்லை.

கொசுறு : என்னுடன் பணிபுரியும் ஜாகீத் மீர் ஒரு காஷ்மீரி. பெண்களுடன் இணையத்தில் அரட்டை அடிப்பது அவனின் பொழுதுபோக்கு. ஒருமுறை அவன், யு.எஸ். ஸில் சாஃப்ட்வேரில் பணி புரியும் ஒரு ப்ராமிண் பெண்ணிடம் இப்படி கேட்டிருக்கிறான்.

“நீங்க இவ்வளவு படிச்சிருக்கீங்களே..இன்னும் மனுஷன்ல ஏற்றத்தாழ்வு இருக்கிறதை ஆதரிக்கிறீங்களா?”

”அதிலென்ன சந்தேகம். ப்ராமின்ஸ் தான் எப்பவுமே இண்டெலெக்சுவலஸ். மற்றவங்களை விட உயர்வானவங்க”...

அதற்குப்பின் அவனுடைய அரட்டைத் தொடர்பிலிருந்து அந்த மாமியை அவன் நீக்கிவிட்டான்.

பார்ப்பனீயம் என்பது ஒரு கீழ்மையான குணம்.(நன்றி : டாக்டர் ருத்ரன்)