திங்கள், ஜனவரி 20, 2014

மித்ரா எனும் நண்பன்

எங்கள் கம்பெனியில் மித்ர(நண்பன்) எனும் ஒரு கோட்பாடு இருக்கிறது. யாராவது புதிதாக கம்பெனியில் சேர்ந்தால் அவருக்கு ஒரு நண்பரை மனிதவள மேம்பாட்டுத் துறையினர் நியமிப்பார்கள்.

அந்த நண்பர் புதிதாய் சேர்ந்த ஊழியருக்கு நிறுவனம் பற்றி விளக்கவேண்டும். எதாவது சந்தேகம் (நிறுவன கொள்கைகளில்) வந்தால் அதை நிவர்த்தி செய்து வைக்கவேண்டும். இன்னும் சிலபல வேலைகளை அந்த மித்ர என்னும் ஊழியர் புதியவருக்கு செய்து தரவேண்டும்.

அன்று மனிதவள துறையைச் சேர்ந்த பூஜாவால் நான் அழைக்கப் பட்டேன்.

“பெத்து, புதிதாய் ஒருவர் நாளை நம் நிறுவனத்தில் சேர இருக்கிறார். அவருக்கு நண்பராக இருக்க சம்மதமா?” என்றார்.

பொதுச்சேவை என் குருதியில் கலந்த ஒன்றாயிற்றே!

“கண்டிப்பாக செய்கிறேன்” என்றேன். புதியவரின் செல்பேசி எண்ணை எனக்குத் தந்தார். அவரை அழைத்து நான் பேசவேண்டும். வரவேற்பு கொடுக்கவேண்டும்.

ஆகவே, அவரை செல்பேசி மூலம் அழைத்தேன்.

“நான் ஜிகர் உடன் பேசிக்கொண்டிருக்கிறேனா?”
“ஆம். எதன் பொருட்டு பேசுகிறீர்கள்?”

“நான் சிஸ்டம்ஸ் ப்ளஸ் எனும் கம்பெனியில் இருந்து பேசுகின்றேன். நான் உங்களின் நண்பன். அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு உதவுவேன்”

“ஓ! மித்ராவா? மிக்க மகிழ்ச்சி. நாளை சந்திக்கலாம். அப்புறம், உங்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார்.

இலேசாக சிலிர்த்துப்போனேன். “எனக்கும் அவ்வாறே” என்று கூறி இணைப்பை அறுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் ஜிகரை சந்தித்தேன். தலையில் ஸ்பைக், முகவாய்க்கட்டையில் ஃப்ரெஞ்ச் என்று மாடர்னாக இருந்தான்.

நிறுவனத்தில் இருக்கும் பெரிய தலைகளை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். கூடவே, நிறுவனத்தின் கொள்கைகளையும் அவனுக்கு சொன்னேன்.

மதிய உணவுக்கு ஒரு நல்ல உணவகத்துக்கு அழைத்துச் சென்று விருந்தளித்தேன் (பணத்தை நிறுவனம் எனக்கு திரும்பத் தந்துவிடும்)

என் வட்ட நண்பர்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்தினேன். எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்த்து. மூன்று நாட்கள் கழித்து திடீரென காணாமல் போனான்.

செல்பேசி மூலம் இரண்டுமுறை அழைத்தேன். அழைப்பை அவன் எடுக்கவில்லை. மனிதவள துறைக்குச் சென்று பூஜாவிடம் சொன்னேன். அவர் சொன்னார், “அவன் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டான்”.

எனக்கு வயித்தெரிச்சலாக வந்தது. மூன்று நாள் அவனுடன் சுற்றியிருக்கிறேன். ஃபோனை எடுத்து “இனிமேல் நான் வரமாட்டேன்” என்று சொன்னால் குறைந்தா போய்விடுவான். பூஜாவிடம் சொல்லி குறைபட்டுக்கொண்டேன். ஆறுதல்படுத்தினார். “பெத்து, நாளை ஒருவர் சேர இருக்கிறார், நீ அவருக்கு நண்பராக இருக்கிறாயா?” என்றார்.

வழக்கம் போல் சமூகசேவை காரணமாய் ஒத்துக்கொண்டேன். அவனுடைய செல்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டேன்.

“என் பெயர் பெத்துசாமி. நான் பேசிக்கொண்டிருப்பது ஸ்வப்னிலுடன் தானே?”
“ஆமாம். நீங்கள்?”
“நான் சிஸ்டம்ஸ் ப்ளஸிலிருந்து பேசுகிறேன். நான் உங்கள் மித்ரா. அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு உதவுவேன்”
“உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி” என்றான்.

“எனக்கும் அவ்வாறே” என்றேன் சுரத்தே இல்லாமல்.


செவ்வாய், ஜூன் 15, 2010

கால எந்திரம் என்னும் அதிசயம்

எந்திரம் ஒன்றின் மூலம், நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் செல்லமுடியுமா என்ற அற்புதமான கற்பனை மூலம் உருவானதுதான் இந்த “கால எந்திரம்” (Time Machine) என்னும் ஆராய்ச்சி. இந்த எந்திரம் உருவாக்கப்படுவது சாத்தியமா, இல்லையா என்கிற விவாதம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில விஞ்ஞானிகள் அதற்கான முயற்சிகளில் இன்னும் ஈடுபட்டுக்கொண்டுதானிருக்கிறார்கள்.ஒருவர் ஒளியின் திசைவேகத்தில் (அதாவது, ஒரு நொடிக்கு 1,86,000 கிலோமீட்டர்கள்) பயணம் செய்ய முடிந்தால் அவரால் இறந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். விஞ்ஞானி ஐன்ஸ்டீனைப் பொறுத்தவரை, காலத்தில் பின்நோக்கிப் பயணம் என்பது இயலாத காரியம். ஏனெனில், காலம் என்பது தட்டையானது, முன்னோக்கி மட்டும் நகரக்கூடியது என்கிறார். மேலும், தாத்தாவுடன் முரண்பாடு (?!) (GrandFather Paradox) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு, மிஸ்டர் எக்ஸ், காலத்தில் பின்நோக்கிப் பயணப்படுகிறார். அங்கே அவர்  தனது தாத்தாவைக் கொன்று விட்டு, நிகழ்காலத்திற்குத் திரும்புகிறார். எனில், மிஸ்டர் எக்ஸ்ஸின் அப்பா எப்படி உருவாகியிருக்க முடியும்? மிஸ்டர் எக்ஸ் தான் எப்படி பிறந்திருக்கமுடியும்?




இந்தப்பிரச்சினைக்கு, ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி இகர் நோகிகோவ், இப்படி பதில் அளிக்கிறார்.”இறந்த காலத்திற்கு சென்று ஒருவர் வரலாற்றை மாற்ற முடியாது. அப்படி அவர் அதை மாற்றினால், அவரால் நிகழ்காலத்திற்குத் திரும்ப வரமுடியாது.” இந்த வாதம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் என்ன ஆகும் என்பதை யாராவது இறந்த காலத்திற்கு சென்று வந்தால் தான் சொல்லமுடியும். மேலும், கால எந்திரம் என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று சில விஞ்ஞானிகள் குழுவும், முடியும் ஆனால் நிறைய செலவாகும் என்று மற்றொரு குழுவும் தெரிவிக்கிறார்கள்.



எது எப்படியோ, காலத்தில் பயணம் செய்வது என்பதே ஒரு சந்தோஷமான, ஆச்சர்யமான கற்பனைதான். சிறுவயதில் நான் லயன் காமிக்ஸில் வரும் ஆர்ச்சி கதைகளில், ஆர்ச்சி என்னும் இயந்திர மனிதன், தன் நண்பர்களுடன் காலத்தில் முன்நோக்கியும், பின்னோக்கியும் பயணம் செய்வது, அங்கே சாகஸங்கள் புரிவது போன்ற சம்பவங்களப் படித்து விட்டு, பலமுறை கற்பனைகளில் ஆழ்ந்து, காந்தி வாழ்ந்த காலத்திற்கு நான் செல்வது போலவும், அங்கே கோட்ஸேவைக் கண்டுபிடித்து, காந்தியைக்கொல்லாமல் செய்யும்படி நான் சாகஸம் புரிவதுபோலவும் கற்பனை செய்து, அதைக் கதையாகக் கூட எழுத முயன்றிருக்கிறேன்.

தமிழில் கால எந்திரம் பற்றிய திரைப்படம் எதுவும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்தத் திரைப்படம் ஒன்று தமிழில் “அபூர்வ சக்தி 365” என்றப் பெயரில் வெளியானது. அதில், பாலகிருஷ்ணா கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் கால எந்திரம் மூலம் பயணம் செய்வார். கடந்த காலம் என்பது ராஜாக்களின் காலமாகவும், அங்கே இளவரசியுடன் காதல், அரசருடன் சண்டை என்று திரைக்கதை செல்லும். பெரும்பாலும், கால எந்திரத்தில் பயணம் செய்யும் ஹீரோ, தவறாமல் ஹீரோயினுடன் பயணம் செய்வதுதான் உசிதம். அப்போதுதான் அதில் சுவாரஸ்யமிருக்கும். கூடவே ஒரு காமெடியனும் இருந்துவிட்டால் - பலே!. இந்தப்படத்திலும், இதே மாதிரி தான் ஹீரோ இறந்த காலத்தில் வந்து லூட்டி அடிக்கிறார். பிறகு, எதிர்காலத்திற்கு செல்லுகிறார்கள். அங்கே, பூமியில் ரசாயனமாற்றம் ஏற்பட்டுவிட்டதால், மக்கள் எல்லோரும் பூமிக்கு அடியில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வந்து வில்லனைப்பழி வாங்குகிறார் பாலகிருஷ்ணா. அந்த வயதில் எனக்கு இந்தப்படம் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணியது. 3 முறை அந்தப்படத்தைப் பார்த்தேன்.



ஆங்கிலத்தில் எத்தனையோ படங்கள், கால எந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வந்திருக்கின்றன. அவற்றுள் என்னைக்கவர்ந்தப் படம் “Time Machine (2002)". இறந்துபோன காதலியை, இறந்தகாலத்திற்குச் சென்று, அவளைக் காப்பாற்ற முயல்கிறான் நாயகன். ஆனால், அதிலும் அவள் இறந்துபோகிறாள். இங்கே, ரஷ்ய விஞ்ஞானி இகர் நோகிகோவின் தத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். அதாவது, விதியை மாற்ற முடியாது. பிறகு, நிகழ்காலத்திற்கு வரும்போது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டு, எதிர் காலத்திற்கு செல்கிறான் நாயகன். எதிர்காலத்திலும் கூட வெவ்வேறு ஆண்டுகளுக்குப் பயணப்படுகிறான் . முடிவில், எதிர்காலத்திலேயே தங்கிவிடுகிறான்.

தமிழில் இப்படியொரு சினிமாவை எடுக்கும் ஆற்றல் சிம்பு தேவனுக்கு இருப்பதாகக் கருதுகிறேன். இறந்தகாலம் மற்றும் எதிர்காலக் காட்சிகளில் தன் பின்நவீனத்துவ உரையாடல்கள் மூலம் அவர் வசனத்தில் பின்னி எடுக்கலாம்.எத்தனையோ படங்கள் கால எந்திரத்தைப் பற்றி நான் பார்த்திருந்தாலும், இன்னும் எத்தனைப் படங்கள் இதே தளத்தில் வந்தாலும் சலிக்காமல் பார்ப்பேன்.

(தகவல் உபயம் : விக்கி பீடியா)

திங்கள், ஜூன் 14, 2010

தந்தையின் அன்பு எதுவரை?

என் பெற்றோரின் திருமணமும் காதல் திருமணம்தான். ஒரே தெருவில் ஐந்தாறு வீடுகள் தள்ளி குடியிருந்த என் தாயுக்கும், தந்தைக்கும் எப்படியோ காதல் தீ பற்றிக்கொண்டது. இருவருமே ஒரே ஜாதி என்பதால் காதலுக்குத் தடையேதுமிருக்கவில்லை. என் தந்தை ஆத்தூரில் (எங்கள் ஊரிலிருந்து 30 கி.மீ. தொலைவு) ஒரு வங்கியில் பணிபுரிந்துவந்தார். காலை எட்டு மணிக்கு அலுவலகம் செல்லும் அவர் இரவு 8 மணிக்குமேல் தான் வீடு திரும்புவார்.


பெரும்பாலும் எங்கள் வாழ்க்கை (நான், என் அண்ணன், என் தங்கை) எங்கள் தாத்தா (அம்மா வழி) வீட்டில்தான் கழியும். அங்கேயே உண்டு, உறங்கி, குளித்து - பள்ளி மற்றும் ட்யூசன் செல்வோம். தந்தையை பெரும்பாலும் பார்ப்பது வார இறுதியான ஞாயிறு மட்டுமே. அவர் எங்களை கொஞ்சியது எனக்கு நினைவில்லை. எங்களுடன் விளையாடியதில்லை. ஒரு கலாச்சார கிராமத்து தந்தையாகவே வாழ்ந்து மடிந்தார். 

நம்மில் பலர் பெரும்பாலும், நமது குழந்தைகளுடன் விளையாடுவதில்லை. அவர்களுக்கு கதை சொல்வதில்லை. வாழ்க்கை முழுவதும் வேலை, வேலை என்று அலைந்துவிட்டு, வயதானப் பிறகு பேரக்குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள்.


நான் காலை 9 முதல் 7 மணி வரை மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்ப்பேன். பிறகு நேராக வீட்டிற்குச் சென்றுவிடுவேன். காத்திருக்கும் என் மகள்களுடன் கொஞ்சி விளையாடுவதில் உள்ள சுகமே தனி. இரவில் தூங்கும்போது என்னிடம் கதைக்கேட்பதில் சௌமியாவிற்கு (5 வயது) கொள்ளை இஷ்டம். நான் அவளுக்கு டோரா கதைகள், டாம் அண்ட் ஜெர்ரி கதைகள், ஜங்கிள் புக் கதைகள் என்று அவற்றில் இல்லாத புனைவுக்கதைகளை என்னிஷ்டம்போல் அவிழ்த்து விடுவேன். விரிந்த விழிகளுடன் சௌமியா நிறைய குறுக்குக்கேள்விகள் கேட்பாள். சலிக்காமல் பதில் சொல்லுவேன். கதை முடிந்ததும், என்னை அண்டி படுத்துக்கொண்டு, “அய்யா, நீங்க ரொம்ப நல்ல அய்யா! எனக்கு கதை சொல்றீங்க, என் கூட விளையாடுறீங்க, உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று சொல்லுவாள். எனக்கு லேசாக கண்ணில் நீர் அரும்பும். எனக்குக் கிடைக்காத அந்தப் பாசத்தை என் மகள்களுக்குக் கொடுப்பதில் எனக்கு மனதிருப்தி.


ஒருமுறை “டாம் அண்ட் ஜெர்ரி” கதையில் “Heavenly Puss" என்ற கதையைப் பார்த்தோம். சௌமியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அந்தக் கதையில் நிறைய காமெடி வசனங்களைப் புகுத்தி சொன்னேன். அவளுக்கு அது ரொம்பப் பிடித்துப்போயிற்று. அதன் பிறகு அவள் அதை ஒரு விளையாட்டாக மாற்றினாள். அதாவது, அவள் டாம் ஆகவும், நான் ஜெர்ரியாகவும் நடிக்கவேண்டும். மற்ற கேரக்டர்களை இருவரும் சமமாகப்பிரித்துக்கொண்டு சைகையில் விளையாடுவோம். பிறகு நான் டாம் ஆகி, அவள் ஜெர்ரி ஆகிவிடுவாள். அப்போது அவள் முகத்தில் வரும் சந்தோஷம் அளவிடமுடியாதது.


நான் அலுவலகம் விட்டு வந்ததும், என்னை வரவேற்கும் இன்னொரு குட்டிதேவதை தீபிகா. ஒரு வயதுதான் ஆகிறது. என்னைக்கண்டவுடன் “அய்யா” எனக்கூவி, கைகளை ஆட்டி, தலையசைத்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்துவார். நான் அவரைக் கையில் தூக்கி “தீபிகா கண்ணு, உன் பேர் என்னம்மா” என்றால், “கீ..கி.காஆஆஆஆஆஆ” என்று சொல்லிவிட்டு கீழ்வரிசை பற்கள் இரண்டையும் காட்டி சிரிப்பார். அப்படியே அவர் உதடுகளில் முத்தமிட்டு, அவரை என் தோளில் சாய்த்துக்கொள்வேன். உடனே என் மேல் இறுக்கமாய் ஒட்டிக்கொள்வார். இதுதான் சொர்க்கம்.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கையில்லை. அப்படி கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் குழந்தைகள் வடிவில் ஒவ்வொருவர் வீட்டிலும் விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.