திங்கள், ஜனவரி 20, 2014

மித்ரா எனும் நண்பன்

எங்கள் கம்பெனியில் மித்ர(நண்பன்) எனும் ஒரு கோட்பாடு இருக்கிறது. யாராவது புதிதாக கம்பெனியில் சேர்ந்தால் அவருக்கு ஒரு நண்பரை மனிதவள மேம்பாட்டுத் துறையினர் நியமிப்பார்கள்.

அந்த நண்பர் புதிதாய் சேர்ந்த ஊழியருக்கு நிறுவனம் பற்றி விளக்கவேண்டும். எதாவது சந்தேகம் (நிறுவன கொள்கைகளில்) வந்தால் அதை நிவர்த்தி செய்து வைக்கவேண்டும். இன்னும் சிலபல வேலைகளை அந்த மித்ர என்னும் ஊழியர் புதியவருக்கு செய்து தரவேண்டும்.

அன்று மனிதவள துறையைச் சேர்ந்த பூஜாவால் நான் அழைக்கப் பட்டேன்.

“பெத்து, புதிதாய் ஒருவர் நாளை நம் நிறுவனத்தில் சேர இருக்கிறார். அவருக்கு நண்பராக இருக்க சம்மதமா?” என்றார்.

பொதுச்சேவை என் குருதியில் கலந்த ஒன்றாயிற்றே!

“கண்டிப்பாக செய்கிறேன்” என்றேன். புதியவரின் செல்பேசி எண்ணை எனக்குத் தந்தார். அவரை அழைத்து நான் பேசவேண்டும். வரவேற்பு கொடுக்கவேண்டும்.

ஆகவே, அவரை செல்பேசி மூலம் அழைத்தேன்.

“நான் ஜிகர் உடன் பேசிக்கொண்டிருக்கிறேனா?”
“ஆம். எதன் பொருட்டு பேசுகிறீர்கள்?”

“நான் சிஸ்டம்ஸ் ப்ளஸ் எனும் கம்பெனியில் இருந்து பேசுகின்றேன். நான் உங்களின் நண்பன். அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு உதவுவேன்”

“ஓ! மித்ராவா? மிக்க மகிழ்ச்சி. நாளை சந்திக்கலாம். அப்புறம், உங்களுடன் பேசியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி” என்றார்.

இலேசாக சிலிர்த்துப்போனேன். “எனக்கும் அவ்வாறே” என்று கூறி இணைப்பை அறுத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் ஜிகரை சந்தித்தேன். தலையில் ஸ்பைக், முகவாய்க்கட்டையில் ஃப்ரெஞ்ச் என்று மாடர்னாக இருந்தான்.

நிறுவனத்தில் இருக்கும் பெரிய தலைகளை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். கூடவே, நிறுவனத்தின் கொள்கைகளையும் அவனுக்கு சொன்னேன்.

மதிய உணவுக்கு ஒரு நல்ல உணவகத்துக்கு அழைத்துச் சென்று விருந்தளித்தேன் (பணத்தை நிறுவனம் எனக்கு திரும்பத் தந்துவிடும்)

என் வட்ட நண்பர்கள் அனைவரிடமும் அறிமுகப்படுத்தினேன். எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்த்து. மூன்று நாட்கள் கழித்து திடீரென காணாமல் போனான்.

செல்பேசி மூலம் இரண்டுமுறை அழைத்தேன். அழைப்பை அவன் எடுக்கவில்லை. மனிதவள துறைக்குச் சென்று பூஜாவிடம் சொன்னேன். அவர் சொன்னார், “அவன் வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டான்”.

எனக்கு வயித்தெரிச்சலாக வந்தது. மூன்று நாள் அவனுடன் சுற்றியிருக்கிறேன். ஃபோனை எடுத்து “இனிமேல் நான் வரமாட்டேன்” என்று சொன்னால் குறைந்தா போய்விடுவான். பூஜாவிடம் சொல்லி குறைபட்டுக்கொண்டேன். ஆறுதல்படுத்தினார். “பெத்து, நாளை ஒருவர் சேர இருக்கிறார், நீ அவருக்கு நண்பராக இருக்கிறாயா?” என்றார்.

வழக்கம் போல் சமூகசேவை காரணமாய் ஒத்துக்கொண்டேன். அவனுடைய செல்பேசி எண்ணைப் பெற்றுக்கொண்டேன்.

“என் பெயர் பெத்துசாமி. நான் பேசிக்கொண்டிருப்பது ஸ்வப்னிலுடன் தானே?”
“ஆமாம். நீங்கள்?”
“நான் சிஸ்டம்ஸ் ப்ளஸிலிருந்து பேசுகிறேன். நான் உங்கள் மித்ரா. அடுத்த மூன்று மாதங்களுக்கு உங்களுக்கு உதவுவேன்”
“உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி” என்றான்.

“எனக்கும் அவ்வாறே” என்றேன் சுரத்தே இல்லாமல்.


10 கருத்துகள்:

 1. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி பாரதி!

  பதிலளிநீக்கு
 2. "சாமியார் - தேள்" கதை நினைவுக்கு வருகிறது. அவன் அப்படி என்பதற்காக உங்கள் இயல்பில் மாற்றம் வேண்டாம் சகோ.. உங்கள் வழியில் பயணம் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 3. பின்னூட்டத்திற்கு நன்றி சகோ. நான் என் இயல்பில் மாறுவதில்லை.

  பதிலளிநீக்கு
 4. இந்த கார்ப்ரேட் உலகில் எல்லாம் மாயை; There's no trust, but calculated trust.. உன் வாழ்க்கை என் கையில்; என் வாழ்க்கை உன் கையில்.- இதுக்கு அர்த்தம் என்னான்னா, உன் கால்ல கட்டியிருக்கிற கயிறின் நுனி என்னிடம், அதே மாதிரி, என் கால்ல கட்டியிருக்கிற கயிறின் மறுமுனை உன்னிடம்.. Good one Petthu, keep it up!

  பதிலளிநீக்கு
 5. உங்களின் பதிவு வேலை செய்வதில் உள்ள,வேலை தருவதில் உள்ள சிக்கல்களை தெரியபடுத்தியது.இது அனைவருக்கும் அவசியம் தெரியவேண்டிய பதிவாக இருக்கிறது.எனக்கு இதை படித்தவுடன் இது போன்ற சூழலில் ஏன் என் போன்றவர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடாது,நான் படித்துவிட்டு சில வேலைகள் பார்த்துவிட்டு தற்போது வேலை இல்லாமல் உள்ளேன்.எனக்கு வேலை வாய்ப்பு தந்தால் என் தாய்க்கு நிம்மதி.எனக்கும் செலவுக்கு பணம் கிடைக்கும்.முடிந்தால் உதவுங்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 6. யதார்த்தவாதிகளின் வாழ்க்கையில் இந்த மித்ரா Chapter போல பல Chapter கள் தொடர்ந்து கொண்டே இருப்பதுதான் Interesting.நல்லா எழுதிருக்கீங்க ஜி

  பதிலளிநீக்கு