திங்கள், ஜூன் 07, 2010

சினிமா என்னும் கானல் நீர்

பத்தாண்டுகளுக்கு முன் ஒரு நாள், நான் ஒரு எதிர்பாராத சினிமாச் சுழலில் சிக்கிக்கொண்டேன். என் அண்ணனுடைய பிரிண்டிங் ப்ரஸில்தான் அந்த துக்க  சம்பவம் நேரிட்டது.

டாக்டர் சுந்தர்காந்த் (நிஜப்பெயர் வேண்டாமே!) என் எதிரில் வந்து நின்றார்.

”வாங்க சார்” என்று வரவேற்றேன். “நீங்க சுவாமி அய்யப்பன் படம் பாத்தீங்களா? என்றார்.

”இல்லை சார்.”

“அந்தப்படத்துல நான் நடிச்சிருக்கேன். சபரிமலைக்குப் போகும்போது, அந்தப்படத்தோட டைரக்டர் என்னை நடிக்கச்சொன்னார். குருசாமியா நடிச்சிருக்கேன்”.

“ஆமா பெத்து. நான் கூட அந்தப்படம் பாத்திருக்கேன். அதுல சார் நடிச்சிருக்கார்.” - என் நண்பன் செந்தில் சொன்னான்.

சற்றே பெருமிதமேறிய முகத்துடன் என்னைப்பார்த்தார் டாக்டர். 

“இப்போ கூட அன்னக்கிளி சொன்னக்கதை-ங்கிற படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். சத்யராஜ் படம். நான் ஒரு வில்லன் ரோல்-ல வரேன்.”
”அப்படியா சார்” - முகத்தில் ஆச்சர்யம் காட்டினேன்.

டாக்டர் முகத்தில் பெருமிதமும், லேசான சிரிப்பும் தென்பட்டது.

டாக்டர் - என்றால் அவர் எம்.பி.பி.எஸ். படித்தவர் இல்லை. ஏதோ ஒரு டாக்டரிடம் கம்பவுண்டராக சேர்ந்து, தலைவலிக்கும், காய்ச்சலுக்கும் டாக்டர் பரிந்துரைக்கும், மாத்திரைகளையும், ஊசியையும் கொடுத்து அனுபவப்பட்டவர். அப்படியே ஒரு சுபயோக சுபதினத்தில் டாக்டரானார்.

கிராமத்தில் இவர் ஒரு மொபைல் டாக்டர். தன் லெதர் மருந்துப் பையை சைக்கிளில் மாட்டிக்கொண்டு, யாருக்காவது உடம்பு சரியில்லையென்றால், ஊரில் விசாரித்துக்கொண்டு வீடு தேடி சென்று ஊசி போடுவார். பணம் இருந்தால் கொடுக்கலாம். இல்லையென்றால் அக்கவுண்ட்டில் எழுதிக்கொள்வார்.

”சத்யராஜிக்கு ஒரு தடவ, சரியான தலைவலி. நான் ஒரு ஊசி போட்டேன். ஒடனே சரியாயிடுச்சி. நீங்க டாக்டரான்னு ஆச்சர்யப்பட்டார்.”
எனக்குப் பெருமிதமாக இருந்தது. செந்தாரப்பட்டி என்னும் சிறிய கிராமத்திலிருந்து போய் சினிமாவைக் கலக்குகிறாரே.

அப்புறம்தான் அவர் தன் சுயரூபத்தைக்காட்ட ஆரம்பித்தார்.

”என் கிட்ட கூட ஒரு கதை இருக்குது. கேளேன்.” என்றார்.

”சொல்லுங்க, சொல்லுங்க” என்றபடியே என் நண்பன் செந்திலைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்து பல்லைக்கடித்தான். ஓடிப்போகும்படி சைகை செய்தான்.

நான் கதைக் கேட்பதில் ஆர்வமானேன்.

ஒரு சின்ன கிராமம். அதுல ஒரு ஜமீன்தார். அவருக்கு ஏகப்பட்ட நிலபுலன்கள். டவுன்ல படிச்சிட்டு இருக்கிற அந்த ஜமீன்தார் பையன் லீவுல ஊருக்கு வர்றான். வந்த எடத்துல அவங்க தோட்டத்துல களை வெட்ட வந்த ஹீரோயினி(?!) மேல அவனுக்கு காதல் வருது. இங்க ஒரு சாங் வைக்கிறோம். அந்தப் பெண்ணைக் கிண்டல் பண்ணி ஹீரோ பாடற சாங்.

”கன்னிப்பொண்ணு மீனா, களைவெட்டப் போனா....” - ராகமெடுத்துப் பாட ஆரம்பித்தார்.

முழுப்பாட்டும் ஓடிக்கொண்டிருந்தது. செந்தில் சொன்னதன் அர்த்தம் அப்போது தான் புரிந்தது.

அப்புறம் ரெண்டு பேருக்கும் காதல் ஆயிடுது. இத தெரிஞ்சப் பண்ணையார், மகனைப் படிக்க மறுபடியும் டவுனுக்கு அனுப்பிடுறார். இங்க ஒரு பேதாஸ்  சாங் வைக்கிறோம்.

“கண்மணி ராஜா, கலங்குது ரோஜா” - மீண்டும் முழுப்பாடல்.

வாழ்க்கை நொந்தேன். திடீரென்று வந்த என் அண்ணன் தான் என்னைக்காப்பாற்றினார். “இன்னும் சாப்பிடலயா? வீட்டுக்குப்போய் சாப்பிடு” என்றார். 

“நான் வரேன் சார்” என்று நழுவினேன். செந்தில் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்தான்.

ஒவ்வொரு முறை நான் ஊருக்குப்போகும்போதும், டாக்டர் என்னைப் பார்த்துவிடுவார். “இப்போ ஒரு படத்துக்கு டிஸ்கஷன் நடந்துகிட்டிருக்கு. ப்ரொடியூஸரும் கெடச்சிட்டார். நான் வில்லன் ரோல் பண்றேன்” என்பார்.

சென்ற ஆண்டு நான் ஊருக்குப் போனபோது, ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை சொல்லி ஆச்சர்யப்பட்டார்கள்.

“டாக்டர் வீட்டுத் தோட்டத்துல ஷூட்டிங் எடுத்தாங்க. அவர் ஹீரோ,-ஹீரோயின் கூட, தென்னந்தோப்புல குத்தாட்டம் போட்டார். ஊரே அங்க தான் இருந்தது.”

இந்த முறை ஊருக்கு சென்றபோது டாக்டரைப்பார்த்தேன். அதே சைக்கிளில், மருந்துப்பையுடன் ஊருக்குள் சென்றுகொண்டிருந்தார்.

“சார். எப்படி இருக்கீங்க?” என்றேன்.

“நல்லா இருக்கேன்” என்றார். அவருக்கு மூச்சு வாங்கியது. ”சினிமா சூட்டிங் எல்லாம் உங்க தோட்டத்துல எடுத்தீங்களாம்?” என்றேன்.

வியர்வை, களைப்பை மீறி அவர் முகத்தில் ஒரு வெளிச்சம் பரவியது. “உனக்கும் தெரிஞ்சிடுச்சா? ஆக்சுவலா, கதை என்னன்னா....”?

நான் சுதாரித்துக்கொண்டேன். “ஏன் சார், சூட்டிங் நின்னுபோச்சி?”

”எல்லாம் ஃபைனான்ஸ் ப்ராப்ளம் தான். பணம் கெடச்சதும் அடுத்த செட்யூல் எடுக்க ஆரம்பிச்சிடுவோம்.. நம்ம கார்பெண்டர் முருகேசனுக்கு காய்ச்சலாம். போய் ஊசி போட்டுட்டு வரேன்.” உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார்.

என் மனதிற்குள் ஏதோ துயரம் பரவியது - என்னவென்று சொல்லத்தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக