புதன், மே 19, 2010

காதல் கசக்குதய்யா (அ) கிராமத்துக்காதல்

புலியூரான் (எ) ராஜேந்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஈறு (எ) அருண் தான். கபடி ஆட்டத்திலும், ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்ட ராஜேந்திரனை, முதன் முதலில் பார்த்தபோது, மிரண்டு போனேன். மலைமாடு மாதிரி வளர்த்தியாய் இருந்தான். என்னைப் பார்த்ததும், 'வணக்கண்ணே!' என்று கூறி, சல்யூட் அடித்தான்.

மூவரும் சற்று நேரம் அமைதியாய் இருந்தோம். ஈறு தான் ஆரம்பித்தான்.

"அண்ணே!.. ராஜேந்திரன் அண்ணன் லவ் பண்றார். உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற "கவிதா" வை அண்ணன் மடக்கிட்டாரு..". சொல்லிவிட்டு, கண் சிமிட்டி சிரித்தான்.

எனக்கு ஆத்திரமாய் வந்தது. +1 படிக்கும் சின்னப் பெண், 5 ஆவது கூடத் தாண்டாத இவனைப் பார்த்து எப்படி மயங்கினாள்?

ராஜேந்திரன் தொடர்ந்தான்.

"அண்ணே! நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே! புக்ல கூட வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்..எனக்கு ஒரு காதல் கவிதை எழுதிக்குடுங்க...கவிதாவுக்கு கவிதைனா உயிர்."

"முடியாது போடா" என்று கத்த நினைத்தேன்.ஆனால், ராஜேந்திரனின் புகழ்ச்சி, என்னைத் தடுமாற வைத்து விட்டது.

"இல்ல..ராஜேந்திரா..எனக்கு காதல் கவிதை எழுத வராது..இதுவரைக்கும் நான் காதல் கவிதை எழுதியதில்லை."

ஈறு இடைமறித்தான். "உங்களால முடியும்ணே..".

பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நானும் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு யோசிப்பது போல் நடித்தேன். அப்புறம், எழுத ஆரம்பித்தேன்.

கரையும், அலையும்
இருந்தால் தான் கடல்.
உயிரும், உணர்வும்
இருந்தால் தான் உடல்.
எண்ணமும், எழுத்தும்
இருந்தால் தான் மடல்.
அன்பே! நீயும், நானும்
இணைந்தால் தான் காதல்.

கவிதையை(?!) படித்து விட்டு, ராஜேந்திரன் துள்ளினான். "அண்ணே..இது தான் கவித..கவித.." என்று புல்லரித்தான். என் கையிலிருந்த கவிதை காகிதத்தை, ஏறக்குறைய உருவிக் கொண்டு போயினர் ஈறும், புலியூரானும். பிறகு தான், எனக்கு வினையே ஆரம்பித்தது.

அடுத்த நாள் காலையில் நான் கண்விழித்ததும், எனக்கு வசவு காத்திருந்தது.

காப்பியை என் கையில் கொடுத்தக் கையோடு, என் தாயார் சற்றுக் கோபத்துடன் ஆரம்பித்தார்.

"டேய்! பின்னாடி வூட்டு கவிதாவுக்கு, நீ லவ் லெட்டர் கொடுத்தியா?"

நான் சகலமும் நடுங்கிப் போனேன். "இது என்னடா புதுக் கரடி?"

எங்கிருந்தோ வந்து, வீட்டுக்குள் நுழைந்த என் தங்கை தான் என்னைக் காப்பாற்றினாள்.

"அம்மா! அந்த லவ் லெட்டர் எழுதுன ஆள கண்டுபுடிச்சாச்சி! புலியூரான் ராஜேந்திரன் தான் அத குடுத்துருக்கான். அவன அடிக்கிறதுக்காக, கவிதா வூட்ல எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க"

"அப்புறம் ஏன் லெட்டர்ல இருக்கறது ஒங்க அண்ணன் கையெழுத்து மாதிரி இருக்குதுன்னு சொன்னாங்க?"

நான் அந்த லெட்டரப் பாத்தேன். அது அண்ணன் கையெழுத்து இல்ல..."

அம்மா போய்விட்டார். மெதுவாக என் தங்கையிடம் சென்றேன். அவள் என்னைக் கோபத்துடம் நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனுக்கு ஏன் கவிதை எழுதிக் கொடுத்தீங்க? அவன் நீங்க எழுதிக் கொடுத்த பேப்பர்லயே, மத்ததெல்லாம் சேத்து எழுதிக்கொடுத்திருக்கான்.."

எனக்கு டென்ஷன் எகிறியது. "அடேய்..புலி.."

நேராக, பாய் வீட்டுத் திண்ணைக்குப் போனேன். அங்கே, எனக்காக ஈறு காத்திருந்தான். என்னைக் கண்டதும் அசிங்கமாய் சிரித்தான்.

"அண்ணே! கை குடுங்க...ஒங்க கவிதையை "கவிதா" சூப்பர்னு சொல்லிச்சி"..

எனக்கு வந்தக் கோபத்தில், ஈறுவின் தலையைப் பிடித்து கீழே தள்ளி, அவன் முதுகில், ஆசை தீர கும்மினேன்.

"ஏண்டா நான் எழுதிக் கொடுத்த கவிதை பேப்பர அப்படியே குடுத்தீங்க? புதுசா எழுதிக் குடுத்திருக்கலாம்ல.."

"அண்ணே..ஒங்க கையெழுத்து நல்லா இருந்துச்சி..அதனால தான் ராஜேந்திரன் அண்ணன்..."

எனக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது."போடி..புலி எழுதுன லவ் லெட்டர், அவங்க அப்பா கைல மாட்டிக்கிச்சி...அவஙக வூட்ல, புலிய தேடிக்கிட்டு இருக்காங்க.. கெடச்சான் அவனுக்கு சங்குதான்டி.."

"நெஜமாவாண்ணே சொல்றீங்க?" என்றவன், புலியூரானைத் தேடிப் போனான். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. புலியூரானைப் பார்க்க முடியவில்லை. எனக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. ஈறுவிடம் விசாரித்தேன்.

"என்னடா அருண்..புலி எங்கடா?"

"கவிதா புள்ள அப்பன், ராஜேந்திரன் அண்ணன கூப்டு திட்டிட்டார். அந்த புள்ள என்னடான்னா, ராஜேந்திரன் அண்ணன பாக்க வேணாம்னு சொல்லிடிச்சி.. அண்ணனுக்கு மனசே சரியில்லாம..வீட்டோட இருக்காரு..."

எனக்கு புலி மேல் பரிதாபம் வந்தது.

"புலி, கொட்ட எடுத்த புலி ஆயிடுச்சி போல" என்று சொல்லி என் நண்பன் செந்தில் சிரித்ததை என்னால் ரசிக்க முடியவில்லை. ஒரு மாதம் சென்றது.

கவிதாவுக்கும், ராசிபுரத்தை சேர்ந்த ஒரு வக்கீலுக்கும் திருமணம் நடந்தது. என்னால் நம்ப முடிய வில்லை. கல்யாணத்திற்கு நானும் சென்றிருந்தேன். கவிதா முகத்தில் பயங்கர வெட்கச் சிரிப்பு. எனக்கு, புலியின் ஞாபகம் வந்து போனது. இன்னும் ஒரு மாதம் போனது.

ஒரு நாள், புலியூரானும், ஒரு வாட்ட சாட்டமானப் பெண்ணும் சாலையில் சிரித்து பேசியபடி சென்றார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில், புதுத் தாலி தொங்கிக் கொன்டிருந்தது. எனக்குப் புரிந்தது. ஈறுவிடம் கேட்டபோது, உற்சாகமாய் பேசினான்.

"ஆமாண்னே.. அண்ணன் போன வாரம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. பொண்ணு வீட்லயே கல்யாணம் நடந்துச்சி...அதனால தான், யாருக்கும் சொல்ல முடியல..."

"அப்போ..அந்த கவிதாவ 'லவ்' பண்ணுனது?"

"அடப் போங்கண்ணே..அதெல்லாம் சும்மா டைம்-பாஸ்...இன்னுமா அத நீங்க ஞாபகம் வச்சுருக்கீங்க..அய்யோ...அய்யோ..."

அதற்குப் பிறகு நான் கவுஜை எல்லாம் எழுதுவதில்லை.

9 கருத்துகள்:

 1. ரொம்ப நல்லா இருக்கு உங்கள் எழுத்து நடை

  பதிலளிநீக்கு
 2. எல்லாருக்கும் ராஜேந்திரன் மாதிரி ஒருத்தனோட அனுபவம் இருக்குதுன்னு நினைக்கிறேன் ...
  பயபுள்ள கடுப்பேத்துரானுக....
  போகட்டும் பெத்துசாமி சார் ...
  நீங்க தொடர்ந்து எழுதுங்க ....

  --------------------------------------
  advt.
  தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
  http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 3. @ஆறுமுகம்
  //ரொம்ப நல்லா இருக்கு உங்கள் எழுத்து நடை//

  பாராட்டுக்கு நன்றி ஆறுமுகம் சார்.

  பதிலளிநீக்கு
 4. @நியோ

  வருகைக்கு நன்றி.

  //பயபுள்ள கடுப்பேத்துரானுக....//
  யெஸ் யுவர் ஆனர்.

  பதிலளிநீக்கு
 5. ஹா ஹா... சொன்னா நம்ப மாட்டீங்க. எனக்கும் இதே அனுபவம் இருக்கு அண்ணே. ம்ம்.. என்னத்த சொல்ல? உங்கள் எழுத்துநடை அருமை. :-)

  பதிலளிநீக்கு