புதன், ஏப்ரல் 23, 2008

பாய் கடை திண்ணை (5)

பாய் ஒரு கடுமையான உழைப்பாளி. நானோ படுசோம்பேறி.

ஜெராக்ஸ் போடுதல், இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்றல், சுருட்டு சுற்றுதல், டி.வி. டெக் வாடகைக்கு விடுதல் போன்ற பலவேலைகளை பாய் செய்துவந்தார். அவரை நான் “முதலாளி” என்று அழைப்பது வழக்கம். அவரும் பதிலுக்கு என்னை “முதலாளி” என்று அழைப்பார். காரணம், நான் ”கணினி கல்வி நிறுவனம்” ஒன்றை பாய் கடை அருகில் நடத்தி வந்தேன். நிறுவனம் என்றால், எதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இரண்டு இற்றுப் போன பழைய கணினிகள் மூலம், என்னுடைய கிராமத்து மக்களுக்கு தகவல்- தொழில் நுட்பம் போதித்து, அவர்களுக்கு கணினி பற்றிய விழிப்புணர்வை உசுப்பி வந்தேன் என்று சொன்னால், என் கிராம மக்களின் (அதோ) கதியை உங்களால் ஐயம் திரிபற உணர முடியும். நானும் என்னிடம் அகப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு, பெயிண்ட் பிரஸும், எம்-எஸ் வேர்ட்ம் பயிற்றுவித்து, என் கணினி அறிவைப் பெருக்கிக் கொண்டேன்.

“மொதலாளி, ஒரு பய கூட எங்கிட்ட வந்து படிக்கமாட்டேங்கிறானே, என்ன காரணம்?”

”கம்ப்யூட்டர் சென்டர ஏரக் கட்டிட்டு, சென்னைக்கு போங்க மொதலாளி, இல்லைனா இப்படியே என் வீட்டு திண்ணைய தேய்க்கவேண்டியதுதான்”.

என் விஷயத்தில், பாய் - தன் மனதில் தோன்றியதை பட்டென்று போட்டு உடைத்து விடக்கூடியவர். நானும் அவரும் அவ்வளவு நெருக்கமாக இருந்தோம்.

”ஒழுங்கு மரியாதையா சென்னைக்கு போய் ஒரு வேலைய வாங்கி, வாழ்க்கையில செட்டில் ஆகிற வழியை பாருங்க. அப்போதான், நீங்க உருப்படுவீங்க”...

”மொதலாளி, நான் சென்னைக்கு போய்ட்டா, அப்புறம் நம்ம ஊர் மக்களின் கதி?”

பாய் என்னைப் பார்த்து, லேசாக நகைத்தார். பிறகு சொன்னார்.

“புத்திசாலிக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. முட்டாளுக்கு, அறிவுரை சொல்லி பிரயோஜனமில்லை.”

அதற்குப் பிறகு, நான் எதுவும் பேசவில்லை.

அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு ஆசாமி, பாய் கடைக்கு வந்தான். பாய் அவனைப் பார்த்துக் கேட்டார்.“என்னப்பா? டிவி. டெக். வாங்கிக்கிட்டு போனியே, திருப்பி கொண்டுவந்திட்டியா?”

ஒரு கணம் திகைத்த அந்த ஆள் சொன்னான்.

“கொண்டு வந்திட்டேங்க.. நீங்க உங்க அப்பாவ கூப்பிடுங்க..நான் அவர்கிட்ட தான் வாங்கிக்கிட்டு போனேன். அவர்கிட்டயே திருப்பி கொடுத்திடுறன்”...

பாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“எங்க அப்பாவ பாக்கணுன்னா, நீ மேல தான் போகணும், அவர் செத்து 10 வருஷம் ஆச்சி....”

திரும்பி என்னைப் பார்த்து சொன்னார்.

“அதுக்குத்தான், நான் 'டை' அடிக்க மாட்டேன்னு சொன்னேன், இப்போ பாருங்க”....

இரண்டு பேரும், வாய் விட்டு சத்தமாக சிரித்தோம்.

வந்தவனைப் பார்த்து சொன்னேன். “ ஹலோ, இவர்தாங்க பாய். ‘டை' அடிச்சிருக்கிறதனால உங்களுக்கு அடையாளம் தெரியல...”

அவனும் சிரித்துவிட்டான்.....

பாயுடன் பொழுதைக் கழிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. வயது பேதமில்லாமல், எல்லோருடனும், நகைச்சுவையுடன் பேசுவார். மாலை வேலையில், அவர் கடையின் திண்ணை இளைஞர்களால் நிரம்பி வழியும். பாயும், சுருட்டு சுற்றிக்கொண்டே, எல்லோருடனும் கதை பேசுவார்.

அன்றைய தினம், மகிழ்ச்சியாய் கழிந்தது.

(தொடரும்)