வெள்ளி, மே 02, 2008

பாய் கடை திண்ணை (7)


பாய் கடைக்கு அருகில்தான் என்னுடைய அண்ணன் ரெங்கநாதனின் ”கணினி அச்சகம்” இருந்தது. அங்கே, தாண்டவன், நடராஜ், அன்பழகன், வெங்கடேஷ் ஆகியோர் வேலை செய்து வந்தார்கள். இதில் தாண்டவன் தவிர, மீதி எல்லோரும் விடலைப் பயல்கள்.
தாண்டவனுக்கு வயது 48 இருக்கும். அவருக்கு காது கேட்காது. பிறவியிலிருந்து அப்படி அல்ல. தாண்டவன் 9ஆம் வகுப்பு படிக்கும்போது, அவருக்கு காது வலி வந்திருக்கிறது. அவருடைய அம்மா, எருக்கம் இலையை, விளக்கெண்ணையில் விட்டு, காய்ச்சி, அதை அவரின் காதில் ஊற்றி இருக்கிறார். அடுத்த நாள் பள்ளியின் சார்பாக, அருகிலிருக்கும் புளியஞ்சோலைக்கு எல்லோரும் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அங்கே, தனது செவியொலித்திறனை இழந்ததாக அடிக்கடி தாண்டவன் நினைவுகூர்வார்.
தாண்டவனுக்கு ஆழ்ந்த தமிழறிவு உண்டு. நொடிப்பொழுதில் கவிதை எழுதுவார். ஊரில் ஏதாவது கோயில் திருவிழா வந்தால், என் அண்ணனின் அச்சகத்தில் தான் நோட்டீஸ் அடிக்க வருவார்கள். தாண்டவனிடம் விஷயத்தை சொன்னால் போதும். அடுத்த அரை மணி நேரத்தில் நோட்டீஸ் வாசகங்கள் தயாராகிவிடும்.விநாயகர் துதியில் ஆரம்பிப்பார்.
”ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்திரன் இளம்பிறைபோலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தனை
புந்தியில் வைத்தடி போற்றுகிறேனே.....”
இது போல பல பாடல்கள் இவருக்கு அநாசயம். கதை, கவிதை, நகைச்சுவை என்று பல விஷயங்களை பத்திரிகைகளுக்கு அனுப்பி சன்மானம் பெறுவார்.
அன்று, நான் பாய் கடையில் அமர்ந்திருந்தபோது, நடராஜ் வந்து, “தாண்டவன் உங்களைப் கூப்புடுறார்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
நான், அச்சகத்திற்குள் நுழைந்தேன். அங்கே, கணினி அறையில் என் அண்ணன், “பேஜ் மேக்கரில்” ஏதோ ஒரு மேட்டரை தட்டச்சு செய்துகொண்டிருந்தார். தாண்டவன் ஒரு பெஞ்சில் கையில் பேனா, பேப்பருடன் அமர்ந்திருந்தார். நான் உள்ளே நுழைந்ததைப் பார்த்த தாண்டவன், “ஏய், இங்க வாடா” என்றார்.
“என்னய்யா?” என்றேன் சைகையில்.
“அதாகப்பட்டது, கவிதை எப்படி எழுதணும்னு கேட்டியே, இங்க ஒக்காரு சொல்லித்தரேன்.”
நானும் பெஞ்சில் அமர்ந்தேன்.
“வெண்பா. இது ஒரு செய்யுள் வகை. இதோட இலக்கணம் என்ன தெரியுமா? அதாகப்பட்டது, ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி, வேற்றுத்தளைகள் விரவாமல், ஈற்றுச்சீர் ஈற்றடி “நாள், மலர், காசு, பிறப்பு” என்னும் அலகிடும் வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடியும்.”
அவரைப் பார்த்து, கையெடுத்துக் கும்பிட்டேன்.
“எனக்கு செய்யுள் எல்லாம் வேணாம். புதுக் கவிதை சொல்லி கொடு”...சைகையில் சொன்னேன்.
சைக்கிள் டயரின், வால் டியூபை பிடுங்கி விட்டது போல் சிரித்தார்.
”ஆஹா.. இந்த ஆள் மறுபடியும் காத்தப் புடுங்கி வுட்டுட்டான்யா” என்று சலித்துக் கொண்டான், ஆஃப்செட் மெஷினில் வேலை செய்துகொண்டிருந்த நடராஜன்.
”ஆய்.. இந்த புதுக் கவிதை ரொம்ப சுலபம்டா... இப்பப் பாரு..”
“ஏழைக்குப் பசிக்கவில்லை.
ஒருவேளை சாப்பாடு
மிச்சமென்று
சந்தோசப்பட்டான்.
பணக்காரனுக்குப் பசிக்கவில்லை.
வயிற்றுக் கோளாறென்று
வைத்தியரிடம் சொல்லி
வருத்தப்பட்டான்.”
அசந்து போய் கேட்டேன். ”யோவ்..எப்படியா இப்படி எல்லாம் கவிதை எழுதற?”
"வீட்டுல இருந்து வரும்போது, எங்கேயாவது சலூன்ல இருந்தப் பத்திரிகையில, படிச்சிட்டு வந்திருப்பாரு”, என்றான் நடராஜ் நக்கலாக.
சிரித்துவிட்டேன். தாண்டவன் என்னைப் பார்த்துவிட்டு, நடராஜனைப் பார்த்தார். பிறகு என்னிடம் கேட்டார்.
“ஆய். கவுறு (கயிறு) என்னடா சொல்றான்?”.
(கவுறு - பெயர்க் காரணத்தை நான் இங்கே சொல்ல முடியாது. ஷேம் ஷேம்.. பப்பி ஷேம்...)
“கவிதை சூப்பர்னு சொல்றான்”... மீண்டும் கைசாடை காட்டினேன்...
“அதான பாத்தேன்... காப்பி அடிச்ச கவிதைனு சொல்வான்னு நெனச்சேன்.”
நான் நடராஜைப் பார்த்தேன்.. அவன் கண்கள் சிரித்தன. நானும் அப்படியே செய்தேன்..
(தொடரும்)


1 கருத்து: