வெள்ளி, பிப்ரவரி 26, 2010

சாமியார் (போலி அல்ல!)

       சரவணன் ஜீ, எல்லோரையும் “ஜீ” என்றுதான் அழைப்பார். அப்போதெல்லாம் நான் ஹிந்தி எதிர்ப்புக்கொள்கை எதையும் கடைபிடிக்காததால், நானும் அவரை “ஜீ” என்று தான் அழைப்பேன். ஒட்டுமொத்த வகுப்புமே அவரை “ஜீ” என்றுதான் அழைக்கும்.


                                                   
                                        (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

ஜீ அவர்கள், ரஜினி-கமல் இருவருக்குமே பரம ரசிகர். இருவரில் நான் யாரைக்குறை சொன்னாலும் ஜீ க்கு கோபம் வந்துவிடும். கல்லூரி படித்த காலத்தில் நான் விஜயகாந்த் ரசிகனாக இருந்தேன். (இப்போது நான் ரசிப்பது என்னை மட்டுமே). இந்த விஷயத்தை நான் ஜீயிடம் சொன்னபோது, அவர் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. அதேபோல், ஜீ - இளையராஜாவின் பரம வெறியர். அதேசமயம் ஏ.ஆர்.ரஹமான் என்றால் எரிந்து விழுவார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமாகிக்கொண்டிருந்தார். ஜீ அவர்கள் ஹாஸ்டல் அறைகளைக் கடந்து செல்லும்போது எதாவது ஒரு ரூமில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால், அவர் அதற்குப்பின் அந்த அறை நண்பர்களிடம் நட்பு வைத்துக்கொள்ளமாட்டார்.


ஒருமுறை நான் நண்பர் எல்.எஸ்.செந்தில்குமாரின் அறையில், பம்பாய் திரைப்படப்பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த அறைக்கு வந்த ஜீயின் முகம் என்னைப் பார்த்ததும் சட்டென மாறியது. எனக்கு எதுவும் புரியவில்லை. “என்ன ஜீ நீங்க கூட இப்படியா?” என்றார் என்னிடம். “என்ன சொல்றீங்க?” என்றேன். “என்ன ஜீ, இவன் பாட்டையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கீங்க” என்றார். எனக்குப் புரிந்துவிட்டது. நான் நைஸாக ஜகா வாங்கினேன். “ஜீ, ஏ.ஆர். எப்படி அடிச்சிருக்கான்னு பாக்கத்தான், இந்தப்பாட்டைக் கேட்டுக்கிட்டிருக்கேன்” என்றேன். சமாதானமாகிவிட்டார்.


ஒரு நாள் ஜீ எல்லோரையும் அவரின் அறைக்கு அழைத்தார். அங்கே, அவரின் டேப்-ரெக்கார்டரில், இளையராஜா இசை அமைத்த “அவதாரம்” படத்தின் கேசட்டைப் போட்டார். “அரிதாரத்தைப் பூசிக்கொள்ள ஆச...” - பாட்டைக்கேட்டதும், ஜீயின் முகம் பூரிப்பானது. பெருமிதம் மிகுந்த முகத்துடன் அவர் எல்லோரையும் பார்த்தார். அப்போது எல்.எஸ். செந்தில்குமார் சொன்னான். “ஏண்டா, இந்தப்பாட்டைக்கேட்டா ஒப்பாரி மாதிரி இருக்குது இல்ல”. ஜீயின் முகம் கடுகடுத்தது. “இங்கபாரு, புடிச்சிருந்தா கேளு. இல்லைன்னா போயிடு”. எல்.எஸ்.செந்தில் போய்விட்டான் (அவன் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகன்).


தொடர்ந்து அதே பாடலில் ஜானகி ஒருவரியைப் பாடினார்..

“பாட்டுன்னு நெனைப்பதெல்லாம், இங்கு பாட்டாக இருப்பதில்ல....” - அதைத் தொடர்ந்து இளையாராஜா சொல்லுவார். “அது எம் பாட்டில்ல”...

உற்சாக மிகுதியில் ஜீ கைதட்டி என்னிடம் சொன்னார். “பாத்தீங்களா ஜீ, தலைவர் “அது எம் பாட்டில்ல”ன்னு சொல்றார். யாரைத் திட்டுறார்னு தெரியுதா?”... நான் தலையாட்டினேன்.

தற்சமயம், அமெரிக்காவில் வாழும் ஜீ யிடம் பேசியபோது, அவர் இன்னமும் இளையராஜாவின் ரசிகராகத்தான் இருக்கிறார் என்பது தெரிந்தது. அது மட்டுமல்லாமல், அவர் சில தமிழ்த்திரைப்படங்களை அமெரிக்க தியேட்டர்களுக்கு விநியோகம் செய்து சம்பாதித்தும், கைகளைச் சுட்டுக்கொண்டுமிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

ஒரு முறை எங்கள் மகாத்மா காந்தி விடுதியிலிருக்கும் வற்றாத கிணறு, கோடையில் வற்றியபோது, நாங்கள் எல்லோரும் குளிப்பதற்காக அருகிலிருக்கும் வேறு கிணறுகளுக்கு சென்றதுண்டு. அப்போது ஒருமுறை, நீச்சல் தெரியாத ஜீ கால் வழுக்கி, கிணற்றில் விழுந்துவிட்டார். அப்போது அவரைக் காப்பாற்றி கரை சேர்த்தது இளவரசன். (அவர் எப்படி இளவரசனால் காப்பாற்றப்பட்டார் என்பதை பிறிதொரு சமயம் சொல்கிறேன்). அதன்பிறகு, சில சமயம் தூக்கத்தில் கிணற்றில் மூழ்குவது போல் கனவு கண்டு, கத்திக்கொண்டு எழுதுவார்.


இவருக்கு சாமியார் என்று பெயர் எப்படி வந்ததென்றால், இவர் பெண்களை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டார். (என்னைப்போலவே).அதனால் தான், இருவருக்குமே இரண்டு பெண் குழந்தைகள்.


நாளை இடம்பெற இருப்பவர் “ரூமர்” செல்வகுமார்.இவருக்கு “சாணக்கியன்” என்றப் பட்டபெயரும் உண்டு.

2 கருத்துகள்:

  1. Kinathil vizhuntha pothu Gee mottai pottu irunthaar. Antha velichathil prince kapathunaan. :-)
    -Gandhi

    பதிலளிநீக்கு
  2. இந்தியா டுடே காந்தி சார், நான் கூட அவர் மொட்டை போட்டிருந்த மேட்டரை மறந்தே போயிட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி

    பதிலளிநீக்கு