புதன், மே 05, 2010

ஜெயகாந்தன் என்னும் அற்புத ஆளுமை

அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறை காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களை கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும் எருக்கம் புதர்களும் தெரியும். சத்திரத்துக்கு எதிரே அதாவது சாலையின் மறுபுறத்தில் நான்கு புறமும் படித்துறையுள்ள ஆழமில்லாத குளம்; குளத்திற்கு அப்பாலும், குளத்தைச் சுற்றிலும் செழிப்பான நஞ்சை நிலப்பகுதி, வரப்பினூடே நடந்து ஏறினால், சற்றுத் தூரத்தில் லைன் மேட்டுப் பகுதி. ரயில்வே லைனுக்கு மறுபுறம் - ‘இந்தப் பக்கம் செழித்துத் தலையாட்டிக் கொண்டிருக்கும் பயிர்களை வளர்த்ததன் பெருமை என்னுடையதுதான்’ என்று அலையடித்துச் சிலு சிலுக்கும் ஏரி நீர்ப்பரப்பு கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து கிடக்கிறது.

அதற்கப்புறம் ஒன்றுமில்லை. வெறும் தண்ணீர்தான்; தண்ணீர் பரப்பின் கடைக்கோடியில் வானம்தான். தண்ணீரும் வானமும் தொட்டுக்கொண்டிருக்கிற இடத்தில் நிலவின் பெருவட்டம் மங்கிய ஒளியை ஏரிநீரில் கரைத்து மிதந்து கொண்டிருக்கிறது.. நிலவு மேலே ஏற ஏற அதன் உருவம் குறுகிச் சிறுத்தது; ஒளி பெருகிப் பிரகாசித்தது. ஒரு கோடியில் எழுந்து, ரயில்வே லைன் மேட்டின் மேலேறிய நிலவு வீசிய வெளிச்சம், மறுகோடியில், சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து உணவருந்திக்கொண்டிருந்த அந்த வியாதிக்காரப் பிச்சைக்காரனின் புத்தம் புதிய தகரக் குவளையின் மீது பட்டுப் பளபளக்க, அதன் பிரதிபிம்பம் அவன் முகத்தில் விழுந்தது.

மேற்கண்டவை ஜெயகாந்தனின் ‘நான் இருக்கிறேன்’ என்னும் சிறுகதையின் முதலிரண்டுப் பத்திகள். இந்தப் பத்திகளை நான் பலமுறைப் படித்து, கற்பனை செய்து எழுச்சியுற்றிருக்கிறேன். ஒரு கதைக்கான களத்தை இதைவிட வேறு யாரும் எளிதாக விளக்க முடியாது என்பது என் எண்ணம்.

எனக்கு ஜே.கே.வின் கதைகளைக்காட்டிலும், அவர் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை விரும்பிப் படிப்பேன். அதனால் தான், அவர் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்” மற்றும் “ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” நூல்கள் எனக்கு என்றும் பிடித்தமானவை.
 
                                                        
                                          

ஞானத்திற்கு பீடம் எதற்கு?

தனக்கு ஞானபீட பரிசு அளிக்கப்படுவதைப் பற்றி கேள்விப்பட்டவுடன், திரு.ஜெயகாந்தன் அவர்கள் சொன்ன கருத்து தான், மேற்கண்ட வரி.

எழுத்தாளர் ஜெயகாந்தனை அறியாத 'தமிழ் வாசகர்கள்' மிகவும் அரிதாகத் தான் இருப்பார்கள்.தான் எழுதிய கதைகளை விட, தன்னுடைய 'முன்கோப' பேச்சுகளின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜே.கே. 'வாழ்க்கை அழைக்கிறது' என்னும் நாவல் தான், இவரின் முதல் படைப்பு. ஏறத்தாழ, பெரும்பாலான புதிய எழுத்தாளர்களைப் போலவே, இவரின் முதல் கதையும், அவரின் சொந்த வாழ்க்கைக் கதையேயாகும்.'யாருக்காக அழுதான்' என்ற நெடுங்கதை, இவருக்கு சிறந்தப் புகழைத் தேடித்தந்தது. இதை திரைப் படமாக்க, பலர் முயன்றனர். அதில், நடிகர் 'சந்திர பாபு'வும் ஒருவர். சினிமாவுக்காக கதையின் முடிவை மாற்றி அமைக்க முடிவு செய்த இயக்குனர் (பெயர் ஞாபகமில்லை) அதை ஜே.கே விடம் சொன்னார்.

ஜே.கே. எழுதியக் கதைப்படி, எதற்குமே அழாத நாயகன் சோசப், தான் குற்றமற்றவன் என்பது நிரூபணம் ஆனதும், வாய் விட்டு கதறி அழுவான். அத்துடன் கதை முடிந்துவிடும். ஆனால், சினிமாவாக எடுக்கும் போது, நாயகன் அழுது கொண்டே இறந்து விடுவதாகக் காட்டினால், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்த முடியும் என்று இயக்குனர் விரும்பினார்.

இவ்வாறு கதையின் முடிவை மாற்றிக் கொள்ளலாமா? என்று ஜே.கே. விடம் கேட்டார் அந்த இயக்குனர். 'ஓ, மாற்றிக் கொள்ளுங்கள். கூடவே ஒரு சின்ன திருத்தமும் செய்து விடுங்கள்.' என்று சொன்ன ஜே.கே. 'படத்தின் தலைப்பான ’யாருக்காக அழுதான்’ என்பதை 'யாருக்காக செத்தான்' என்று மாற்றுங்கள். மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்று கடுங்கோபத்துடன் கூற, அதிர்ந்து போன இயக்குனர், துரிதமாக நடையைக் கட்டிவிட்டார்.

ஜே.கே.வின் பெரும்பாலான கதைகள், முரட்டு மனிதர்களின் 'மென்மையான மனம்' குறித்தே அமைந்துள்ளது. சினிமாத் தனமான கதாபாத்திரங்கள், கதைக்களம், முடிவு என எழுதப்பட்ட இவரின் கதைகள், பெரும்பாலும் 'சென்டிமென்ட் டைப்' களே என்பது சில இலக்கியவாதிகளின் கருத்து. தனது இளம் வயதில் (ஏன், இப்போதும் கூட!) தன் மனதுக்குப் பட்ட விஷயங்களை, வெளிப்படையாக பேசி விடுவார் ஜெயகாந்தன். சம்மந்தப்பட்டவர்களை இது பாதிக்கும் என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்.

ஒரு முறை, தன் நண்பர்களுடன் ஒரு மதுக் கடையில் அமர்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தார் ஜே.கே. அப்போது, நண்பர்களில் ஒருவர், அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு மேடை நாடக கலைஞரைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். "அடடா! என்ன அற்புதமான நடிகர். தன்னை அந்த கதா பாத்திரமாகவே மாற்றிக் கொள்பவர். ஒரு முறை, காந்தியாக நடிக்கும்போது, உண்மையில் மொட்டை அடித்துக் கொண்டார். என்ன ஒரு தொழில் பக்தி.."

இதைக் கேட்டதும் ஜெயகாந்தன் இவ்வாறு சொன்னார்.

"அப்படியா! அப்படி என்றால், "ஷேக் சின்ன மெளலானா" வேஷம் கட்டினால், உண்மையில் 'சுன்னத்' செய்து கொள்வாரா?"
 
நான் பிறப்பதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திக்கொண்ட இந்தக் கிழட்டுச் சிங்கம் தான் என் ஆதர்ச எழுத்தாளர்.

12 கருத்துகள்:

  1. தமிழின் கம்பீரத்தை தன் எழுத்துக்கள் மூலம்
    பிரகடனம் செய்தவர் ஜெயகாந்தன். தனது முன்னுரைகள் மூலம் அன்றைய கபடதாரிகளை
    அம்பலப்படுத்திய அவரின் சில `பஞ்ச்’சுகள்..

    `ஒவ்வொரு அவளுக்கும் ஒவ்வொரு மணமுண்டு.
    அது ஒவ்வொரு அவனுக்கு மட்டுமே தெரியும்!’

    `ஒரு அணுகுண்டைவிட புத்தகம் அதிக சக்தி கொண்டது.. எப்படியென்றால், அணுகுண்டு ஒரு முறைதான் வெடிக்கும். ஆனால் புத்தகமோ அதை
    புரட்டும் போதெல்லாம் வெடிக்கும்!’
    - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் எழுதிய அனைத்தும் முத்துக்கள்!

    சென்ற ஆண்டு சென்னையில் ஒரு விழாவில்
    அவரை பார்த்தேன். வயோதிகம் காரணமாக
    உடல் தளர்ந்து இருந்தார். எப்படி இருந்தாலும்
    சிங்கம் சிங்கம்தானே!

    பதிலளிநீக்கு
  2. //ஒவ்வொரு அவளுக்கும் ஒவ்வொரு மணமுண்டு.
    அது ஒவ்வொரு அவனுக்கு மட்டுமே தெரியும்!’

    `ஒரு அணுகுண்டைவிட புத்தகம் அதிக சக்தி கொண்டது.. எப்படியென்றால், அணுகுண்டு ஒரு முறைதான் வெடிக்கும். ஆனால் புத்தகமோ அதை
    புரட்டும் போதெல்லாம் வெடிக்கும்!’
    //

    அற்புதமாகச் சொன்னீர்கள். வருகைக்கு நன்றி. என்னைக்காட்டிலும் நீங்கள் ஜெயகாந்தனை நிறையப் படித்திருக்கக்கூடும். விரிவாக உங்கள் தளத்திலும் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா!ஜெயகாந்தன் வரிகள்!

    ஆடின கால்!பாடின வாய்! உவமைகள் பொய்த்துப் போய் விட்டது ஜெயகாந்தனைப் பொறுத்த வரையில்.இன்னும் எழுத்தை வழங்கியிருந்திருக்கலாம்.

    சோவியத் சறுக்கல்,ஞானபீட முறுக்கல் இரண்டுமே ஜெயகாந்தனைப் பொறுத்த வரையில் கரும்புள்ளிகள்.

    நீங்கள் சொல்வது மாதிரி ஜெயகாந்தன் மேடைப்பேச்சால் பிரபலமாகவில்லையென நினைக்கிறேன்.தமிழக முதல்வர் சினிமாவுக்குப் போன சித்தாளுன்னு எம்.ஜி.ஆர்க்கு சூனியம் வைக்க நினைச்சும் கூட நடக்கவில்லையென்பது தமிழக வரலாறு.

    ஜெயகாந்தனின் எழுத்தின் தனித்துவமும் சராசரி வாழ்க்கையின் எழுத்தே அவரை முன்னிறுத்தியது.

    பதிலளிநீக்கு
  4. அவரது கடைசியாக வெளிவந்த நூல், "ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்"- வெளிவந்த ஆண்டு 2007.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ராஜ நடராஜன் அவர்களே

    பதிலளிநீக்கு
  6. //அவரது கடைசியாக வெளிவந்த நூல், "ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்"- வெளிவந்த ஆண்டு 2007//

    //நான் பிறப்பதற்கு முன்பே எழுதுவதை நிறுத்திக்கொண்ட// என்ற இந்த வரிகளை நான் திரும்பப் பெறுகிறேன்.

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி டாக்டர் அய்யா.

    பதிலளிநீக்கு
  7. ஆனால் கடந்த 1 வருடங்களாக (அ)சிங்கமாகி விட்டதை தாங்கள் எப்படி மறந்துபோனீர்கள். கண்ணதாசனும்,ஜெயகாந்தனும் கருணாநிதியை விமர்சித்தது போல் யாரும் விமர்சித்தது கிடையாது, வயோதிக வறுமையின் காரணமாக தற்போது கருணாநிதி ஜால்ரா அடித்து பரிசில் பெறும் நிலைக்கு ஆளாகி விட்டாரே நமது (அ) சிங்கம். இந்த முடிவை இவர் வாலிபத்தில் எடுத்திருந்தால் வைரமுத்து போல் மிகவும் வசதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்ன செய்ய காலம் கடந்த யோசனை
    வேதனையுடன், அவர் மீது சொல்லொணத சோகத்துடன்
    துர்வாசர்,தம்மம்பட்டி
    http://thurvasar.blogspot.com

    பதிலளிநீக்கு
  8. வயோதிகம் மிகக் கொடுமையானது. உடம்பில் முறுக்கு இருக்கும் வரைதான் வீராப்பு எல்லாம். இது எல்லோருக்குமே பொருந்தும் (உங்களுக்கும்தான்). மரணபயம் காரணமாக இறைவனை நம்ப ஆரம்பித்துவிட்ட அப்துல்லாவும் தன் கொள்கைகளை மாற்றிக்கொண்டுவிட்டார். நிற்க, இந்த உலகில் யாருக்கும், யாரும் நிரந்தர எதிரி கிடையாது.

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  9. எழுத்தாளர் வேறு எழுத்துக்கள் வேறு என்னால் பார்க்க இயலவில்லை, எழுத்துக்களின் வழியாக தான் எழுத்தாளரை பற்றிய உருவகப்படுத்தி உள்ளேன். அவரின் பிம்பம் முழுமையாக என்னைப் பொறுத்தவரை கட்டவிழ்ந்து விட்டது. வயதானாலும் சிங்கம் சிங்கமாகத் தான் இருக்க வேண்டும். அசிங்கமாகி விட கூடாது , என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த ஞானோதயத்தை இவர் முன்பே எடுத்திருந்தால் வயதான காலத்தில் இப்படி விமர்சனத்திற்கு ஆளாக வேண்டாம், வசதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்பது தான்
    துர்வ

    பதிலளிநீக்கு
  10. யானைக்கும் அடிசறுக்கும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பாணியில் சொன்னால் டயனோசருக்கும் அடிசறுக்கும் (நன்றி: சிம்புத்தேவன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்)

    பதிலளிநீக்கு
  11. திரு.பெத்துசாமி ,,
    பத்து வருடம் இருக்கும் உங்களை பற்றிய தவகல்கள் கிடைத்து.
    தமிழிஷ் இனைய தளத்தில் உங்கள் ப்ளாக் ஐ பார்த்த போது மிகுந்த சந்தோசம் அடைந்தேன்.
    மேற்கொண்டு நிறைய எழுதுங்கள்.
    நானும் தம்பிகளும் சென்னைலதான் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. //கருணாநிதி ஜால்ரா அடித்து பரிசில் பெறும் நிலைக்கு ஆளாகி விட்டாரே// தவறான கருத்து அவர் எவருக்கும் ஜால்ரா அடித்தது கிடையாது. அவரது ஞான பீட விருதுக்கான பாராட்டு விழாவில் பேசியதை தாங்கள் பார்த்தால் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். அவர் எவருக்கும் ஜால்ரா அடித்ததும் இல்லை பகைமை பாராட்டியதும் இல்லை. தனது கருத்தை தெளிவாக அவர் கூறிவிட்டார். அவர் போன்ற ஞான செருக்குடையவரை பார்ப்பது அரிது. நீங்கள் அவரது பாராட்டு விழாவின் கானெழியை பார்த்து விட்டு அதன் பிறகு உங்கள் கருத்தைக் கூறுங்கள்..
    http://www.youtube.com/watch?v=de5yGIb0rNA&feature=plcp

    பதிலளிநீக்கு